1. வாழ்வும் நலமும்

குறித்த நேரத்தில் எழுவதற்கு சில குறிப்புகள்

KJ Staff
KJ Staff

வார நாட்களில் நாம் அன்றாடப் பணிகளை முடித்து விட்டு இரவு படுக்கைக்குப் போகும் போது ஒவ்வொருவரும் நினைப்பது அதிகாலை விரைவாக எழுந்து அடுத்த நாளை நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான்.

இன்று போல தாமதமாக எழுந்து அவசர அவசரமாக வேலைகளை செய்து அலுவலகத்துக்கும் தாமதமாக சென்று சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று தான் ஒவ்வொரு நாள் இரவிலும் பலரும் எடுக்கும் தீர்மானமாகும்.

ஆனால், விடியும் போது அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் எப்போதும் போல அடித்த அலாரத்தை அணைத்துவிட்டு போர்வைக்குள் புகுந்து கொள்ளும் பலருக்கும் எழும் கேள்வி 'அதிகாலையில் கண் விழிக்க என்னதான் செய்ய வேண்டும்' என்பதுதான்.

மூளைக்குச் சொல்லுங்கள்

நாம் அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்று நாம் எடுத்த திடமான தீர்மானத்தை நமது மூளையிடம் சொல்ல வேண்டும். ஏன் என்றால், நமது மூளையை விட உலகில் வேறொரு அலாரமே இல்லை என்பதுதான். நமது மூளையிடம் இதனைக் கூறிவிட்டால் அது உரிய நேரத்தில் ஹார்மோன்களை சுரந்து அலாரம் அடிக்கும் முன்பே நம்மை அடித்து எழுப்பி விடும் என்பதுதான்.

அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திரிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தோடு படுப்பவர்களுக்கு அந்த நேரத்துக்கு முன்பாகவே ஹார்மோன்கள் சுரந்து உடலுக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து எழுப்புகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே போல, எந்த நிர்பந்தமும் இல்லாமல் படுக்கைக்குப் போகும் நபர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பதே இல்லையாம்.

சூரிய ஒளியும் எழுப்பும்

உங்கள் படுக்கை அறை, சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அமைக்கப்பட்டால் விடிந்ததுமே நீங்கள் எழுந்திரிக்க முடியும். அதாவது, காலையில் விடிந்ததும் சூரியன் உதயமாகும் போது அதன் ஒளி அல்லது விடியும் போது அந்த வெளிச்சம் உங்கள் அறைக்குள் வந்தால், உங்களது உறக்கம் கலைந்து உங்களால் எளிதாக எழும்ப முடியும். அதற்கும் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன் தான் காரணம்.

அடிக்கடி மாற்றம் கூடாது

தினமும் ஒரே நாளில் எழுவதை வழக்கமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்காக 10 மணி அலுவலகத்துக்கு 8 மணிக்குத்தான் எழுந்திருப்பேன் என்று தினமும் ஒரே நேரத்தில் எழுந்தால் அது வேலைக்கு ஆகாது. எனவே, தினமும் காலை 6 மணிக்கு எழுந்திரிக்கும் பழக்கத்தைக் கைக்கொண்டால் உங்களுக்கு எந்த அலாரமும் தேவைப்படாது. உங்கள் உடல் இயக்கமே 6 மணிக்கு உங்களை எழுப்பிவிடும். அதே சமயம் வார இறுதி நாளில் கும்பகர்ணனோடு போட்டி போடுவதால் இந்த உடல் இயக்கம் பாதிக்கப்படும்.

அலாரத்தின் ஒலியும் அவசியம்

பொதுவாகவே அலாரத்தின் ஒலி மிகவும் முக்கியம். உறங்கிக் கொண்டிருப்பவர்களை மெதுவாக தட்டி எழுப்பும் வகையில்தான் இந்த அலாரத்தின் ஒலி இருக்க வேண்டுமே தவிர, பட்டாசு வெடிப்பதை போல இருக்கக் கூடாது.

மேலும், அலாரத்தின் ஒலியைக் கேட்டு மெதுவாக எழுந்து அதனை அணைக்கும் போது உறக்கம் கலைவதுதான் நல்ல வழியாகும்.

செய்யச்கூடாதவை

தூங்கி எழுந்ததுமே அலறி அடித்துக் கொண்டு வேலைகளை செய்ய ஓடக் கூடாது. உடல் உறக்கத்தில் இருக்கும் போது நமது ரத்த ஓட்டத்தின் வேகம் மாறுபடும். எனவே எழுந்து சில நிமிடங்கள் உட்கார்ந்து நிதானம் அடைந்தபிறகு எழுந்து செல்லலாம்.

காற்றோட்டமான இடத்தில் உறக்கம்

இரவில் காற்றோட்டமான இடத்தில் உறங்கினால் காலையில் விரைவாக எழுந்திரிக்க முடியும். இல்லை என்றால், இரவு முழுவதும் சரியான உறக்கம் இல்லாமல் அவதிப்பட்டால் காலையில் கண்விழிக்க இயலாமல் அவதிப்படுவோம்.

எனவே, காலையில் வழக்கமாக எழுந்திரிக்கும் நேரத்தை விட முன்கூட்டியே எழுந்து, அன்றாடப் பணிகளை அழகாக செய்துவிட்டு பள்ளி, கல்லூரி, வேலைக்கு விரைவாக செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் மேற்கண்ட ஏதேனும் ஒன்றை முயற்சித்துப் பாருங்கள்.

English Summary: How to Wake up early in the morning Published on: 22 December 2018, 02:44 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.