கொரோனா வைரஸ் நுரையீரலை நேரடியாக பாதித்தாலும், நரம்பு மண்டலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா பாதித்தவர்களில் 30 சதவீதம் பேருக்கு நினைவாற்றல் பாதிப்புடன், பக்கவாதம், தலைவலி, சோர்வு, பலவீனம், வலிப்பு ஏற்படுகிறது. நினைவாற்றல் பாதிப்பு மிதமாக இருப்பதால், பலர் அது குறித்து மருத்துவ ஆலோசனைக்கு வருவதில்லை. அதனால், உண்மையில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு உள்ளது என அறிவது கடினம்.
துவக்கத்தில் இணை நோய் உள்ளவர்கள், அதிக நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும் எனக் கணித்தோம். ஆனால், தற்போது மிதமான வைரஸ் பாதித்த இளம் வயதினருக்கும் நினைவாற்றல் பாதிப்பு ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது.
அறிகுறிகள்
தொற்று குறித்த அதீத பயம், தனிமை, நோயின் தன்மை, உறவினர்கள், நண்பர்களுடன் சகஜமாக இருக்க முடியாதது... பயத்துடன் சேர்ந்து இயல்பாகவே தனிமை உணர்வையும், இயலாமையையும் தரும். இது நோய்க்கு பிந்தைய தீவிர மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சிகிச்சைக்குப் பின், குழப்பம், நினைவிழப்பு, பதற்றம், மன அழுத்தம் போன்றவை இதன் அறிகுறிகள்.
வயதானவர்களை விட 30 வயதிற்குள் இருந்தால், நினைவிழப்பின் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு விடலாம்.
பாதிப்பில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும்?
முறையான சிகிச்சை பெறாத, மன அழுத்தம் உட்பட அனைத்து மன பிரச்னைகளும் நினைவிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நாட்பட்ட பிரச்னைகளை கட்டுக்குள் வைக்க வேண்டியதும் அவசியம்.
மருத்துவ ஆலோசனையுடன் சிகரெட், மதுப் பழக்கத்தை தவிர்த்து, சத்தான உணவு, நல்ல துாக்கம் உட்பட ஆரோக்கியமான சூழல் இருந்தால், மூளை தன் பழைய இயல்புக்கு வந்து விடும்.
நினைவிழப்பு பாதிப்பு இருக்கும் மூன்றில் ஒரு பகுதியினர், மூன்று - ஆறு மாதங்களில் முழுமையாக குணம் பெறுகின்றனர். இன்னொரு பகுதியினர் முழுமையாக குணம் பெறாமலும், ஒரு பகுதியினருக்கு நிரந்தரமாக நினைவிழப்பும் உள்ளது.
மூளை சுருங்கி, செல்கள் அழிவதால் ஏற்படும் 'அல்சீமர்' கோளாறுக்கும், கொரோனாவால் ஏற்படும் நினைவிழப்பிற்கும் தொடர்பு உள்ளதா என ஆய்வுகள் நடந்து வருகின்றன.
கொரோனா பாதிப்பால் நரம்பியல் கோளாறு ஏற்படும் பலரின் மூளையில், அதிக அளவில் வேதிப் பொருட்கள் சுரக்கின்றன. இவர்களுக்கு பின்னாளில் 'அல்சீமர்' கோளாறு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
டாக்டர் சிவன் கேசவன்,
நரம்பியல் மருத்துவ ஆலோசகர்,
சென்னை.
95662 63333.
மேலும் படிக்க
இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளின் சிகரம் வில்வம்!
Share your comments