கோடை காலம் என்றாலே பலருக்கு மனதில் எரிச்சல் உண்டாவது இயல்பே, காரணம் வெயிலினால் எற்படும் உடல் உபாதைகள் தான். கோடை காலத்தில் உடலின் வெப்பம் அதிகரிக்கிறது. இதனால் மனச்சோர்வு, தூக்கமின்மை, கண் எரிச்சல், முகத்தில் பருக்கள் போன்ற பல பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கின்றோம்.
கோடையில் நிறைய தண்ணீர் மற்றும் பழங்களை சாப்பிட்டு, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதோடு, ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியம். இயல்பாகவே சிலருக்கு உடலில் வெப்பமானது அதிகம் இருக்கும். அவர்கள் கோடையில் தவிர்க்க வேண்டிய சில முக்கிய உணவு வகைகள் குறித்து பார்க்கலாம்.
மசாலா உணவு வகைகள் (Spicy masala)
கார உணவுகளை கோடை காலத்தில் முற்றிலும் தவிர்ப்பது அவசியம். ஏனெனில் கார உணவுகளை சாப்பிட்டால், உடல் வெப்பமானது அதிகரிக்கும். அதிலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்ற காரத்தைத் தரும் மசாலாப் பொருட்களை இந்த கோடைக் காலத்தில் சற்று தள்ளி வைப்பது நல்லது.
அசைவ உணவுகள் (Non-vegetarian)
அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள் கோடையில் சிக்கன், நண்டு, இறால் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சிலசமயங்களில் சூட்டை கிளப்பி வயிற்றுப் பிரச்சனையான வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலில் இருந்து நீரை வெளியேற்றிவிடும். எனவே இதனை தவிர்ப்பதே நலம்.
கோதுமை (Wheat flour)
கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் இந்த நேரத்தில் உடல் வெப்பமானது அதிகரிக்கும். எனவே பகல் நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக சாதத்தை எடுத்துக் கொள்வது நல்லது.
காஃபி (Coffee)
காஃபியும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. எனவே இதனை முடிந்த வரையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்தது.
துரித உணவுகள் (Fast Foods)
பர்கர், (Burger )பிட்சா(Pizza), பிரெஞ்ச் ப்ரைஸ் (French fries) போன்றவை செரிமான மண்டலத்திற்கு கஷ்டத்தைக் கொடுப்பதோடு, சில நேரங்களில் அவை மலச்சிக்கல், புட் பாய்சன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய உணவுகள் உடலுக்கு தீமையையே கொடுக்கக்கூடியது. எனவே இது போன்ற உணவுகளை எந்த காலத்திலும் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
மாம்பழம் (Mango)
கோடைக்கால பழமாக கருதப்படும் மாம்பழம் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. அனால் அது அளவாக இருக்கும் வரை தான். மாம்பழம் அதிகம் உட்கொள்ளும் போது அவை உடல் வெப்பத்தை கிளப்பிவிட்டு, பருக்களையும் உண்டாக்கும். குறிப்பாக, உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள், இதனை தவிர்ப்பதே நல்லது.
வறுத்த உணவுகள் (Fried foods)
எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும், உடல் வெப்பம் அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையும் உண்டாகும்.
மேலும் படிக்க...
"சத்துப்பேழை” பலாப்பழம் - மருத்துவ குணங்கள் ஏராளம்!
உங்கள் ஆயுளை நீட்டிக்க இதை சாப்பிடுங்கள் போதும்!!
உங்கள் கிச்சனில் இருக்கும் கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்!
உலர் பழங்கள் (Dry fruits)
உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை தான். அதே சமயம் அதில் உடலை வெப்பப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிட வேண்டும்.
ஐஸ் க்ரீம் மற்றும் குளிர் பானங்கள் (Ice creams, cool drinks)
குளிர்ச்சியாக இருக்கும் ஐஸ் க்ரீம் மற்றும் குளிர் பானங்கள் இரண்டுமே உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது. இவற்றை சாப்பிட்டால், வாய்க்கு குளிர்ச்சியாக இருக்குமே தவிர, வயிற்றிற்கு அவை சென்றால், வெப்பத்தை தான் அதிகரிக்கும்.
இவ்வாறு சொல்லிக்கொண்டே சென்றால் பட்டியல் முடிவுக்கு வராது.. இருப்பினும் மேற்கூறிய உணவுவகைகளை அளவோடு எடுத்துகொண்டு அதனுடன் இளநீர், நுங்கு, மோர் போன்ற குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிட்டு இந்த கோடைக் காலத்தை கொண்டாடுவோம்...
Share your comments