உடல் ஆரோக்கியத்தில் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது. முறையான உணவு உடலை மட்டுமின்றி, மனதையும் மேம்படுத்துகிறது. ஆனால் தற்போது வேலைப்பளு, நாகரிகம் காரணமாக உணவு முறையில் மாற்றம் அடைந்து மலச்சிக்கல், செரிமானமின்மை போன்ற பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அது நம் உடலில் குடலின் ஆரோக்கியத்தை பாதிக்க வழிவகுக்கிறது. எனவே, எப்படி, என்ன சாப்பிடணும் என்ற முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றினால் பல்வேறு பாதிப்புகளை தவிர்க்கலாம். அதன்படி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நலமாக வாழ, சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை பார்ப்போம்.
பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள்
பலரும் பசிக்காமலேயே உணவை எடுக்கின்றனர். இல்லாவிட்டால் அளவுக்கு அதிகமாக அடிக்கடி சாப்பிட்டு விட்டு அவஸ்தைப்படுபவர்களும் உண்டு. எனவே நீங்கள் முன்பு சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணமாகி விட்ட பின், நன்றாக பசிக்கும் போது மட்டுமே அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும்.
அமைதி (Piece)
அமைதியான மற்றும் வசதியான இடத்தில் சாப்பிட வேண்டும். அப்போது கால்களை மடக்கி உட்கார்ந்து, வேறு எதிலும் கவனத்தை செலுத்தாமல் உணவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுங்கள். புத்தகம் படிப்பது, செல்போன், டிவி பார்ப்பது போன்றவற்றை தவிர்த்து உணவில் மட்டுமே கவனத்தை செலுத்தி ரசித்து சாப்பிடுங்கள்.
தேவையான அளவு சாப்பிடுங்கள்
ஒருவரின் தேவைகளை பொறுத்து சாப்பாட்டின் அளவும் மாறுபடுகிறது. வெவ்வேறு வயிற்றின் அளவு, வளர்சிதை மாற்ற வேகம் இவற்றின் அடிப்படையில் அனைவரும் சாப்பிடுகிறோம். எனவே உங்கள் வயிறும், மனமும் நிரம்பும் வரை மட்டுமே சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என நம் முன்னோர்களின் கூறியது மறுக்க முடியாத உண்மை.
மிதமான சூட்டில் உணவு
முடிந்த வரை மிதமான சூட்டில் மற்றும் புதிதாக சமைத்த உணவையே சாப்பிட வேண்டும். அப்போது தான் செரிமான நொதிகள் முறையாக செயல்படும். செரிமான சக்தியை பாதுகாக்கவும் உதவுகிறது. பிரிட்ஜில் வைத்திருந்து எடுத்து நேரடியாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மென்று சாப்பிட வேண்டும்
உணவை அப்படியே விழுங்கக்கூடாது. வேகமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று, உமிழ்நீருடன் சேர்த்து தான் மெதுவாக விழுங்க வேண்டும். மென்று சாப்பிடுவது செரிமானத்தின் முதல் மற்றும் முக்கியப் படியாகும்.
ஒத்துக்கொள்ளாத உணவை எடுக்காதீர்கள்
சில உணவுகள் ஒருசிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் வீண் பாதிப்புகள் ஏற்படக்கூடும். உதாரணமாக பால், பழம், மீன் போன்றவற்றை ஒன்றாக சாப்பிட்டால் சிலருக்கு ஒத்துவராமல், வயிற்றுக்கோளாறுக்கு வழிவகுக்கும்.
தரமான உணவு (Quality food)
சாப்பிடும் முன்பு உணவின் தரத்தை ஆராய்வது முக்கியமானது. எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் அதிகளவு எண்ணெய் உள்ள உணவுகளை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அப்போதுதான் செரிமானம் எளிதாக இருக்கும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும். உலர்ந்த நிலையில் உள்ள உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
உணவை ருசித்து சாப்பிடுங்கள்
சாப்பிடும்போது ஐம்புலன்களையும் பயன்படுத்தி ரசித்து, ருசித்து மன நிறைவுடன் சாப்பிட வேண்டும். உணவின் தோற்றம், அதன் நிறம், சுவை போன்றவற்றை பார்த்து, ருசித்து சாப்பிட வேண்டும். முக்கியமாக உணவில் மட்டும் மனம் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும், தினமும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க
கருஞ்சீரகத்தின் அளப்பரிய மருத்துவப் பயன்கள் இதோ!
நரம்புத் தளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாட்டு வைத்தியம்!
Share your comments