கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நடப்பாண்டில் (2024-2025) பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க பழந்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 50 ஏக்கர் பரப்பளவில் 1 ஏக்கருக்கு ரூ.3,000/- வீதம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
பசுந்தீவனப் பயிர் பயிரிடும் திட்டம்:
சொந்தமாக கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள் அவர்களது சொந்த நிலத்தில் பாசன வசதியுடன் (குறைந்தப்பட்சம் 0.5 ஏக்கர்) பராமரிக்கும்/வளர்க்கப்படும் தோட்டப்பயிர்கள்/பழத்தோட்டங்களில் இடையே ஊடு பயிராக தீவனப்பயிர் வளர்க்க வேண்டும்.
குறைந்தப்பட்சம் 3 ஆண்டுகளுக்கு வளர்த்திட விருப்பம் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நீர்பாசன வசதி/அடுத்தடுத்து பயிரிடுவதற்கு பாசன வசதி உடைய ஒரு நபர்களுக்கு 1 ஹெக்டர் வரை வழங்கப்படும். பசுமையான தீவனப்பயிர்கள் வளர்க்க விருப்பம் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைய தகுதியுடையவர் ஆவார்.
திட்டத்தில் யாருக்கு முன்னுரிமை?
சிறு,குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் குறிப்பாக திட்ட பயனாளிகளில் 30 சதவீதம் ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். நீர் பாதுகாப்பு நடவடிக்கையினை பின்பற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சொந்தமாக வைத்திருக்கும் கால்நடைகளுக்கு தேவையான தீவனப்பயிர் வழங்கி தேவைக்கு அதிகமாக உள்ள உபரி தீவனப்பயிர்களை நிலமற்ற கால்நடை வைத்திருக்கும் கால்நடை உரிமையாளருக்கு விற்பனை செய்ய விருப்பம் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க இறுதித்தேதி என்ன?
இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் எதிர்வரும் 15.07.2024 ஆம் தேதிக்குள் அதே கால்நடை மருந்தகத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
பயிர்காப்பீடு- மாவட்ட நிர்வாகம் செய்தி வெளியீடு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இவ்வாண்டில் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சொர்ணவாரி )-1 பயிருக்கு 31.07.2024 மற்றும் கம்பு பயிருக்கு 16.08.2024-ஆம் தேதி வரையில் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.651-ம், கம்பு பயிருக்கு ரூ.215-ம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இதற்கு தேவையான ஆவணங்கள், நடப்பு பருவ அடங்கல் (பசலி ஆண்டு 1434), சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவையாகும்.
Read more:
இராசாயன உரத்தினால் மெல்ல உயரும் வெப்பம்- கட்டுப்படுத்த விவசாயிகள் என்ன செய்யலாம்?
PM Kisan- விவசாயிகள் eKYC பதிவு செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு: முழு விவரம் காண்க?
Share your comments