1. வாழ்வும் நலமும்

நியாபக சக்தியை அதிகரிக்கும் தூதுவளையின் மருத்துவப் பயன்கள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
thuthuvalai

தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது.

தூதுவளை மருத்துவம்

தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.

  • தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

  • வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மிளகு கல்பகம் 48 நாட்கள் சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய்கள் தீரும்.

  • தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

  • தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.

thuthuvalai chatni

மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து. தூதுவளைக் காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் கற்பக முறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும்.

தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும்.

தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், கண் நோய்கள் நீங்கும். தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.

புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிகளை குணமாக்க பயன்படுகிறது.

  • சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

  • தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

thuthuvalai fruit

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும்.

ஆஸ்துமா நோய்க்கு அதிமருந்தாகும் தூதுவளை

ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும்.

இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும். பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும்.

thuthuvalai benefits

இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும். தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும். தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை சாறு மருத்துவ பயன்கள்

  • தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

  • தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளால் புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

  • சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளை மூலம் அதிக நன்மைகளை  அடைய முடியும்.

மேலும் படிக்க...

சுரைக்காய் ஜூஸை அதிகமாகப் பருகினால் மரணமும் நிகழலாம்-எச்சரிக்கை!

Salt : உயிர்வாழ உப்பும் அவசியம்- உணர்ந்துகொண்டால், நோய்கள் நமக்கில்லை!

Amla benefits: குளிர்கால சிக்கல்களிலிருந்து உங்களை காக்கும் "நெல்லிக்கனி"- இயற்கையின் வரப்பிரசாதம்!!

உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறந்த உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் குளிர்கால உணவுகள்! நீங்களும் சாப்பிடுங்க!

English Summary: Medical benefits of the Thoothuvalai Published on: 17 September 2018, 11:15 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.