விவசாயிகளுக்கு 40% மானியத்தில், 292 மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கல்

Deiva Bindhiya
Deiva Bindhiya
விவசாயிகளுக்கு 40% மானியத்தில், 292 மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கல்
Supply of 292 value adding machines to farmers at 40% subsidy

வேளாண் பெருமக்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்றால், அவ்விளைப்பொருட்களை நன்கு சுத்தம் செய்து, மதிப்புக்கூட்டுவது அவசியமாகும்.

சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் தரும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கு முன்வருவதில்லை. எனவே, பல்வேறு மதிப்புக்கூட்டும் இயந்திரங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறது.

மானியத்தில் மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள்

நடப்பு 2022-23 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், இதர வேளாண் விளைபொருட்களை தரம் பிரித்து, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தி அதிக லாபம் பெறும் வகையில், 292 மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

என்னென்ன மதிப்புக்கூட்டும் இயந்திரங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது?

பருப்பு உடைத்தல், தானியம் அரைத்தல், மாவரைத்தல், கால்நடை தீவனம் அரைத்தல், சிறிய வகை நெல் அரவை இயந்திரம், நெல் உமி நீக்குதல், கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்குதல், தேங்காய் மட்டை உரித்தல், செடியிலிருந்து நிலக்கடலையை பிரித்தெடுத்தல், நிலக்கடலை தோல் உடைத்து தரம் பிரித்தல், மிளகாய் பொடியாக்குதல், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம், பாக்கு உடைத்தல், பருத்தி பறித்தல், தேயிலை பறித்தல், வெங்காயத் தாளிகளை நீக்குதல் போன்ற மதிப்புக்கூட்டும் பணிகளை மேற்கொளிவதற்கான இயந்திரங்களுக்கு மானியம் வழங்கப்படும்.

மதிப்புக்கூட்டும் இயந்திரங்களுக்கு எவ்வளவு மானியம்?

மதிப்புக்கூட்டும் இயந்திரங்களுக்கு 40 சதவிகித மானியம் அல்லது ஒவ்வொரு இயந்திரத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்புத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின பிரிவினை சார்ந்த சிறு, குறு விவசாயிகளாக இருந்தால், கூடுதலாக 20 சதவிகித மானியம் அதாவது 60 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.

வங்கிக் கடன் பெற்றால் 3 சதவிகிதம் வட்டி தள்ளுபடி

இத்திட்டத்தில் மானியம் போக, மீதமுள்ள தொகைக்கு வங்கி மூலம் கடன் பெற விரும்பினால், ஒன்றிய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளாண் உட்கட்டமைப்பு நிதி (Agriculture Infrastructure Fund) திட்டத்தின் மூலம் மூன்று சதவிகித வட்டி தள்ளுபடியுடன் கடன் வசதியும் தமிழ்நாடு அரசினால் செய்து தரப்படும்.

மதிப்புக்கூட்டும் இயந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கான தகுதி

தனிப்பட்ட விவசாயிகள் தவிர, பாசனநீர் பயன்பாட்டு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில்முனைவோர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மதிப்புக்கூட்டும் இயந்திரத்தை இயக்குவதற்கு மும்முனை மின்சார இணைப்புடன், இயந்திரத்தை நிறுவுவதற்கு சொந்தமாக கட்டிடம் வைத்திருக்க வேண்டும். தனிப்பட்ட விவசாயியாக இருந்தால், சொந்த நிலம் இருக்க வேண்டும். இத்திட்டம் சென்னை நீங்கலாக அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

மதிப்புக்கூட்டும் இயந்திரத்தை மானியத்தில் பெற விரும்புவோர், மேலும் உழவன் செயலி மூலமாகவோ அல்லது http://aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையைச் சார்ந்த வட்டார உதவி பொறியாளர், உபகோட்ட உதவி செயற் பொறியாளர் அல்லது மாவட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்.

தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டையின் நகல், புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல், நிலம் சம்பந்தமான சிட்டா மற்றும் அடங்கல், குழுவாக இருக்கும் பட்சத்தில் அதன் பதிவு சான்றிதழின் நகல், சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் நகல், ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பினரை சார்ந்தவராயிருப்பின் அதற்கான சாதி சான்றிதழ் நகல்.

வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதுடன் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்பதால், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மேலும் படிக்க:

ஏற்றுமதி, விதை இருப்பு ஆகியவற்றை அதிகரிக்க உதவும் 3 புதிய கூட்டுறவு நிறுவனங்கள்

சுருக்குமடி வலையை பயன்படுத்திட உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

English Summary: Supply of 292 value adding machines to farmers at 40% subsidy Published on: 25 January 2023, 03:18 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.