கடலும் அல்லாது நீர்நிலையும் அல்லாது எப்போதுமே ஈரப்பதமாகவே இருக்கும் நிலம் சதுப்பு நிலம்’. அதைச்சார்ந்துள்ள காடுகள் சதுப்பு நிலக்காடுகள் (Mangrove forest). இவற்றை "அலையாத்தி காடுகள்" என்றும் அழைப்பதுண்டு. கடல் அலைகளின் வேகத்தை கட்டுப்படுத்தி நிலத்தைக் காப்பதால் காலம்காலமாக நிலவி வரும் தமிழ்ப்பெயர் இந்த அலையாத்திக் காடுகள்.
சதுப்பு என்ற பகுப்புக்குள் ஒரு பல்லுயிர் சூழல் இருப்பதை பலசமயங்களில் நாம் கவனிக்க தவறுகிறோம். இந்த பல்லுயிர் சூழல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் உருவாக காணமாக இருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள்தான் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளாகும். இது திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 119 சதுர கிலோமீட்டர். முத்துப்பேட்டையில் உள்ள சதுப்புநிலகாடுகள் பிச்சாவரம் சதுப்புநிலகாடுகளைவிட10 மடங்கு பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலகாடுகள் இவைகள் தான். பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகள், வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் உள்ளது. பித்தர்புரம் என்றே முதலில் இந்த காடுகள் அழைக்கப்பட்டது. அதுவே மருவி பிச்சாவரம் என்று மாறியது.
'தேன்' - உலகத்தரம் வாய்ந்த முதல் பரிசோதனைக்கூடம் குஜராத்தில் திறப்பு!
சதுப்புநிலக்காடுகளின் சீரழிவு (Degradation of mangrove forests)
இன்றைய காலகட்டத்தில், மக்கள் தொகை பெருக்கத்தினாலும், அதிகபட்ச தொழில்நுட்ப பயன்பாட்டினாலும் சதுப்புநிலக்காடுகள் நாளுக்குநாள் அழிந்து வருகின்றன. சதுப்புநிலக் காடுகளின் வண்டல்களிலிருந்து 2000ம் ஆவது ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 122 மில்லியன் டன் அளவிலான கரியமில வாயு வெளியேற்றபட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
எம். எஸ். ஸ்வாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை குழுவினர் 1993ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை பிச்சாவரம் சதுப்புநிலத்தை ஆய்வு செய்து இச்சதுப்புநில காடுகளில் 79.5% சீரழிந்திருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், சுற்றுச்சூழல் சந்தையின் 2014ம் ஆண்டு அறிக்கையின் படி, சதுப்புநிலங்கள் ஆண்டுக்கு 2 சதவீதம் காணாமல் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆடுகளும் மாடுகளும் சிறு மரக்கன்றுகளை உண்பதாலும், ஏறிபொருளுக்காக மரங்களை வெட்டுவதாலும் இச்சதுப்புநிலக்காடுகள் அழிந்து வருவது மக்களின் அறியாமையாகும்.
புவி வெப்பமடைதல் (Global Warming)
கரியமில வாயு (CO2) மற்றும் பிற காற்று மாசுபடுத்திகள் வெப்பத்தை சேகரித்து பூமியை வெப்பமாக்கும் போது புவி வெப்பமடைதல் ஏற்படுகிறது. பொதுவாக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிருந்து வெளியேறும் கரியமில வாயு புவி வெப்பமடைவதற்கு காரணமாகிறது. மேலும், சதுப்புநிலங்களின் சீரழிவினால் வெளியாகும் நீல கரியமில வாயுவின் அளவும் அதிகரிக்கிறது.
மீன்வள பாதுகாப்பு சேவையில் சதுப்புநில காடுகள் (Mangrove forests Service in Fish Conservation )
சதுப்புநிலக் காடுகளில் வளர்ந்து வரும் மரங்கள் மிகக்குறுகிய காலத்தில் ஒரு பெரிய மரமாக வளரக் கூடியவை. இந்த மரங்களிலிருந்து பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி உணவாகக் கிடைப்பதால் இங்கு, கடல்வாழ் உயிரினங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இக்காடுகள் இல்லையெனில் மீன்களே இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். உலகின் 80 விழுக்காடு மீன் வளங்களை அள்ளித்தருவது சதுப்பு நிலக்காடுகள் தான்.
ஊட்டச்சத்து சுழற்சிகள் (Nutrition cycles)
சதுப்பு நிலக்காடுகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் கடல் உயிரினங்கள் அவற்றின் வாழ்வாதரத்திற்கு ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் அதன் சுற்றுசூழலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சுழற்சி செய்கின்றன. இச்சுழற்சிக்கு சதுப்புநிலகாடுகள் ஒரு வாழ்க்கை தளமாக செயல்படுகின்றன.
கடல் மாசுபாடு தடுப்பு (Marine pollution prevention)
சதுப்பு நிலங்களிலுள்ள மரங்கள் அடர்த்தியான வேர்களைக் கொண்டுள்ளன. அவை கிளைகளிலிருந்து நீண்டு வண்டல் மண் அடிவரை வளர்ந்து ஓரளவு நீரில் மூழ்கி இருப்பதால் சுவாசத்திற்கு ஆக்ஸிஜனை வழங்குவதில் வான் வழி வேர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேர்கள் மூலம் சுவாசிக்கும் தன்மையுடைய அவிசென்னியா மெனரனா (Avicennia marina) எனப்படும் தாவரம் முத்துப்பேட்டையில் உள்ள இந்த சதுப்புநிலகாடுகளில் அதிகமாக உள்ளன.
இவை தவிர இக்காடுகள் மிகச்சிறந்த வடிக்கட்டியாகவும் செயல்படுகின்றன. கரையோரப் பகுதிகளுக்கு வந்து சேரும் மக்கும் மற்றும் மக்காத பொருள்களை தனது சிறப்பு தகவமைப்பின் மூலம் வடிகட்டி மண்ணில் புதையுறச் செய்கின்றன. கூடுதலாக மண் அரிப்பு ஏற்படாமலும், புயல் மற்றும் வெள்ள அபாயத்தின் போது கடல் நீர் ஊருக்குள் புகாதவாறும் தடுக்கின்றன. புயல்காற்றின் வேகமும் இவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது.
பண்டைய காலங்களில், சதுப்புநிலக்காடுகள் கழிவுநிலங்களாக கருதப்பட்டதனால், இக்காடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியிலிருந்து கடலுர் மாவட்டத்தையும், 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜா சூறாவளியின் போது திருவாரூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டையில் உள்ள பல உயிர்களை சதுப்புநிலகாடுகள் தான் காப்பாற்றின என்றால் அது மிகையாகாது.
சதுப்புநிலத்தால் கிடைக்கப்பெறும் பாதுகாப்பு சேவைகளை கண்ட பிறகு, மக்கள் இந்த சதுப்புநிலக் காடுகளை மீண்டும் உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பதன் தேவையையும் உணரத் தொடங்கியுள்ளனர்.
தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மலர் தோட்டம் உள்ளிட்ட பல சிறு தொழில்கள் குறித்து படிக்க..
எதிர்கால சதுப்புநிலங்கள்
மேரிலாந்தின் கிழக்கு கரையில் உள்ள சதுப்பு நிலங்களில் எவ்வளவு வேகமாக மண் உருவாகிறது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சதுப்பு நிலங்களின் அதிகரிப்பு மற்றும் கரையோரத்தில் கடல் மட்டத்தை உயர்த்துவதன் மூலம் புயல் காற்றின் வேகத்தை தடுக்க முடியுமா என்ற ஆராய்ச்சியிலும் ஆய்வாளர்கள் ஈடுபட உள்ளனர்.
சதுப்புநிலக் காடுகளின் விழிப்புணர்வு (mangrove forests Awarness)
சதுப்புநிலக் காடுகளின் தனிச்சிறப்பை மக்கள் இன்னும் அறிய வேண்டும். இக்காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும் என்பதற்காகவும் சதுப்புநிலக் காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை நினைவு படுத்துவதற்காக யுனெஸ்கோ நிறுவனம் (UNESCO) ஜூலை 26ம் நாள் ஆண்டுதோறும் உலக சதுப்புநிலக் காடுகளின் தினமாக (The International Day for the Conservation of the Mangrove Ecosystem) கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும், சதுப்புநில காடுகள் அதன் அழகு மற்றும் மகத்தான ஒழுங்குமுறை சேவைகள் அடிப்படையில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சதுப்புநில காடுகளின் சீரழிவு மற்றும் இழப்பை மாற்ற, வெப்பமண்டல நாடுகள் உள்ளூர் சமூகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா மற்றும் அரசு அமைப்புகளின் ஆலோசனையின் மூலம் சதுப்புநில மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
நோய்களை தீர்க்கும் வேப்பிலையின் மருத்துவ பயன்கள்!
மனிதன் மற்றும் வன உயிரின சமுதாயத்தைக் காக்க உதவும் சதுப்புநிலக் காடுகளைக் காக்கும் பணியில் எல்லோரும் கைகோர்ப்போம் என உறுதியேற்போம். சதுப்புநிலங்களை பாதுகாத்து இப்புவியினை காப்போம்!
கோதை சேஷாத்ரி, தியாகராஜன்.T.M
வேளாண்மை அறிவியல் புலம்,
திரு.இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர் , தமிழ்நாடு- 603203.
மேலும் படிக்க....
பெண்களே தொழில் தொடங்க விருப்பமா? - ரூ.2 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அள்ளித்தரும் அற்புதமான ஐந்து திட்டங்கள்
மூலிகைகளின் அரசி துளசியின் மருத்துவ குணங்கள் தெரியுமா உங்களுக்கு!
Share your comments