கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்து தகுதிப்பெற்ற பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழா சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், இதர மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் தலைமையிலும் இன்று நடைப்பெற்றது.
இவ்விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வர் நவம்பர் மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை நேற்றே பலருக்கு வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலைக்குள் அனைவரின் வங்கிக்கணக்கிலும் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது எனவும் தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 27-3-2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24-7-2023 அன்று தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 இலட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான 15-9-2023 அன்று 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு, மாதந்தோறும் ரூ.1000/- பெற்று பயன்பெறும் வகையில் காஞ்சிபுரத்தில் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிர் இனி மாதந்தோறும் ரூ.1000 பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நெறிமுறைகளை பின்பற்றியே பயனாளிகளின் பட்டியல் புதுப்பித்தல், நிராகரித்தல் இருக்க வேண்டும். மகளிர் உரிமை தொகை பெறும் பயனாளிகளின் வருமான வரி விவரங்களையும் ஆய்வு செய்ய உத்தரவு. ஆண்டுதோறும் காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருமானம் உயர்ந்திருந்தால் வாகனப்பதிவு, பத்திரப்பதிவு குறித்து ஆய்வு செய்யும், காலாண்டு அடிப்படையில் பயனாளிகளின் பொது விநியோக திட்டம், நிலவுடமை தரவுகளை ஆய்வு செய்யவும் ஆணையிடப்ப்பட்டுள்ளது. அரையாண்டில் பயனாளிகளின் தொழில், மின்சாரப் பயன்பாடுகள் குறித்த தரவுகளை ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
TANTEA தொழிலாளர்களுக்கு டபுள் ஹேப்பி நியூஸ்- முதல்வர் அறிவிப்பு
PAN card மீண்டும் ஆக்டிவ் செய்ய 10 மடங்கு அபராதமா? அதிர்ச்சி தகவல்
Share your comments