கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கறவை மாடுகளின் உற்பத்தித்திறன் மற்றும் இனப்பெருக்கத்திறனை அதிகரிப்பதற்கு தேவைப்படும் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்காக கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் "தீவன அபிவிருத்தித் திட்டம்” நடப்பாண்டு (2024-25) செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஆர்வமுள்ள - விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
"இறவையில் தீவிர முறையில் தீவனப்பயிர் சாகுபடி செய்தல் திட்டத்தின் கீழ்” தானிய வகை தீவனப் பயிர்களான தீவனச்சோளம், கோ எப்.எஸ்-29 விதைகளையும் மற்றும் பயிறு வகை தீவனப் பயிர்களான வேலிமசால் விதைகளையும் விநியோகித்தல் திட்டத்தின்படி, கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன் அடைகின்ற வகையில் நீர் பாசன வசதியுள்ள நிலப்பகுதியில் (இறவை) தீவனப் பயிர்களை சாகுபடி செய்திட 80 ஏக்கரில் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகப்பட்சம் 1 ஏக்கர்: 100 சதவீத மானியம்
இத்திட்டக்கூறின் படி, தானிய வகை தீவனப் பயிர்களான தீவனச்சோளம் கோ எப்.எஸ்-29 இரக விதைகள் அடங்கிய 375 கிராம் மினி கிட்டுகளையும் மற்றும் பயிறுவகை தீவனப் பயிர்களான வேலி மசால் விதைகள் 500 கிராம் மினி கிட்டுகளையும் அதற்கான இரசாயன உரங்களும் கால்நடை வளர்க்கும் விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது 0.25 ஏக்கர் (25சென்ட்) நிலத்தில் சாகுபடி செய்வதற்காக 100% மானியமாக விநியோகிக்கப்படவுள்ளது. ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 1 ஏக்கரில் தீவனப் பயிர்களை பயிரிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மானாவாரி நிலத்தில் தீவன உற்பத்தியை பெருக்குதல் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 200 ஏக்கரில் நீர்பாசன வசதியில்லாத மானாவாரி நிலப்பகுதிகளிலுள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறுவதற்காக மானாவாரி தீவனச் சோளத்துடன் தட்டைப்பயிறு வளர்க்கும் திட்டத்தின் கீழ் சாகுபடி செய்ய ஒவ்வொரு 0.5 ஏக்கர் (50 சென்ட்) நிலப்பரப்பிலும் தேவைப்படும் 6 கிலோ தரமான தீவன சோளச் விதையும் 2 கிலோ தட்டைப்பயிறு விதையும் இடுபொருட்களாக 100% மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு அதிக பட்சம் 2.5 ஏக்கருக்கு பயன்பெறலாம்.
புல்நறுக்கும் கருவிக்கு மானியம்:
50% மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 80 எண்ணிக்கையில் உள்ள மின் விசையில் இயக்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்குதல் : 50% மானியத்துடன் 200 மின் விசையில் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது விருப்பமுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். மேலும், தேர்வு செய்யப்படும் பயனாளிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கி / நடப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.
மேற்காணும் திட்டங்களின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடு பட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற விருப்பமுள்ள திட்டத்தினை குறிப்பிட்டு எழுத்து மூலமாக விண்ணப்பம் அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், அனைத்து இனங்களிலும் 30% தாழ்த்தப்பட்ட /பழங்குடி வகுப்பைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த்,இஆப, தான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Read more:
நாடு முழுவதும் 16 வகையான கால்நடைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்- எதற்காக தெரியுமா?
Rooftop Garden: எந்த வகையான மாடித்தோட்டம் காய்கறி உற்பத்திக்கு ஏற்றது?
Share your comments