ஆரோக்கியமான எலும்புகளைப் பெற
வயதான காலத்தில் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபோரோஸிஸ் என்ற நோய் உண்டாகிறது. இதனால் எலும்பானது கடினத்தன்மையை இழந்து எளிதில் உடைந்து விடுகிறது.
சோயா பாலில் காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உடலானது கால்சியத்தை உட்கிரகிக்க உதவுகிறது. மேலும் சோயா பாலில் காணப்படும் கால்சியமானது எலும்புகளின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கிறது.
புரதச்சத்தினைக் கொண்ட இறைச்சியை உண்ணும்போது உடலில் உள்ள கால்சியம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் சைவ புரதமூலமான சோயா பாலினை உட்கொள்ளும்போது அவ்வாறு ஏற்படுவதில்லை.
மேலும் சோயா பாலில் காணப்படும் ஐசோஃப்ளோவன்கள் எலும்புகளின் அடர்த்தியையும், எடையினையும் அதிகரித்து ஆஸ்டியோபோரோஸிஸ் ஏற்படாமல் தடை செய்கிறது.
இதய நலத்திற்கு
சோயா புரதத்தில் காணப்படும் அமினோ அமிலங்கள் மற்றும் ஐசோஃப்ளோவன்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டைப் 2 சர்க்கரை நோயாளிகள் சோயா பாலினை அருந்துவதால் சீரான இரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சோயா பாலில் காணப்படும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கின்றன.
தினமும் சோயா பாலினை அருந்தும்போது இரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகளின் அளவு குறைக்கப்பட்டு நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சோயா பாலினை அளவோடு உண்டு இதய நலத்தைப் பாதுகாக்கலாம்.
புற்றுநோயைத் தடை செய்ய
சோயா பாலினை உட்கொள்ளும்போது சீரம் ஈஸ்ட்ரஜனின் அளவு குறைக்கப்பட்டு மார்பகப் புற்றுநோய் வருவது குறைக்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோயால் மாதவிடாய் நின்ற பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஈஸ்ரோஜனின் அளவில் வேறுபாடு ஏற்படுவதால் மார்பகப்புற்று உண்டாவதாகக் கருதப்படுகிறது. எனவே வயதான பெண்கள் சோயா பாலினை அருந்தி மார்பகப் புற்றுநோயினைத் தடுக்கலாம்.
ஆண்களிடையே ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயினையும் சோயா பால் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆரோக்கியமான உடல்எடை குறைப்பிற்கு
சோயா பாலில் காணப்படும் ஒற்றைசர்க்கரை நிறைவுறா கொழுப்பானது குடல் கொழுப்பினை உறிஞ்சுவதைத் தடைசெய்கிறது.
மேலும் சோயா பாலில் உள்ள நார்ச்சத்தானது நீண்ட வயிறு நிரம்பிய உணர்வினைத் தருகிறது. இதனால் அதிகமாக உட்கொள்வது தடைசெய்யப்படுகிறது.
சோயா பாலில் உள்ள ஐசோஃப்ளோவன்கள் வளர்ச்சிதை மாற்ற உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது. சோயா பாலினை அருந்துவதால் பருமனானவர்கள் தங்களின் வயிற்று சுற்றளவு குறைவதை உணரலாம். எனவே சோயா பாலினை உண்டு ஆரோக்கியமான முறையில் உடல்எடையைக் குறைக்கலாம்.
வயதான பெண்களின் பிரச்சினையைத் தீர்க்க
மாதவிடாய் நிற்கப் போகும்போது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைகிறது. ஈஸ்ட்ரஜனின் அளவு குறையும்போது அது பெண்களுக்கு சர்க்கரைநோய், உடல்பருமன், இதயநோய், மனஅழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
சோயா பாலானது பைட்டோ ஈஸ்ட்ரோஜனைக் கொண்டுள்ளது. இது உடலில் குறையும் ஈஸ்ட்ரோஜனின் அளவினை ஈடுசெய்கிறது. எனவே பெண்கள் வயதான காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க சோயா பாலினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சோயா பால் தயார் செய்யும் முறை
சோயா பயறினை 10-16 மணி நேரம்வரை ஊற வைக்க வேண்டும். சோயா பயறின் மேல் தோலானது ஊறிய பின்பு தனியே பிரிந்து வந்துவிடும்.
அதனை தனியே பிரித்து எடுத்துவிட வேண்டும். உடைந்த சோயா பயறினை 6-8 மணி நேரம் ஊறவைத்தால் போதுமானது.
விருப்பமுள்ளவர்கள் மைக்ரோவோவனில் 2 நிமிடங்கள் நனைந்த சோயா பயறினை சூடஏற்றலாம். அதன் பின் சோயா பயறினை தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
பின் அதனை வடிகட்ட வேண்டும். வடிகட்டியின் மேல்புறத்தில் தங்கும் பொருளானது ரொட்டிகள் தயார் செய்யவும், விலங்குகளின் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.
வடிகட்டிய நீர்மப் பொருளை 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து சோயா பால் தயார் செய்யப்படுகிறது. இவ்வாறாக தயார் செய்த சோயா பாலை மூன்று நாட்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
சோயா பாலானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், ஞாபகத்திறனை அதிகரிக்க மற்றும் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஏற்படும் புரதச்சத்து குறைபாடு ஆகியவற்றை போக்க பராம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.
சோயா பாலினைப் பற்றிய எச்சரிக்கை
சோயா பாலானது சில தாதுஉப்புகளை உடல் உட்கவர தடையாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சோயா பாலினை அதிகம் உட்கொள்ளும்போது வாந்தி, தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். எனவே இதனை அளவோடு அருந்துவது நலம்.
சோயா பாலிலிருந்து தயிர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. பாலினைப் போன்று சோயா பாலும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
சோயா பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
சோயா பாலில் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), பி9 (ஃபோலேட்டுக்கள்), பி12(கோபாலமைன்), இ மற்றும் சி ஆகியவை காணப்படுகின்றன.
மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, துத்தநாகம், செம்புச்சத்து, செலீனியம் ஆகிய தாது உப்புகள் காணப்படுகின்றன.
இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, லிப்பிடுகள் ஆகியவையும் உள்ளன.
Share your comments