தாங்கவே முடியாத முதுகு வலி, கழுத்து, கைகளில் வலி அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் இது போன்று வலி, பக்கவாதம், மரத்துப் போவது, தசைகளில் இறுக்கம், கைகள், கால்கள், பாதம், கணுக்கால்கள், விரல்களில் உணர்ச்சியற்ற தன்மை, நடப்பதில், சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், அது முதுகு தண்டில் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம். முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்படும் போது, அது முதுகு தண்டை மட்டும் பாதிப்பதில்லை; எலும்புகளையும், திசுக்களையும் சேர்த்தே பாதிக்கிறது. இதன் பாதிப்பு தீவிரமாக இருந்தால், உடலின் பல பாகங்கள் செயலிழக்கும் அபாயமும் உண்டு.
முதுகுத் தண்டு பாதிப்பு (Spinal cord problem)
உடல் பாகங்களை செயல்படத் துாண்டும் நரம்புகளை பாதித்து, மூளையுடன் அவற்றிற்கு உள்ள தொடர்பு முழுமையாக தடைபடவும் செய்யலாம். முதுகு தண்டின் கீழ் பகுதியில் உள்ள நரம்புகளை பாதிக்கும் போது, பொதுவாகவே உடலின் வலிமை, உணர்ச்சி, உடலின் கீழ் பகுதி முழுமையாக செயலிழக்கும் அபாயமும் உண்டு. முதுகு தண்டில் அடிபட்டால், பாதிக்கப்பட்டவர் உடலளவில் மட்டுமல்ல; மனதளவிலும், பொருளாதார நிலையிலும் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இது அவரை மட்டுமல்ல; அவரின் மொத்த குடும்பத்தையும் பாதிக்கிறது.
அறிகுறிகள் (Symptoms)
முதுகு தண்டில் காயமோ, வேறுவிதமான பாதிப்போ ஏற்பட்டால், பொதுவாகவே சிலருக்கு எதிர்பாராத விதமாக வலி உடனடியாக வரும்.
சில சமயங்களில் மெதுவாக துவங்கிய பாதிப்பு பின் தீவிரமடையும். சட்டென்று ஏற்படும் பாதிப்பால், முதுகு தண்டில் வலி இருக்கும். பல நேரங்களில், முழுதாக செயலிழப்பு இல்லாவிட்டாலும் கை, கால்களை அசைப்பதில் சிரமம், சிறுநீர், மலத்தை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.
தசைகள் வலிமை இழப்பதால், பக்கவாதம் வரலாம்; இல்லாமலும் வெறும் பலவீனம் மட்டும் இருக்கலாம்.
எதிர்பாராத அதிர்ச்சி, தொற்று வியாதிகள், கேன்சர் போன்ற பல காரணங்களால், முதுகு தண்டு பாதிக்கப்படுகிறது. உடலின் வேறு உறுப்புகளில் ஏற்படும் கேன்சர், முதுகு தண்டு வரை பரவுவதும் உண்டு.
இது தீவிரமாகும் போது, ரத்தக் கசிவு, வீக்கம், அழற்சி, முதுகு தண்டைச் சுற்றி திரவம் சேருவது போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
ஆர்த்ரைட்டிஸ், கால்சியம் சத்து குறைவால் வரும் காசநோய், ஆஸ்டியோபோரோசிஸ், சாதாரண கட்டிகள், வீக்கம், தொற்று, முதுகுதண்டின் இரு பக்கத்திலும் வளைவு வளைவாக கண்ணி போல உள்ள எலும்புகள், பல காரணிகளால் இடம் பெயர்வதாலும், முதுகு தண்டில் பிரச்னை ஏற்படலாம்.
முதுகு தண்டில் அடிபட்டு காயம், பாதிப்பு ஏற்பட்டால், முழு செயலிழப்பும் இருக்கும்; சமயங்களில், உடலின் சில இயக்கங்கள் மட்டும் பாதிக்கப்படும்.
காரணங்கள் (Reasons)
முதுகு தண்டில் ஏற்படும் பாதிப்பிற்கு முதல் காரணம் சாலை விபத்து. 65 வயதிற்கு மேல் தவறி விழுவதால் பாதிப்பு வரலாம்.
வன்முறைகளின் போது துப்பாக்கி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டாலும் பாதிப்பு வரலாம்.
விளையாடும் போது தசைகளில் ஏற்படும் பாதிப்பு, நாளடைவில் எலும்புகளையும் பாதிக்கும்.
பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை இருக்கும். முதுகு தண்டைப் பொறுத்தவரை பிரச்னை தெரிந்தால், உடனடியாக சிகிச்சை பெறுவதே நல்லது.
டாக்டர் கே.கார்த்திக் கைலாஷ்,
முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்,
அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை,
சென்னை.
89399 66629
மேலும் படிக்க
நாம் ஏன் சப்போட்டா பழத்தை சாப்பிட வேண்டும்?
தூய்மைப் பணியாளர்களை காக்குமா தமிழக அரசு: விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு!
Share your comments