நம் உடலில் உயிர் நிலைபெற்று இருப்பதற்கு மிகவும் முக்கியமான காரணம், உடல் உள்ளுறுப்புகளின் எல்லாப் பகுதிகளிலும் செல்கிற இரத்த ஓட்டம் தான். உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் அடிபட்டு விட்டால், வெளிப்புறத் தோல் பகுதியின் அடியில் இரத்தம் உறைந்து இரத்தக் கட்டு உண்டாகிறது. இதிலிருந்து நிவாரணம் பெற பாரம்பரிய மருத்துவ முறைகளை இப்போது தெரிந்து கொள்வோம்.
இரத்தக் கட்டு அறிகுறிகள்
உடலில் அடிபட்ட பகுதியில் இருக்கும் தோலுக்கு அடியில் இரத்தம் உராய்ந்து, அந்த இடத்தில் சிறிய புடைப்பு போன்று காணப்படும். இரத்தம் உறைந்திருப்பதனை சில சமயங்களில் வெறும் கண்களால் பார்க்க முடியும். நாட்கள் செல்லச் செல்ல அடிபட்ட அந்த இடம் கருப்பு நிறமாக மாறும்.
இரத்தக் கட்டு குணமாக
புளி
அன்றாட சமையலில் அடிக்கடி பயன்படுத்தும் புளியை சிறிதளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிதளவு கல் உப்பைச் சேர்த்து கலந்து, பிசைந்து பசை போல் செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்தப் பசையை இரத்தக் கட்டு ஏற்பட்ட இடத்தில் பற்று போட்டு வந்தால், இரத்தக் கட்டு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்.
இரத்த பால்
நாட்டு மருந்து கடைகளில் இரத்த பால் என்ற ஒரு வகை வெளிப்பூச்சு கிடைக்கும். இதனை சிறிதளவு தண்ணீர் விட்டு தேய்த்து, இரத்தக் கட்டு ஏற்பட்டுள்ள இடங்களில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள்
தரமான மஞ்சள் பொடியை சிறிதளவு எடுத்துக் கொண்டு, அதில் வெந்நீர் விட்டு கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை இரத்தக் கட்டு உண்டான இடங்களில் களிம்பு போல் வைத்து, ஒரு வெள்ளைத் துணியால் கட்டு போட வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் விரைவாக இரத்தக் கட்டு குணமாகும்.
ஆமணக்கு, நொச்சி
ஆமணக்கு மற்றும் நொச்சி இலைகளை சிறிதளவு பறித்து, விளக்கெண்ணெயில் வதக்கி, இந்த இலைகளை ஒரு வெள்ளைத் துணியால் கட்டி, இரத்தக் கட்டு உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால் விரைவில் குணமாகும்.
அமுக்கிராங் சூரணம்
அமுக்கிராங் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை சூடான பசும்பாலில், ஒரு தேக்கரண்டி அளவு கலந்து, காலை மாலை என இருவேளை குடித்து வந்தால் இரத்தக் கட்டு விரைவில் நீங்கி விடும்.
குறிப்பு
இரத்தக் கட்டு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தி கொண்ட பிறகு, மேற்கண்ட வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.
மேலும் படிக்க
உடலில் நச்சுக்களை வெளியேற்ற உதவும் அற்புத பானங்கள் இவைதான்!
தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 40% மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
Share your comments