ஒன்றை செய்வதற்கு முன் யோசிப்பது புத்திசாலித்தனமானது தான். ஆனால் ஒன்றைப் பற்றி அதிகம் சிந்திப்பது, குறிப்பாக இப்படி நடந்தால் என்னாகுமோ என எதிர்மறையாக சிந்திப்பது பயத்தை ஊக்குவிக்கும். இது நமது இன்செக்யூரிட்டி, நம்பிக்கையின்மையை தூண்டி நமது நல்ல யோசனைகள் மற்றும் திட்டங்களை நாசமாக்கிவிடும். எதிர்காலத்தில் விரும்பத்தகாதவை, அதாவது வேலை பறிபோகுமோ, காதல் தோல்வியடையுமோ, தொழில் வளர்ச்சி அடையாதோ போன்ற எதிர்மறை சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்தும்போது அது நமது மகிழ்ச்சி, செயல்பாடு, உடல் மற்றும் மன நலனை பறித்துவிடும். அதிகம் யோசிப்பதை எப்படி நிறுத்துவது என்பதை காண்போம்.
ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் (Think creatively)
ஒன்றை திறம்பட செயல்படுத்த முடியாத குழப்பமான நேரங்களுக்கு நடுவில் நம் மனதில் பல்வேறு எண்ணங்கள் பறக்கும். அவை அடங்க நேரம் ஒதுக்கி விட்டுவிட்டால், நேர்மறையான திட்டங்களை, யோசனைகளையும் உருவாக்க முடியும். தியானம் அல்லது அமைதிக்கான இசை போன்றவற்றை தொடங்கலாம். இது சூழலை சமாளிக்க நேர்மறையான எண்ணங்களுக்கு வழிவகுக்கும். இடையே மனம் பயத்தையும், சந்தேகத்தையும் அனுமதிக்கும். அப்போது நமது ஆரம்ப எண்ணங்கள் சிறந்தவை என உணருங்கள். பயம் அல்லது சந்தேகத்தை பொய் என்று சொல்லுங்கள்.
நடைபயிற்சி (Walking)
மன அழுத்தம் உள்ளவர்களுக்கு பொதுவாக நடைபயிற்சி நல்லது. மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை அழிக்க இது ஒரு வழி என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சியின் ஒரு நல்ல பக்கவிளைவு என்னவென்றால் மனதை லேசாக்கும் என்டார்பின் ஹார்மோன்களை வெளியிடும். மேலும் உங்களின் தற்போதைய எண்ணங்களிலிருந்து உங்களை மடைமாற்றும் வேலையையும் நடைபயிற்சி செய்யும். நடைபயிற்சி எல்லாம் எனக்கு பிடிக்காது என்கிறீர்களா, தோட்டத்தை உருவாக்கி பராமரியுங்கள்.
தன்னார்வலர் (Volunteer)
உதவி தேவைப்படும் ஒருவருக்கு ஓடிச் சென்று நிற்பது நம் கவனத்தை நம்மிடம் இருந்து திசைத்திருப்ப சிறந்த வழி. வேறொருவர் மீது கவனம் செலுத்தும்போது உங்கள் சொந்த சூழ்நிலையைப் பற்றி சிந்திக்க நேரமிருக்காது. மற்றவருக்கு உதவி செய்யும் போது அது உணர்வுபூர்வமாக நன்றாக இருக்கும்.
ஆழ்ந்து மூச்சு விடுங்கள் (Take a deep breath)
ஒன்றை பற்றியே அதிகம் சிந்திப்பது மிகுந்த கவலையை தரும். இது இதய படபடப்பு போன்ற பிரச்னைகளையும் உண்டு பண்ணும். இந்த சமயங்களில் எல்லாம் மருத்துவர்கள் ஸ்டெத்தை வைக்கும் போது மூச்சை இழுத்து விடுவது போல் நன்றாக சுவாசியுங்கள். குறைந்தது 10 ஆழ்ந்த சுவாசிப்பு தேவை. உங்கள் உடல் அதற்கு ரியாக்ட் செய்யும் வரை சுவாசத்தில் கவனத்தை குவியுங்கள். இந்த ஆழ்ந்த சுவாசம் மன அழுத்த அறிகுறிகளைப் போக்கி, அமைதி உணர்வை தரும்.
நல்லவற்றை எண்ணிப் பாருங்கள் (Think the good ones)
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நடந்த, நடந்து கொண்டிருக்கும் அனைத்து நேர்மறையான விஷயங்களை பற்றி எண்ணிப் பாருங்கள். அடிப்படையில் இருந்து ஆரம்பியுங்கள். எவ்வளவோ பேர் வேளைக்கு உணவு, தங்குமிடம் மற்றும் சரியான உடைகளின்றி இருப்பர். இதை ஸ்மார்ட் போனிலோ, லேப்டாப்பிலோ படிக்கும் உங்களிடம் அவை அனைத்தும் இருக்கும். அதை எண்ணிப்பாருங்கள். நமது நல்ல நண்பர்கள், குடும்ப, நல்ல வேலை இவை கிடைத்திருந்தால், அதை எண்ணி மகிழுங்கள். சொந்த எதிர்மறை எண்ணங்களை விட யதார்த்தம் சிறந்தவை.
மன்னித்து விடுங்கள் (forgive)
கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளை மறக்காமல் இருப்பதால் சில சமயங்களில் அதிகப்படியான சிந்தனை வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தவறிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு, உங்களை நீங்களே மன்னித்துக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு இப்படி செய்திருக்கலாமே, அப்படி செய்திருக்கலாமே என யோசிக்க வேண்டாம். கடந்து செல்லுங்கள். உங்களை யாரேனும் காயப்படுத்தி இருந்தால் அவர்களையும் மன்னித்து மறந்துவிடுங்கள்.
முடிந்ததைச் செய்வோம் (Let's do our best)
எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் நேரமெல்லாம் தவறாக போய்விடும், தோற்றுப்போகப் போகிறோம் என்றே எண்ணினால் அது செயலற்ற நிலைக்கு வழிவகுக்கும். அதற்கு பதில் நல்லதாக நினையுங்கள். நம்மால் முடிந்ததைச் சிறப்பாக செய்வோம் என கொள்ளுங்கள்.
கவலை வேண்டாம் (Do not worry)
நீங்கள் நீங்களாக இருங்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். ஏனென்றால் அவர்களே தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். உங்களைப் பற்றி யோசிக்க வாய்ப்பு குறைவு. உங்களிடம் மாற்றம் வேண்டும் என நீங்களே கருதினால் அதற்கான தீர்வைத் தேடுங்கள்.
இந்த தருணத்தில் வாழுங்கள்
கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பது, எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவதை விட இன்றைய தருணத்தில் கவனம் செலுத்துங்கள். கடந்து வந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது. எதிர்காலத்தை பற்றி துல்லியமாக கணிக்க முடியாது.
எதிர்மறையான எண்ணங்கள் ஏற்பட எது காரணமாக இருக்கிறது என தெரிந்துக்கொள்ள முயலுங்கள். ஏன் அது அந்த எண்ணங்களை ஏற்படுத்துகிறது என கண்டுபிடித்து அதனை ஒப்புக்கொண்டால், அதனை சமாளிக்கும் வழி பிறக்கும். தேவையற்ற எண்ணங்கள், அதிக யோசனைகள் மறையும்.
மேலும் படிக்க
உடல் எடையை குறைக்க வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினாலே போதும்!
Share your comments