தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், விவசாயிகள், பொதுமக்கள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை குறித்த அறிவிப்பினை நேற்று வெளியிட்டார்.
நடைமுறையில் வெள்ளப் பாதிப்பினால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகையினை அதிகரித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வர் அறிவித்த நிவாரணத்தொகை அறிவிப்பு முழு விவரம் பின்வருமாறு-
இந்த மழை, வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையினை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை,ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
அதேப்போல் மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 17 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகச் சேதமுற்றிருப்பின், இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, 22 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410 ரூபாயிலிருந்து, 8,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
33,000 ரூபாயாக இருந்த எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணத்தை 37,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், 3,000 ரூபாயாக இருந்த வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணத்தை 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட). 32,000 ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 15 ஆயிரம் ரூபாயாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து- ஒரு இலட்சம் ரூபாயாகவும் முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து- ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
Read more: பிஎம் கிசான்- ரூ.6000 பெற விவசாயிகளுக்கு சூப்பர் சான்ஸ்!
இதைப்போல், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு நிவாரணம் எவ்வளவு?
அதி கனமழையின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களுக்கும் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Read more:
ராகி கொள்முதல் தொடக்கம்- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
TNAU-வில் Agri PitchFest 2023 போட்டி: புதுமையான ஐடியாவுக்கு ரொக்கப் பரிசு
Share your comments