மானிய விலையில் 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வழங்க விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு-
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (ஐந்து ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) பழைய திறனற்ற மின்மோட்டார்களுக்கு பதிலாகவும், புதிதாக அமைக்கப்பட்ட கிணறுகளுக்கும், புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க தமிழக அரசு அறிவித்தபடி 2022-23ம் நிதியாண்டில் " மானியத்தில் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்குதல்" திட்டத்தின் கீழ் அரசாணை வரப்பெற்று வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்த மொத்தம் 220 எண்களுக்கு ரூ.15,000/- வீதம் ரூ.33.00 இலட்சம் மானியம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.
50 சதவீதம் வரை மானியம்:
ஏற்கெனவே மின் இணைப்பு பெற்றுள்ள பழைய திறனற்ற மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்புபவர்கள் மற்றும் புதிய ஆழ்துளைக் கிணறு/ திறந்த வெளி கிணறு/ குழாய் கிணறு அமைத்து புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு மொத்த தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15,000/- இதில் எது குறைவோ அது பின்னேற்பு மானியமாக விவசாயியின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.
தலைமைப் பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) சென்னை, அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட மின்மோட்டார் பம்புசெட்டு மாடல்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே மானியத்தில் சொட்டுநீர் பாசனத்திற்கு பதிவு செய்து பயனடைந்தவர்களும், புதியதாக சொட்டுநீர் பாசனத்துடன் துணை நீர் மேலாண்மைத் திட்டம்- மின்மோட்டாருக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திட்டம் தொடர்பாக யாரை அணுகுவது?
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி, திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார தனிநபர் விவசாயிகள் தூத்துக்குடி உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) (96557 08447), கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டார தனிநபர் விவசாயிகள் கோவில்பட்டி உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) (94432 76371) ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.
மேலும் ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டார தனிநபர் விவசாயிகள் திருச்செந்தூர் உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) (87784 26945) ஆகியோரைத் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி இ.ஆ.ப., கேட்டுக் கொண்டுள்ளார் என வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more:
ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்புடன் விவசாயம்- லட்சங்களில் வருமானம் ஈட்டும் இளைஞர்
புயல் நிவாரணம் ரூ.6000- புதிய அப்டேட் வழங்கியது தமிழ்நாடு அரசு
Share your comments