தேநீர் குடிப்பது நமது பதட்டத்தை தணிக்க உதவும் ஒரு எளிய வழிமுறையாகும். சில மூலிகை தேநீர் பாரம்பரியமாக மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டும் வரும் நிலையில் நமது பதட்டத்தை தணிக்க உதவும் சில தேநீர்களின் பட்டியலை கீழே காணலாம்.
கெமோமில் தேநீர்:
கெமோமில் ஒரு பிரபலமான மூலிகை தேநீர். கெமோமில் என்பது வேறொன்றுமில்லை, நமது சீமை சாமந்தி பூ தான். கெமோமில் மூலம் தயாரிக்கப்பட்ட தேநீரை பருகுவது கவலையை குறைக்கவும், நல்ல தூக்கத்தை பெறவும், தசைகளில் உள்ள வலியினை தளர்த்தவும் உதவுகிறது. இந்த தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால் பயம், தயக்கம் போன்றவற்றிலிருந்தும் விடுபட உதவும்.
லாவெண்டர் தேநீர்:
லாவெண்டர் இயற்கையிலேயே ஒரு இனிமையான நறுமணத்தைக் கொண்டுள்ளது. லாவெண்டர் தேநீர் குடிப்பது பதட்டத்தைக் குறைக்கவும், அமைதியான உள் உணர்வை பெறவும் உதவும்.
எலுமிச்சை தைலம் தேநீர்:
எலுமிச்சை தைலம் தேநீர் பல நூற்றாண்டுகளாக மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகை. எலுமிச்சை தைலம் குறைந்தது 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஜஸ்கீரிம் மற்றும் மூலிகை தேநீர்களில் சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவையும் பதட்டத்தை தணிக்க பெருமளவில் உதவுகிறது.
மிளகுக்கீரை தேநீர் (Pepper-mint Tea):
புதினா புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் நறுமணம் கொண்டது. இது அஜீரணத்தை குறைப்பதுடன், வாய் தூர்நாற்றத்தை போக்கும் தன்மையும் கொண்டது. மன அமைதியை தூண்டுவதால் இந்த மிளகுக்கீரை தேநீரும் பதட்டத்தை போக்க ஒரு சிறந்த தேர்வாகும்.
வலேரியன் வேர் தேநீர்:
வலேரியன் வேர் பொதுவாக கவலை மற்றும் தூக்க பிரச்சனைகளுக்கு இயற்கை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவத்தில் வலேரியன் ஒரு மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வலேரியன் வேர் தேநீர் கவலை, வலி, தூக்கமின்மை மற்றும் பதட்டம் ஆகியவற்றிலிருந்தும் விடுபடவும் உதவுகிறது.
அஸ்வகந்தா தேநீர்:
அஸ்வகந்தா ஒரு அடாப்டோஜெனிக் மூலிகையாகும், இது மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகளுக்காகவே பெயர் பெற்றது. அஸ்வகந்தா தேநீர் குடிப்பது பதட்டத்தைக் குறைக்கவும், அமைதியான உணர்வை ஊக்குவிக்கவும் உதவும். அஸ்வகந்தா உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
க்ரீன் டீ:
க்ரீன் டீ-யில் எல்-தியானைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது பதட்டத்தை குறைக்க சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் நடைப்பெற்ற ஆய்வு ஒன்றில் க்ரீன் தேநீரை உட்கொள்ளும் மாணவர்கள் குறைந்த அளவிலான மன அழுத்தத்தை எதிர்க்கொள்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
துளசி தேநீர்:
துளசியானது பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. துளசி தேநீர் குடிப்பது பதட்டத்தை குறைப்பதுடன் நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மையினையும் கொண்டுள்ளது.
ரோஸ் டீ:
ரோஸ் டீ உலர்ந்த ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் லேசான, மலர் சுவையினையும் தன்னகத்தை கொண்டு உள்ளது. இது பதட்டத்தைத் தணிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது.
மூலிகை தேநீர் என்பது பதட்டத்தை தணிக்க உதவும் வழிமுறைகளில் ஒன்று தான். உங்களுக்கு தொடர்ந்து கவலையுணர்வு, மனப்பதட்டம் இருந்தால் உரிய மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
pic courtesy: Unsplash
மேலும் காண்க:
Share your comments