சிறு, குறு விவசாமிகள் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைத்து, தண்ணீரை சேமித்து, வறட்சி காலங்களில் பயிறு வகைகளை பாதுகாத்திட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் (RKVY), ஒரு துளி அதிகப்பயிர் (Per Drop More Crop) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ.26.57 கோடி நிதி இலக்கு பெறப்பட்டு ரூ.19.47 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,781 எக்டர் பரப்பில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
பொய்த்துப்போன பருவமழை:
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மழையளவு 30 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதனால் வரும் காலத்தில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு, மரவள்ளி, மக்காச்சோளம் போன்ற நீண்ட காலபயிர்கள் வறட்சியினால் பாதிக்கப்படும். மேலும் உளுந்து, நிலக்கடலை, காய்கறி போன்ற குறுகிய காலபயிர்கள் சாகுபடி செய்ய இயலாத சூழ்நிலைகள் ஏற்பட உள்ளது.
எனவே தற்போது உள்ள நிலத்தடி நீரினை, சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதால் நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டு பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்படுவதை முழுவதுமாக தவிர்க்க முடியும். வாய்க்கால் மூலம் நீர் பாசனம் செய்வதனை முழுமையாக தவிர்த்து அரசு அளிக்கும் மானிய உதவியுடன் சொட்டுநீர் பாசனம் அமைப்பு மூலம் நீர் அளிக்க அனைத்து விவசாயிகளுக்கும் வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.
சொட்டுநீர் பாசனம் அமைப்பின் நன்மைகள்:
சொட்டுநீர் பாசனம் அமைப்பதால், தண்ணீர் தேவையான அளவு மட்டும் பயிர்களுக்கு பாய்ச்சப்படுவதால் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. உரங்கள் தண்ணீர் மூலம் அளிக்கப்படுவதால் உரங்கள் வீணாவது தவிர்க்கப்பட்டு உரத்திற்கான செலவுகள் குறைகிறது. பூச்சி தாக்குதல் மற்றும் நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. நீர்ப்பாசனம் செய்ய வேலையாட்கள் செலவு குறைகிறது. அதிக மகசூல் கிடைக்கிறது.
Read more: அடிமாட்டு விலைக்கு போகும் சின்ன வெங்காயம்- வேதனையில் தமிழக விவசாயிகள்
தேவைப்படும் ஆவணங்கள்:
சொட்டுநீர் பாசனம் அமைக்க, சிட்டா, நிலவரைபடம் (FMB), அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல், வங்கி புத்தக நகல், சிறு விவசாயி சான்று, மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை அலுவலகத்தினை விவசாயிகள் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கோட்டுக்கொள்ளப்படுகிறது.
“சொட்டு நீர் பாசனம் அமைப்போம், நீர் வளத்தை பாதுகாப்போம்”- கள்ளக்குறிச்சியினை செழுமையான மாவட்ட மாக்குவோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தனது செய்திக்குறிப்பில் அடிகோட்டிட்டு காட்டியுள்ளார்.
Read more: Pongal பரிசுத்தொகுப்பு: முழுக்கரும்பு- சர்க்கரைக்கான கொள்முதல் விலை எவ்வளவு?
Share your comments