நாம் ஏன் அடிக்கடியோ அல்லது சோர்ந்து போகும்போதோ காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம்? காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். தவிர, காபியில் காஃபீன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஒரு நாளுக்கு இரண்டு முறை டீயோ, காபியோ குடிப்பது உடல்நலத்துக்குப் பெரிதாகக் கேடு விளைவிக்காது. அப்படிக் குடிப்பதால் சில நன்மைகளும் ஏற்படலாம். காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.
மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அளவாக இருந்தால் (If the Limit)
காபியில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அந்த அளவுக்கு டீ குடிப்பதிலும் நன்மைகள் இருப்பதாகப் பல மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன. டீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமட்டாய்டு ஆர்த்ரட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்குக் குறைகிறதாம்.
ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளையும் டீ குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள்.
அளவுக்கு மிஞ்சினால் (If Exceed)
அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும்போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன? அளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காபியில் இருக்கும் காஃபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது, அதுவே உடல்நலப் பாதிப்புக்குக் காரணமாக அமைந்துவிடும்.
அளவுக்கு அதிகமாகக் காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படலாம். காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை விறைப்படையச் செய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தலைவலிக்காகக் குடிக்கப்படும் காபியின் அளவுக்கு அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.
கிரீன் டீ (Green Tea)
ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு அதிகப்படியாகக் காபி குடித்தே தீர வேண்டும் என்று நினைக்கிறவர்கள், அவற்றின் அளவை குறைத்துக் கொள்ளலாம். ஒரு கப் காபிக்குப் பதில் முதலில் அரை கப், பிறகு கால் கப் என்று படிப்படியாகக் குறைக்கலாம். டீ விரும்பிகள் கிரீன் டீக்கு மாறலாம். கிரீன் டீயில் இயற்கையாகக் கிடைக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ஸ் நிறைந்திருப்பது திசுக்களின் வளர்ச்சிக்கு நல்லது. எதுவுமே அளவுடன் இருந்தால் வளமுடன் வாழலாம்.
மேலும் படிக்க
Share your comments