சேலம் மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவர்கள் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2023-2024ம் ஆண்டு சட்ட மன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையில் 05.04.2023 அன்று உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடி திறனை மேம்படுத்தவும், அவர்களின் வருவாயினை பெருக்கிட ஏதுவாக, உள்நாட்டு மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியத்தில் மீன்பிடி உபகரணங்களான வலைகள் மற்றும் பரிசல்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மீன்பிடி வலைகள் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20,000/-ல் 50% மானியமாக ரூ.10,000/- மற்றும் மீன்பிடி பரிசல் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20,000/-ல் 50% மானியமாக ரூ.10,000/ வழங்கப்படும்.
மேலும் படிக்க: தீவனப்பயிர்கள் சாகுபடி மற்றும் உயர் தொழில்நுட்பங்கள் குறித்து இலவசப் பயிற்சி
இத்திட்டத்தில் யார் பயன்பெற முடியாது?
இத்திட்டத்தின் வாயிலாக ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்குள் வலை மற்றும்
பரிசல்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் வாங்கும் வலை மற்றும் பரிசல்கள் உரிய ஆய்வுக்குப் பின்னரே மானியத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், கொளத்தூர் வழிச் சாலை, மேட்டூர் அணை பூங்கா எதிரில், மேட்டூர் அணை, சேலம் மாவட்டம் - 636401 என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை 25.08.2023-க்குள் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம்!
ஆகஸ்ட் 16 ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு: மக்கள் மகிழ்ச்சி!
Share your comments