குறட்டை விடுவது இயல்பான ஒன்றாக கருத இயலாது. உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கான அலாரமாகவும் இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறட்டை ஏற்படுவது எதனால், அதை கட்டுப்படுத்த ஏதேனும் வழிமுறைகள் உள்ளதா என்பதை இப்பகுதியில் காணலாம்.
குறட்டை விடுவது இங்கு பெரும்பாலும் இயல்பானதாக கருதப்பட்டாலும் உடன் தூங்குபவர்களும் குறட்டை சத்ததால் அவதிப்படுகின்றனர். குறட்டை சத்தம் உடன் இருப்பவர்களுக்கு எரிச்சலையும், வெறுப்பையும் உண்டாக்க கூடியதாகவும் உள்ளது.
குறட்டை வர காரணம் என்ன?
நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.மேலும் மல்லாந்து படுக்கும்போது நாக்கு சிறிது உள்வாங்கி தொண்டைக்குள் இறங்கிவிடும் காரணத்தினாலும் சுவாசப் பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை ஏற்படுகிறது.
குறட்டையினால் உடலில் ஏற்படும் பிரச்சினைகள்:
குறட்டை விடுவதை இயல்பாய் கடந்துவிடாது அதை கட்டுப்படுத்தும் முறையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தினசரி குறட்டை விடும் பழக்கம், அதிக நேரம் குறட்டை விடுதல், குறட்டையின் சத்தத்தில் ஏற்றம் இறக்கம் போன்றவை இருப்பின் மருத்துவரை அணுகுவது நல்லது.
ஏனெனில் குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும்போது மூச்சு அதிகமாக உள்ளிழுக்கப்படும்போது சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு முழுவதுமாக மூச்சு நின்றுவிட கூட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.உடல் பருமன் அல்லது அதிக எடை குறட்டை ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்றாகும். குறட்டை விடுபவர்களுக்கு இரவில் தூக்கம் கெட்டுவிடும் , காலையில் எழும்போது கடுமையான தலைவலி, உடல் சோர்வுடன் காணப்படுவார்கள். இதனால் பணி நேரத்தில் உரிய கவனத்தை செலுத்த முடியாமல் போகலாம். இதை நிலைமை தொடர்ந்து நீடித்தால் ஞாபகமறதி, நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு போன்றவை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
தடுப்பதற்கான வழிமுறைகள் :
- உடல் எடையினை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்
- தூங்கும் போது தலையினை தரைப்பகுதியிலிருந்து ஓரளவு உயர்த்திக்கொள்ளும் வகையில் தலையணையினை பயன்படுத்தலாம்
- நெஞ்சை தாழ்த்தி மல்லாக்க உறங்குவதை தவிர்க்கலாம்
- ஒரு பக்கமாக தலையை சாய்த்து உறங்குவதை தவிர்க்கலாம்
- மது, புகைப்பழக்கம் போன்றவற்றை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்
- தூக்க மாத்திரை போன்றவை மருத்துவர் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீர்கள்
- உடலில் நீர்ச்சத்து குறையும் போது சுவாசப்பாதையில் காற்றின் ஓட்டம் தடைப்படும் என்பதால் தினசரி 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்
- உறங்குவதற்கு முன் சூடான தண்ணீர், தேநீர் போன்றவற்றை அருந்தலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள முறைகளை கடைப்பிடித்தால் விரைவில் குறட்டை விடும் பழக்கத்திலிருந்து விடுபட்டிருக்கலாம் அல்லது குறைந்தப்பட்ச மாற்றம் ஏதேனும் ஏற்பட்டு இருப்பதை உணரலாம். இதனை கடைப்பிடித்தும் குறட்டை பழக்கம் நீடித்தால் மருத்துவரை அணுகி உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
மேலும் காண்க:
Share your comments