நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் இருக்கும் பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கவும் எண்ணற்ற இயற்கை பானங்கள் உள்ளன. இதில் பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் ஒரு வகையான பானம் தான் வெங்காய டீ. நமது சமையலில் மிகவும் இன்றியமையாத ஒரு உணவுப் பொருள் வெங்காயம் ஆகும். ஆனாலும் வெங்காயத்தின் வாசனையே பிடிக்காத சிலரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெங்காயத்தில் டீ போட்டு கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். மேலும், வெங்காயத்தில் பல அரிய நன்மைகள் புதைந்து கிடக்கின்றன.
வெங்காய டீ-யின் நன்மைகள்
வெங்காயத்தை தினந்தோறும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால், நம் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல, வெங்காயத்தில் டீ தயாரித்து குடித்தால், உடலினுள் பல அற்புத மாற்றங்கள் நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வெங்காய டீ பெரிதும் உதவி புரிகிறது. மேலும், நாம் தினசரி சந்திக்கும் சில ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிப்பதோடு, ஆபத்தான நோய்களுக்கு முக்கிய காரணமான ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளை, கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் வெங்காய டீ உதவி புரிகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்
குளிர் காலம் மற்றும் பருவ கால மாற்றங்களின் போது சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளை அதிகம் பேர் சந்திப்பார்கள். இவர்கள், வெங்காய டீ-யை தொடர்ந்து குடித்து வந்தால், அது இரத்தத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது. மேலும், வெங்காயத்தில் அதிசக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதன் காரணத்தால், வெங்காய டீயை குடித்தால் அடிக்கடி சந்திக்கும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க முடியும்.
கொலஸ்ட்ரால் அளவு சீராகும்
வெங்காயத்தில் க்யூயர்சிடின் எனும் ப்ளேவோனாய்டுகள் இருக்கிறது. இது கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்த உதவி புரிகிறது. மேலும், இது உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் உற்பத்தியை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து விடுகிறது.
இரத்த சர்க்கரை கட்டுப்படும்
வெங்காய டீ நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உயர் இரத்த சர்க்கரை அளவை வெங்காயம் குறைப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இதற்கு வெங்காயத்தில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் தான் மிக முக்கிய காரணமாகும். வெங்காயத்தில் இனுலின் அதிகளவில் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கக்கூடியது.
வெங்காய டீ தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதில் 1 சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, இத்துடன் 2 முதல் 3 பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, 1 பிரியாணி இலையையும் சேர்த்து சிறிது நேரத்திற்கு கொதிக்க வைக்க வேண்டும்.
டீ-யின் நிறமானது அடர் நிறத்தில் மாறத் தொடங்கும் போது, அடுப்பை அணைத்து விட்டு அதனை வடிகட்ட வேண்டும். இதில் சுவைக்கு ஏற்ப தேன் மற்றும் பட்டைத் தூளினை கலந்து குடிக்க வேண்டும். வேண்டுமெனில், இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றினையும் கலந்து கொள்ளலாம். இந்த டீயை காலையில் வெறும் வயிற்றில் அல்லது மாலை வேளையில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க
Share your comments