பல நாடுகளில் கிழங்குப் பயிர்கள் இன்றியமையாத உணவுப் பயிராகும். வெப்பமண்டல நாடுகளில், பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். அவர்களின் உணவு தேவைக்காக வழங்கப்படும் முக்கிய பயிர்கள் கிழங்குப் பயிர்களாகும். கிழங்குப் பயிர்களில் மாவுச் சத்துக்கள் மட்டுமின்றி நார்ச்சத்து, கரோட்டின்கள், வைட்டமின்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் தாதுக்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
அந்த வகையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள மத்திய கிழங்குப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை சார்ந்த முனைவர்கள் எ.என்.ஜோதி மற்றும் து.கிருஷ்ணகுமார் ஆகியோர் சர்க்கரை வள்ளிக்கிழங்கிலுள்ள ஊட்டசத்து பண்புகள் என்ன? அவற்றிலுள்ள நன்மைகள் என்ன? என்பது குறித்த பல தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
ஒரு மாவுச்சத்து நிறைந்த உணவுப் பயிராக அங்கீகரிக்கப்பட்டாலும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்த இயற்கை உணவாக உள்ளது. ஆரஞ்சு சதை கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை வழங்குகிறது, ஏனெனில் இது இயற்கையாகவே பீட்டா கரோட்டினை கொண்டுள்ளது. இது உணவின் அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் ஆகும். சர்க்கரைவள்ளி கிழங்கில் தேவையான அளவு நார்சத்து நிறைந்துள்ளதால் குடலின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.
இதனால் மலச்சிக்கல் உள்ளிட்ட குடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இது மாலைக்கண் நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் ஆபத்தை குறைக்கும் திறன் கொண்டது. வைட்டமின் ஏ அதிகமுள்ள ஆரஞ்சு சதை கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்வதால் மாலைக்கண் நோய் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
ஊதா சதை-சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
இவற்றில் ஆந்தோசயனின் (Anthocyanin) அதிக அளவு உள்ளது. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது. ஊதா சதை கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதுடன் வாழ்க்கை முறை நோய்களையும் தடுக்க உதவும். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள அந்தோசயினின்கள் பல ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கும் செயல்பாட்டைக் கொண்டுள்ளன.
மத்திய கிழங்குப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் அதன் இலையில் உள்ள அந்தோசயினின்கள், பெருங்குடல், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் செல்கள் போன்ற பல்வேறு மனித புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இலைகள் மற்றும் கொழுந்தில் அதிக அளவு ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஊட்டச்சத்து குறைபாடுள்ள குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஊதா நிற சர்க்கரை வள்ளிக்கிழங்கு இலைகளில் ஆந்தோசயினின்கள் அதிகமாக உள்ளன. ஆந்தோசயனின் அந்தோசயினின்கள் 6000க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஃபிளாவனாய்டு பாலிபினால்களில் ஒன்றாகும். இந்த ஆந்தோசயினின் புற்றுநோய் எதிர்ப்பு தன்மைகளை கொண்டது. இதனால் இந்த ஊதா நிற சர்க்கரை வள்ளிக்கிழங்கு இலையை நாம் சாப்பிட்டு வருவதன் மூலமாக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.
கீரைக்கு இணையான சத்து, பச்சை காய்கறிகளுடன் ஒப்பிடும்போது அதிக அளவு பாலிபினால்களை சர்க்கரை வள்ளிக்கிழங்கு இலைகள் கொண்டுள்ளன. (மேலும் விவரங்களுக்கு: முனைவர் து. கிருஷ்ணகுமார், விஞ்ஞானி, (ICAR-CTCRI) ஸ்ரீகாரியம், திருவனந்தபுரம், கேரளா, மின்னஞ்சல்: krishnakumar.t@icar.gov.in)
Read more:
Share your comments