வெற்றிலை (Betel Leaf) என்பது நமது தமிழ் சமூகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். மங்களத்தின் அடையாளமாக இருந்தாலும், இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது. குறிப்பாக செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் தீர்வாக கூறப்படுகிறது. பண்டைய காலங்களில் உணவு உண்ட பின் தாம்பூலம் போடும் பழக்கம் பரவலாக காணப்பட்டது. இது அவர்கள் உண்ட உணவை எளிதில் செரிக்கவும், ஜீரண மண்டலம் சிறப்பாக செயல் படவும் உதவியாது. சித்த மருத்துவத்தில் வெற்றிலையை பற்றி கூறும் போது 17 விதமான மருத்துவ குணங்களைக் கொண்டதாக கூறப்படுகிறது.
வெற்றிலையின் வகைகள் (Types Of Betel Leaf)
பொதுவாக வெற்றிலையை அதன் தோற்றம் மற்றும் சுவையை கொண்டு மூன்று வகையாக பிரித்தனர் நம் முன்னோர்கள்.
சாதாரண வெற்றிலை
கருப்பு நிறம் இல்லாத தளிர் நிறம் உள்ள வெற்றிலைக்கு வெள்ளை வெற்றிலை என்று பெயர் உண்டு. இது மணமாக இருக்கும்.
கம்மாறு வெற்றிலை
சற்று கருப்பு நிறம் கலந்தார் போல் உள்ள வெற்றிலைக்கு கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை என்று அழைக்கப்படும், இது நல்ல காரத்தோட இருக்கும்.
கற்பூர வெற்றிலை
வெற்றிலை தாமரை இலை போன்று பெரியதாகவும் நல்ல நிறத்தோடும் இருக்கும்.மேலும் இதை போடும் போது கற்பூர மணத்தோடு, சற்று காரத்தன்மையோடு இருக்கும்.
தாம்பூலம் போடுதல் என்றால் அதில் வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு என்பதன் கலவையாகும். மனித உடலில் தோன்றும் பிணியை வாதம், பித்தம், கபம் என்று மூன்று வகையாக பிரிக்கிறார்கள். இவை சரியான விகிதத்தில் இல்லாமல் அதிகரிக்கும் போதோ அல்லது குறையும் போதோ நோய்கள் தோன்றும். பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தையும், சுண்ணாம்பில் இருக்கும் காரம் வாதத்தை போக்க வல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும் என்பதால் தாம்பூலம் போடும் பழக்கம் பரவலாக காணப்பட்டது. வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும்.மருத்துவ மூலிகையான வெற்றிலை, மலேசியாவில் தோன்றியது என்றாலும் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் சாகுபடியாகிறது.
நோயெதிர்ப்பு சக்தி கொண்ட வெற்றிலை (Components of Betel Leaf)
வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும், கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின், வைட்டமின் சி மற்றும் 44 அளவிலான கலோரி ஆகியவை நிறைந்துள்ளது. வெற்றிலை குறித்து அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ள வெற்றிலையை பயன்படுத்தி பல நோய்களை குணப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்ட வெற்றிலையின் பயன்கள் (Benefits of Betel Leaf)
- வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டி வர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு மருந்தாக அமையும்.
- நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்ட வெற்றிலை, புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
- அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை (Digestion) தூண்டும் வெற்றிலை, உடலில் வெப்பத்தை தருவதோடு தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்குவதோடு, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது.
- வெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆடும் பற்களை கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை பலப்படுத்துகிறது.
- நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு ஞாபக சக்தியை (Memory) அதிகரிக்கும்.
- வெற்றிலை நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டுகிறது. மேலும், வெற்றிலையை அளவோடு எடுத்துக்கொண்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
- விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் கீல்வாதக் கோளாறுகளுக்கு வெற்றிலையினை அரைத்து கட்டாக கட்டி வந்தால், நல்ல பயன் கிடைக்கும்.
- வெற்றிலையை இடித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
- வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது.
- மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியமாக வெற்றிலை வைக்கிறது.
- வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகினால் சிறுநீர் நன்கு வெளியேறும்.
- குழந்தைகளுக்கு மலச்சிக்கல் (Constipation) ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்தினால் உடனடியாக மலம் கழியும்.
- வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.
- ஈரத்தால் வரும் தலைவலிக்கு வெற்றிலையை சூடுபடுத்தி நெற்றியில் வைத்தால், வலி நீங்கும்.
- கடுமையான வயிற்றுவலிக்கு ஒரு வெற்றிலையில் ஐந்து மிளகு வைத்து மென்றுச் சாப்பிட உடனடியாக வலி நீங்கும்.
- துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை காலை மாலை என இரு வேலைகள் குடித்து வர, வயிற்றுக் கோளாறுகள் மற்றும் சளித்தொல்லை நீங்கும்.
இவ்வாறு எண்ணில் அடங்காது, பல பயன்களை அளிக்கும் வெற்றிலை மிகவும் அற்புதமான, இயற்கையின் வரப்பிரசாதம் என்றால் அதில் ஐயமில்லை. வெற்றிலையின் பயன்களை அறிந்துக்கொள்வதோடு விடாமல், அதன் குணம் அறிந்து உயோகித்து பலன் பெறுங்கள், நன்றி….!
M.Nivetha
nnivi316@gmail.com
Share your comments