கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் பெற்றவர்கள், 12 வாரங்கள் கழித்தும் அலுப்பு, சோர்வில் இருந்து மீள முடியாமல் சிரமப்படுகின்றனர். சுவாசிப்பதில் சிரமம், 'நிமோனியா' தொற்று, மார்பு பகுதியில் வலி போன்ற பிரச்னைகள் தொடர்ந்து இருக்கிறது.
அறிகுறிகள்
வைரஸ் தொற்று குணமான மூன்று மாதங்களுக்கு பின்னும் இருமல், சுவையின்மை இருப்பதாக சொல்கின்றனர். தசைகள் வலி, உடல் வலி இரண்டும் பொதுவான பிரச்னைகள். அவசர சிகிச்சை பிரிவில் (ICU) தங்கி சிகிச்சை பெற்றவர்கள், அந்த சூழலில் இருந்து வெளியில் வந்த பின், போர்க்காலத்தில் மாட்டிக் கொண்டு வெளியில் வந்ததை போன்று, மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
பக்கத்து படுக்கையில், அறையில், உயிரிழப்பை பார்ப்பதால் பதற்றம், மன அழுத்தம் (Stress), படபடப்பு போன்ற மன நோய்கள் வருவதை தவிர்க்க முடிவதில்லை. தொற்று பாதித்து நான்கு வாரங்களுக்கு தீவிர அறிகுறிகள் இருக்கும். அதன் பின்னும் காய்ச்சல் இருந்தால், உடல் உள் உறுப்பில் வீக்கம் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். நிமோனியா, சிறுநீரக தொற்று போன்ற தீவிர பிரச்னைகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
உடல் சோர்வு
அறுபது சதவீத பேருக்கு உடல் சோர்வு பொதுவான பிரச்னையாக உள்ளது. சோர்வு இருக்கும் அனைவரையும் 'விட்டமின் - சி, டி மற்றும் தைராய்டு' பரிசோதிக்க சொல்ல முடியாது. இதற்கான காரணம், நபருக்கு நபர் மாறுபடும். ஊட்டச்சத்து மிக்க உணவு, காலை 10:00 மணிக்கு, 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் (Sun Light) இருப்பது, விட்டமின் - டி அளவை அதிகரித்து, சோர்வை போக்க உதவும்.
தவிர்க்கும் வழிகள்
உடலினுள் சென்ற வைரஸ் முழுதும் அழிக்கப்பட்ட பின், பழைய நிலைக்கு திரும்பும் நோய் எதிர்ப்பு சக்திக்கு (Immunity), எப்படி தன்னை சமன்படுத்தி கொள்வது என்பது தெரியும். முழுமையாக வைரஸ் பிடியில் இருந்து வெளியில் வந்து விட்டோம் என்று மனதளவில் நம்ப வேண்டியது முக்கியம்.
சர்க்கரை கோளாறு இருந்து, அதன் காரணமாக தீவிர வைரஸ் தொற்று பாதிப்பு என்றால், குணமான பின், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். என்ன பிரச்னை இருந்தாலும் முறையாக மருந்துகள் சாப்பிட்டு, பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.
டாக்டர் சுரேஷ் ராமசுப்பன்,
சுவாச கோளாறுகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர்,
அப்பல்லோ மருத்துவமனை, கோல்கட்டா.
மேலும் படிக்க
மன அழுத்தத்தை குறைக்கிறது விட்டமின் சி நிறைந்த பழங்கள்
வறட்சியிலும் நாவல் பழம் விளைச்சல்! விவசாயிகள் மகிழ்ச்சி!
Share your comments