வயது வித்தியாசமின்றி இன்று அனைத்து தரப்பினரும் இன்று மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். வாழ்க்கை முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம். அந்தவகையில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட பல வழிகளில் முயற்சிக்கிறோம். மனநல நிபுணர்களும் மருத்துவமனைகளும் கூட தற்போது அதிகரித்துவிட்டன. அதுவும் இந்த கொரோனா காலத்தில் மன அழுத்தத்திற்கு ஆளானோர் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. மன அழுத்தத்தில் இருந்து விடுபட மருத்துவர்கள் சிலர் கூறும் வழிகளைக் காண்போம்.
எளிய வழிகள் (Simple Ways)
- மனதில் உணர்ச்சிகள் மேல் எழும்பும்போது அவற்றை கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். மனம் உங்களின் கட்டுப்பாட்டை விட்டுச் செல்லும்போது அந்த உணர்வை உடனடியாக நிறுத்திவிட்டால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
- மன அழுத்தம் ஏற்படும்போது உங்கள் முகத்தை ஒரு நிமிடம் குளிர்ந்த நீரில் வைத்து மூச்சை அடக்க வேண்டும். பின்னர் முகத்தை வெளியே எடுத்து மூச்சை வெளியே விட வேண்டும்.
- உடல் முழுவதையும் இயக்கத்தில் வைக்கக்கூடிய ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்யலாம். வேகமாக சுவாசிக்கும்போது உடலில் உள்ள தசைகள் தளர்வடையும். இதனால் மன அழுத்தம் குறையும்.
- ஒரு 30 நிமிடம் வெளியே சென்று சூரிய வெளிச்சத்தை உள்வாங்குவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உடலில் சூரிய வெளிச்சம் படும்படி உட்கார்ந்திருக்கலாம் அல்லது நடக்கலாம்.
- குடும்பத்தினர், நண்பர்களுடன் இணக்கமாக இருப்பதும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும். தனிமையில் இருக்கும்போது தான் மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது.
- மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதை சில நிமிடங்கள் அமைதியாக சிந்தித்து முதலில் கண்டறியுங்கள். மன அழுத்தத்திற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டால் மட்டுமே அதில் இருந்து விடுபட முடியும்.
- பொதுவாக மிகவும் சிறிய விஷயத்திற்காகத்தான் மன அழுத்தம் ஏற்படும். இதற்காக மூச்சுப்பயிற்சி செய்யலாம். ஓர் அமைதியான சூழ்நிலையில் மூச்சை நன்றாக உள் இழுத்து வெளியே விட வேண்டும்.
- உங்களுக்கு நன்றாக அறிமுகமானவரால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படின், அவரிடம் பேசி பிரச்னையை சரிசெய்ய முற்படுங்கள். இல்லையெனில் அவர் செய்த தவறுக்காக மன்னித்து விட்டுவிடுங்கள்.
- மன அழுத்தம் ஏற்படும்போது மனதை ஒருநிலைப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக 10 லிருந்து 1 வரை தலைகீழாக எண்ணலாம், உங்களுக்குப் பிடித்த வண்ணங்களை வரிசைப்படுத்தலாம். இவ்வாறு ஏதேனும் ஒரு சிந்திக்கும் பயிற்சியை செய்து வருவது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
- எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு. அவரவருக்கு பிடித்த மன நிறைவைத் தரும் விஷயங்கள் உண்டு. அந்தவகையில் நீங்கள் உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யலாம். எதுவுமே இல்லை என்றால், உங்கள் மனதில் உள்ளவற்றை ஒரு பேப்பரில் எழுதித் தள்ளிவிடுங்கள். மனம் இலகுவாகும்.
முன்னொரு காலத்தில் எல்லாம் மன அழுத்தம் என்ற ஒரு விஷயமே பெரிதாக பேசப்படுவதில்லை. இப்போது மன பாதிப்பு அதிகரித்து வருவதும் அதுகுறித்து பேசுவதற்கு ஒரு காரணம். மன அழுத்தம் ஏற்படும் அதே வழியில் அதனைத் தீர்ப்பதற்கும் ஒரு வழி இருக்கின்றது. உங்களுக்கான பிரச்னைகளைக் கண்டறிந்து களைதலே மன அழுத்தத்தைத் தீர்க்கும். ஆரோக்கியமான உடல்நலனுக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கும் மன ஆரோக்கியம் அவசியம் என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க
தென்னீரா பானம் பொருளாதார புரட்சி ஏற்படுத்தும்: உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நம்பிக்கை!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திரிபலா: வீட்டிலேயே தயாரிக்கலாம்!
Share your comments