PM kisan திட்டத்தின் விவசாய பயனாளிகள் அடுத்த தவணையினை பெற e-KYC செய்திட வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 2144 விவசாயிகள் e-KYC மேற்கொள்ளவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன்கார் பருவத்தில் நெல் 870 ஹெக்டேர் பரப்பிலும், கார் பருவத்தில் 3131 ஹெக்டேர் பரப்பிலும் மற்றும் பிசான பருவத்தில் நெல் 37 ஹெக்டேர் பரப்பிலும், 854 ஹெக்டேர் பரப்பில் மக்காச்சோளம், சோளம் மற்றும் கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும், 4275 ஹெக்டேர் பரப்பில் பயறுவகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 441 ஹெக்டேர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் இதுவரை 4206 ஹெக்டேர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அக்ரிகல்சுரல் இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் நெல் II (சிறப்பு பருவம்) மக்காசோளம், உளுந்து, பாசிப்பயறு, வாழை மற்றும் வெண்டை ஆகிய பயிர்களுக்கு பதிவு செய்திட அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 25154 விவசாயிகள் உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். மக்காசோள பயிறுக்கு இதுவரை 346 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் 30.12.2023-க்குள் பயிர் காப்பீடு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் பிசான பருவ நெல்லுக்கு இதுவரை 238 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். எஞ்சியுள்ள விவசாயிகள் தங்களது நெற்பயிர்களுக்கு உரிய பிரீமியம் தொகையினை தொடர்புடைய தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 15.12.2023-க்குள் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நடப்பு ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் நடப்பு ஆண்டில் மாற்றுப் பயிர் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1825 ஹெக்டேர் பரப்பில் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ( PM kisan) 32,582 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் இதுவரை 2,656 விவசாயிகளுக்கு கைப்பேசி செயலி மூலமாக வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை களப் பணியாளர்கள் கொண்டு e-KYC பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 2,144 விவசாய பயனாளிகளுக்கு e-KYC செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற விவசாயிகள் தங்களின் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணை வங்கி கணக்கு உடன் இணைத்து e-KYC செய்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர இந்த நிதியாண்டில் 22.11.2023 வரை ரூ.231.63 கோடி விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி கடன் உதவி கிடைக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் காண்க:
வேளாண் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் காலிப்பணியிடம்- முழு விவரம் காண்க
Share your comments