தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது, கடந்த மாதத்தில் நாள் ஒன்றுக்கு 36000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் 36 நாட்களுக்கு பிறகு நேற்று தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அதேபோல் தினமும் 400-க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், 17 நாட்களுக்கு பிறகு நேற்று உயிரிழப்பும் 400-க்கும் கீழ் சரிந்தது.
குறையும் கொரோனா தொற்று
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 385 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10,765 ஆண்கள், 8,683 பெண்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 448 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேருக்கும், 12 வயதுக்கு உட்பட்ட 711 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,044 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 248 பேரும், தனியார் மருத்துவமனையில் 103 பேரும் என 351 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 83 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 27 ஆயிரத்து 356 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 31,360 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கோவையில் 2,564 பேரும், சென்னையில் 1,530 பேரும், ஈரோட்டில் 1,646 பேரும், திருப்பூரில் 1,027 பேரும், சேலத்தில் 997 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 118 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இதுவரையில் 19 லட்சத்து 97 ஆயிரத்து 299 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 26 பேர் உள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments