மழை காலத்தில் (Rainy Season) முதியோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) குறைவாக இருப்பதால், சுலபமாக தொற்று ஏற்படும். வறட்டு இருமல், புளூ, சைனஸ், வைரஸ் தொற்று, செரிமான கோளாறுகள், டைபாய்டு காய்ச்சல், மூட்டு வலி, சுவாசக் கோளாறுகள் என சொல்லிக் கொண்டே போகலாம். தினசரி தேவையில் சிறிது கவனமாக இருந்தால், இதிலிருந்து அவர்களை பாதுகாக்கலாம்.
தடுப்பு முறைகள்
- மழை, குளிர் காலத்தில் தாகத்தை உணர்வது குறைவாக இருக்கும். ஆனாலும் காய்ச்சி, ஆற வைத்த வெதுவெதுப்பான நீரை அவ்வப்போது குடிப்பது அவசியம்; இது மலச்சிக்கலை தடுக்கும். மற்ற சுய தேவைகளுக்கும் வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்தலாம்
- தோல் வறட்சி, அரிப்பு ஏற்படுவதையும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் தவிர்க்கலாம்.
- இந்த சீசனில் செரிமான திறன் சற்று குறைவாகவே இருக்கும். வீட்டில் சமைத்த, சுகாதாரமான உணவையே சாப்பிட கொடுப்பதோடு, எளிதில் செரிமானமாகக் கூடிய பழங்கள், நார்ச்சத்து மிகுந்த பீன்ஸ் போன்ற காய்கறிகள், வேர்க்கடலை, முந்திரி, பாதாம் போன்ற 'நட்ஸ்' சாப்பிடக் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
- மழை காலத்தில், ஈரத் தரையில் வழுக்கி விழும் அபாயம், வயதானவர்களுக்கு அதிகம். எனவே, வீட்டு பாத்ரூமில் தரை உலர்வாக வைத்திருப்பது முக்கியம்
- பார்க்கின்சன்ஸ், ருமட்டாய்டு ஆர்த்ரடிஸ், பக்கவாதம், ஆஸ்டியோ ஆர்த்ரடிஸ் போன்றவை இந்த சீசனில் அதிக பாதிப்புகளை தரும். இதை தவிர்க்க தினசரி, வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகள், பிசியோதெரபி பயிற்சிகளை செய்வது நல்லது
- நிமோனியா பாதிப்பும் அதிகம் தாக்கும் காலம் இது. முதியவர்கள் அவசியம் அதற்கான தடுப்பூசியை போட வேண்டும்.
இதயக் கோளாறுகள் உட்பட வேறு ஏதேனும் உடல் பிரச்னைகள் இருப்பவர்கள், அதற்கேற்ற சிகிச்சையை டாக்டரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டியதும் அவசியம். ரத்த அழுத்தம் (Blood Pressure), சர்க்கரை கோளாறுகளுக்கு சாப்பிடும் மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனைப்படி தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
- மழை, குளிர் காலங்களில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் முதியவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். குடும்பத்தினரோடு சேர்ந்து இருப்பது, தொடர்பில் இருப்பது ஆறுதலான விஷயம்
- வயதானவர்களுக்கு உடல் ரீதியில் பிரச்னை வந்தால், சுய மருத்துவத்தையோ, வீட்டு வைத்தியத்தையோ சிபாரிசு செய்யாமல், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
டாக்டர் ஜி.எஸ்.சாந்தி,
முதியோர் நல மருத்துவர்,
சென்னை.
மேலும் படிக்க
மழைக்கால நோய்கள்: குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
அடிக்கடி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன?
Share your comments