காலை முதல் மாலை வரை, கோடை வெயில் கண்ணைக் கட்டும் அளவுக்கு வாட்டி வதைப்பது ஒருபுறம் என்றால், இரவு வேளைகளில் இடைவேளையின்றி நம்மை மாறி மாறிக் கடித்து உயிரை வாங்குகின்றன இந்தக் கொசுக்கள்.
மெகா பிரச்னை (Big problem)
ஆகவே கோடை காலத்தில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடுகின்றன கொசுக்கள். கொசுக்கள் சிறிய உயிரினங்கள் என்றாலும், இவை டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்களை பரப்புவதோடு மட்டுமல்லாமல் சருமத்தில் உணர்திறன் பிரச்சனையையும் ஏற்படுத்துகின்றன.
எனவே இவற்றில் இருந்து நம்மையும், குறிப்பாகக் குழந்தைகளையும் பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதனால், கோடை காலம் என்பது நம் ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் கொசுக்கள் ஆட்சி செய்யும் பருவமாகவே மாறிவிட்டது.
வாசனை ஸ்பிரே (Fragrance Spray)
இந்த கொசுக்களிடமிருந்து தப்பிக்கக் கொசு விரட்டும் கிரீம்கள் உட்பட பல தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்துகிறோம். இதை தவிர, கொசுக்களை நம் வீட்டில் இருந்து விரட்ட மற்றொரு எளிய வழியும் உள்ளது. அது என்னவென்றால், கொசுக்களுக்குப் பிடிக்காத வாசனைகளால் நமது வீட்டை நிரப்புவது.
நம் வீட்டு சமையலறையில் உள்ள பின்வரும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி கொசுக்களை எளிதாக விரட்டிவிடலாம்.
துளசி இலைகள் (Basil leaves)
நாம் இருக்கும் இடத்திலிருந்து கொசுக்களை விரட்டத் துளசி இலைகளில் மிகவும் பயனுள்ள நன்மைகள் உள்ளன. துளசி இலையிலிருந்து வரும் வாசனை இந்த கொசுக்களுக்குப் பிடிப்பதில்லை. எனவே நம் வீட்டில் துளசி வாசனை இருக்கும் போது கொசுக்கள் நம்மைக் கடிக்க வாய்ப்பில்லை. துளசி இலைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை நமது சருமத்திலும், கொசு கடிக்க எளிதாக கிடைக்கும் பகுதிகளிலும் தடவி கொசுக் கடியிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இந்தத் துளசி எண்ணெய்யைக் கொதிக்க வைத்து, குளிர்ந்த பின் துளசி நீரில் கலந்து ஒரு ஸ்ப்ரேவையும் நீங்கள் தயார் செய்யலாம். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அதை நிரப்பி, உங்கள் வீட்டின் வாசல், ஜன்னல் போன்று எங்கு வேண்டுமானாலும் அதைத் தெளிக்கலாம்.
புதினா (Mint)
கொசுக்களுக்குப் பிடிக்காத மற்றொரு வாசனை புதினா வாசனை ஆகும். புதினாவில் வாசனை தன்மை அதிகமாக இருக்கிறது. இந்த வாசனை நமது வீட்டிலிருந்து கொசுக்களை விரட்ட உதவும். இந்த வித்தியாசமான வாசனைக் கொசுக்களை எரிச்சலைடைய செய்யும் அளவுக்குச் சிறந்தது. இந்த வாசனையை வீடு முழுவதும் இருக்குமாறு செய்ய, சில எண்ணெய் சேர்த்து ஒரு ஸ்ப்ரே தயார் செய்யலாம்.
பூண்டு (Garlic)
பூண்டின் வாசனை கொசுக்களால் தாங்க முடியாத மற்றொரு வாசனை ஆகும். எனவே நீங்கள் சமைக்கும் போது உங்கள் உணவுகளில் அதிக அளவில் பூண்டு சேர்த்துச் சமைக்கலாம். அதுமட்டுமன்றி பூண்டில் பல்வேறு ஆரோக்கிய நனமைகளும் அடங்கியுள்ளன. பூண்டை சமைக்கும் போது வரும் வாசனை முழு வீட்டிலும் பரவுகிறது. இது கொசுக்கள் உங்களை அண்டாமல் பாதுகாக்கிறது.
வேப்ப இலை (Neem leaf)
இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை விரட்டுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று வேப்பிலை ஆகும். வேப்பிலையில் இருக்கும் ஆண்டிசெப்டிக் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொசுக்களை அண்ட விடாமல் தடுக்கின்றன. வீடு முழுவதும் வேப்பிலையின் வாசனையைப் பரப்புவது கொசுக்கள் வீட்டினுள் வராமல் தடுக்கிறது.
வீட்டு முற்றத்தில் வேப்பம் மரத்தை நடலாம். சில வேப்ப இலைகளை பறித்து மாலை நேரங்களில் தண்ணீரில் கொதிக்க வைத்து, தண்ணீர் குளிர்ந்தவுடன் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி, வேப்ப நீரை வீட்டில் உள்ள திரைச்சீலைகள், சோஃபாக்கள் மற்றும் கதவுகளில் அடிக்கலாம்.
எலுமிச்சை (Lemon)
பொதுவாக மற்ற எல்லாவற்றையும் விட, எலுமிச்சைப் பழம் தனித்துவமான ஒரு வாசனையைக் கொண்டுள்ளது. இந்த வாசனை கொசுக்கள் வீட்டினுள் பிரவேசிக்க விடாமல் தடுக்கிறது.
நீங்கள் இதனுடன் சிட்ரோனெல்லா எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதை நமது வீடுகளில் பயன்படுத்தும் எண்ணெய் பர்னர்களில் சேர்த்து பயன்படுத்தலாம். இதனால் இந்த வாசனை வீடு முழுவதும் எளிதில் பரவுகிறது. வீட்டில் ஒரு கொசுவையும் உங்களால் பார்க்க முடியாது.
மேலும் படிக்க...
கொசுக்களைக் கடிக்க நீங்க ரெடியா- இது எப்படி இருக்கு!
மாம்பழம் சாப்பிட்டால் முகத்தில் பருக்கள் அதிகரிக்குமாம்- மக்களே உஷார்!
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!
Share your comments