வேளாண் தொழிலாளர் பற்றாக்குறை நிலவும் நிலையில் வேளண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை பயன்படுத்திடும் சிறு, குறு விவசாயிகள் மானியத்தைப் பெற்று பயனடையுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்த வழங்கப்படும் மானியம் குறித்த தகவல்களை விளக்கியுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
தமிழகத்தில் சொந்த நிலம் வைத்திருக்கும் சிறு,குறு விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை இ-வாடகை செயலி மூலம் பதிவு செய்து, நிலமேம்பாடு, உழவு, விதைப்பு, அறுவடை பண்ணைக் கழிவு மேலாண்மை போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 40 இலட்சம் ரூபாய் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயந்திர சேவைக்கான மானியம்:
வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை இ-வாடகை செயலியினை பயன்படுத்தி வாடகைக்குப் பெற்று, பணிகள் நிறைவடைந்த பின்னர், பணி முடிவுற்ற நிலப்பரப்பு துறை அலுவலர்களால் அளவீடு செய்யப்பட்டு, பின்னர் விவசாயி செலுத்திய மொத்த வாடகைத் தொகையில் 50 சதவிகித தொகை, பின்னேற்பு மானியமாக சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஒரு விவசாயிக்கு 5 மணிநேரம் அல்லது 5 ஏக்கர், இவற்றுக்கான வாடகையில் எது குறைவோ அந்த வாடகை மானியமாக வழங்கப்படும்.
நன்செய் நிலமுடைய சிறு, குறு விவசாயிக்கு, அதிகபட்சமாக 2.5 ஏக்கருக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.250/- வீதம், அதிகபட்சமாக ரூ.625/-வரை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மானியம் வழங்கப்படும்.
புன்செய் நிலமுடைய சிறு, குறு விவசாயிக்கு, அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.250/- வீதம் அதிகபட்சமாக ரூ.1250/- வரை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மானியம் வழங்கப்படும்.
மானியம் பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் அளிப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்னென்ன ஆவணங்கள் தேவை?
இத்திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள், "உழவன் செயலியில் இ- வாடகை சேவை , இணையதளம் https://mts.aed.tn.gov/evaadagai/ மூலமாகவோ தங்களுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை முன் பதிவு செய்து வாடகைத் தொகையை செலுத்த வேண்டும். அச்செயலியில் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் மற்றும் விவரங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தின் சிட்டா, புல வரைபடம், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், ஆதார் அட்டையின் நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல் ஆகிய ஆவணங்களை கள ஆய்வு செய்யும் வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிக மதிப்புள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களை இ-வடகை செயலி மூலம் பதிவு செய்து மானியத்தைப் பெற்று பயனடையுமாறு விவசாயிகள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என வேளாண் அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
இ-வாடகை: விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் MRK முக்கிய அறிவிப்பு
Share your comments