"கடுக்காய்" பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய அற்புத காய். இதன் மருத்துவ குணங்கள் தெரிந்தால் கண்டிப்பாக எவரும் இதை தவிர்க்க மாட்டிர்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த காய் அமிர்தத்திற்கு ஒப்பானது என்கிறார் திருமூலர். எனவே தான் அவர் எழுதிய திருமந்திரத்தில், உடல், மனம், ஆன்மா என அனைத்தையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
சித்தர் பாடல்
சித்தர்கள் பல்லாயிரக்கண மருத்துவ குறிப்புகளை பாடல் வடிவில் நமக்கு விட்டு சென்றுள்ளனர். பிணி அறிந்து அதற்கேற்ப மூலிகை, ஆரோக்கியமாக வாழ பின்பற்ற வேண்டிய மூலிகை, நூற்றுக்கும் மேற்பட்ட காயகல்பம் என மனிதன் நோயின்றி, நீண்ட ஆயுளுடன் வாழ அவர்கள் பரிந்துரைத்த மருந்துகளில் இதுவும் ஒன்று.
சித்தர்கள் வாக்கின்படி நம் உடலில் நோய் தோன்ற முக்கிய காரணம் உஷ்ணம்ன் (சூடு), காற்று, நீர் போன்றவையாகும். உடலுக்கு தேவைப்படும் அளவில் இருந்து மிகுதியாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதால்தான் நோய்கள் தோன்றுகின்றன. அவர்கள் உடலில் தோன்றும் நோய்களை மூன்றாக வகை படுத்தினார்கள். அவை வாதம், பித்தம், கபம் என்பனவாகும். காற்றினால் வாத நோய்களும், உஷ்ணத்தால் பித்த நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு,
மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால்
கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும்
கோலை வீசி குலாவி நடப்பானே - இது சித்தர்கள் வாக்கு.
இதன் பொருள் காலையில் இஞ்சிச்சாறும், மாலையில் சுக்குக் காபி, இரவில் தூங்குவதற்கு முன்பு விதை நீக்கிய கடுக்காயைத் தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து பருக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) செய்து வந்தால் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தையும் நிக்கி, கோல் ஊன்றி நடக்கும் கிழவன் கூட குமரன் போல் மிடுக்காய் நடக்கலாம் என்கிறது.
கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ - கடுக்காய் நோய்
ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள்
ஊட்டி உடல் தேற்றும் உவந்து' - அகத்திய சித்தர்
தாயைக் காட்டிலும் சிறந்தது என்கிறார்கள் இந்த கடுக்காயை. அன்னையானவள் பெற்ற பிள்ளையை எவ்வாறு ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். ஆனால் அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் அகற்றி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.
“கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு”
கடுக்காயை பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் கொட்டையை நீக்கியே பின்பு பயன்படுத்த ஏற்றது. அதே போன்று சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்கி பயன்படுத்த வேண்டும் என்கிறது சித்த மருத்துவம்.
'கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்', 'ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்' போன்ற பழமொழிகள் கடுக்காயின் மகத்துவத்தை மேலும் எடுத்துரைக்கின்றன.
கடுக்காயின் வகைகள்
கடுக்காயின் புறத்தோற்றத்தையும், அதன் மருத்துவக் குணத்தையும் அடிப்படையாக கொண்டு சித்தர்கள் அதனை வகை படுத்தியுள்ளனர். விஜயன், அரோகினி, பிருதிவி, அமிர்தமரிதகி, த்ருவிருத்தி என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
- பிஞ்சு கடுக்காய்
- கருங்கடுக்காய்
- செங்கடுக்காய்
- வரிக்கடுக்காய்
- பால்கடுக்காய்
என கடுக்காயில் பல வகைகள் உண்டு. இவை தவிர, காபூல் கடுக்காய், சூரத் கடுக்காய் போன்ற வகைகளும் இங்கே கிடைக்கின்றன.
கடுக்காயின் மருத்துவ குணங்கள்
பிஞ்சு கடுக்காய் : மலச்சிக்கலுக்கு ஏற்றது
கருங்கடுக்காய் : உடலுக்கு அழகு, மலத்தை இளக்கி
செங்கடுக்காய் : மெலிந்த தேகத்தை தேற்றுதல், காச நோயைப் போக்கி
வரிக்கடுக்காய் : ஆண்மை குறைபாட்டை நிக்கி, பலவித நோய்களையும் போக்கும்
பால் கடுக்காய் : வயிற்று மந்தத்தைப் போக்கும்
கடுக்காய் பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, பித்த நோய்கள், கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை,மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ் மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை,தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.
நன்றி: இணையதளம்
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments