பலாப்பழத்தின் சுவையை விரும்பாதவர் நம்மில் எவரும் இல்லை. பலாச்சுளையை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் அதன் ருசியே தனி சுவை தான். இப்படியாக, அனைவரும் விரும்பக்கூடிய பலாச்சுளையின் உள்ளிருக்கும் பலாக் கொட்டையின் ஆரோக்கியப் பலன்கள் பற்றி இங்கு காண்போம்.
பலாக்கொட்டையில் உள்ள சத்துக்கள்
பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் புரதச் சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் பலாப்பழத்தில் நிறைந்துள்ளது. ஆனால், பலாச்சுளையின் உள்ளிருக்கும் பலா கொட்டையின் ஆரோக்கியப் பலன்கள் நம்மில் பலருக்கும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். பலாக் கொட்டைகளின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அடுத்தமுறை பலாப்பழம் சாப்பிடும் போது கொட்டைகளைத் தூக்கி எறியாமல், பயன்படுத்திப் பார்ப்பீர்கள். பலா கொட்டைகளில் உடலுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன.
பலாக் கொட்டைகளின் பயன்கள்
பலாக் கொட்டைகளை சாம்பாரில் சேர்த்து, சமைத்துச் சாப்பிடுவது வழக்கம். பலாக் கொட்டைகள் வயோதிகத்தின் காரணமாக முகத்தில் உண்டாகும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. சருமப் பொலிவிற்கும் உதவுகிறது. பலாக் கொட்டைகளை சாப்பிடும் அதே நேரத்தில், இதனை அரைத்து பால் மற்றும் தேனுடன் கலந்து பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். இதனால், முகம் பொலிவு பெறும்.
பலாக் கொட்டைகளில் அதிக அளவில் மைக்ரோ நியூட்ரியன்டுகள் மற்றும் புரதங்கள் இருப்பதால், இது சரும நோய்களைத் தடுக்கிறது. மேலும், மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. தலைமுடி உதிர்வால் அவதிப்படும் இளைஞர்களுக்கு பலாக் கொட்டை மிகச் சிறந்த தீர்வாக உள்ளது. ஏனெனில், தலைமுடியின் வேர்க்கால்களை வலுவாக்க பலாக் கொட்டை பெரிதும் உதவி புரிகிறது.
நம் உடலில் உள்ள இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. பலாக் கொட்டைகளில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், இதனை சாப்பிடுவதன் மூலம் அனீமியா உள்ளிட்ட இரத்த குறைபாடுகளைத் தடுக்க முடியும்.
பலாக் கொட்டைகளில் வைட்டமின் ஏ அதிகளவில் இருப்பதால், கண் பார்வையைத் தெளிவாக்க உதவுகிறது. இதனால், மாலைக்கண் நோய் தடுக்கப்படுகிறது. பலாக் கொட்டைகளை நன்றாக பொடி செய்து, அஜீரணம் ஏற்படும்போது இந்தப் பொடியைத் தண்ணீரில் கலந்து குடிப்பதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
மேலும் படிக்க
இந்த 4 இலைகள் போதும்: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த!
காலையில் ஓமம் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Share your comments