Breakfast Skipper
காலை உணவைத் தவிர்த்து, நேரடியாக மதிய உணவை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் இந்த எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது பெண்கள் தான். வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, அவசர அவசரமாக செல்வதால் காலை உணவு தவிர்க்கப்படுகிறது. மேலும், வீட்டில் அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள், காலை உணவை சாப்பிடவே மறந்து விடுகின்றனர். மேலும் சிலர், உடல் எடையை குறைக்கிறேன் என்றும் காலை உணவைத் தவிர்த்து விடுகின்றனர். இப்படி காலை உணவை தவிர்ப்பதால், நமக்கு பல பாதிப்புகள் ஏற்படலாம். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் மாற்றங்கள்
காலை உணவைத் தவிர்த்து விடுவதன் காரணத்தால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்புகள் ஏற்பட்டு, நீரிழிவு நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதன் பின்னர், மதிய உணவின் வழியாக கிடைக்கும் அதிக குளுக்கோஸை ஈடுகட்ட, அதிகளவில் இன்சுலின் சுரந்து, தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். இந்நிலை தொடர்ந்தால் சில மாதங்களுக்குப் பிறகு, ’இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ ஏற்பட்டு, நாமும் சர்க்கரை நோயாளியாக மாறி விடுவோம்.
காலையில் உணவை மென்று சாப்பிடும் போது, எச்சில் சுரப்பில் இருக்கும் கிருமிநாசினி செய்கையுடைய லைஸோசைம், வாய்ப் பகுதியில் இருக்கும் நுண்கிருமிகளை அழிக்கும். அதுவே காலையில் நாம் உணவைச் சாப்பிடவில்லை எனில், கிருமிநாசினியின் ஆதரவின்றி, வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து, விரைவில் வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதன் விளைவுகள்
முந்தைய நாள் இரவு முதல், அதற்கு அடுத்த நாள் மதியம் வரை நீண்ட நேரமாக சாப்பிடாமல் இருப்பதனால், உடலில் நடக்கின்ற அனைத்து வளர்சிதை மாற்றங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டு விடுகிறது.
காலையில் உணவு சாப்பிடாமல் தவிர்க்கும் போது, உடல் உறுப்புகள் செயல்படுவதற்குத் தேவைப்படும் சக்தி கிடைக்காமல் போய்விடும். காலை உணவின் மூலம் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல், மிகவும் சோர்வான நிலையை உடல் அடையும்.
மறதி அதிகரிக்கும்
அதிக நேரம் சாப்பிடாமல் இருப்பதனால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாக கிடைக்காது. இதன் காரணமாக மறதி அதிகரிப்பதோடு, அறிவாற்றலும் குறைந்து விடும்.
உடல் எடையை குறைப்பதன் நோக்கத்திற்காக காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்த வேளை அளவுக்கும் அதிகமாக சாப்பிடுவார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க
பல நோய்களைத் தீர்த்து வைக்கும் வெங்காய டீ-யின் நன்மைகள்! எப்படி தயார் செய்வது?
புதிய பயிர் ரகங்கள் அறிமுகம்: விவசாயிகளுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு!
Share your comments