1. வாழ்வும் நலமும்

மன அழுத்தம் - மேலாண்மை முறைகள்

KJ Staff
KJ Staff

ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து மீள்வதற்குள், அடுத்தடுத்த பிரச்னைகள் வந்து சுமையாக இறங்கும்போது, 'ஸ்ட்ரெஸ்’ என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இப்படி, தொடர்ந்து மன அழுத்தம் நேரும்போது, உடல் சார்ந்த பல்வேறு நோய்கள் நம்மை வாட்டி எடுக்கத் தொடங்கிவிடும். 

மன அழுத்தத்தை குறைக்க சில வழிமுறைகள்

  • அதிகாலை எழும்போதே புன்னகையுடன் எழலாம். முடிந்தவரை புன்னகையுடன் அன்றைய பொழுதைக் கழிக்கலாம். புன்னகையே மன அழுத்தத்துக்கு முதல் மருந்து. 
  • அதிகாலை எழுந்து அமர்ந்தபடியே, நாம் மகிழ்ச்சியுடன் வாழ வாய்ப்பளித்து நம் விருப்பங்களை அடைய உதவிய இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லலாம். நமக்கு உதவும் நண்பர்களுக்கும் மனதளவில் நன்றி சொல்லலாம். நன்றி சொல்வது மன அழுத்தம் வராமல் வைத்திருக்கும்.
  • எழுந்ததுமே செல்போன் ஒளித்திரையைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். குறிப்பாகத் தலைமாட்டில் செல்போன் வைப்பதைத் தவிருங்கள். 
  • வீட்டில் உள்ள எல்லோருக்கும் இயந்திரத் தனமாக இல்லாமல் மனப்பூர்வமாக இதயத்தில் இருந்து ‘குட் மார்னிங்’ சொல்லலாம். 
  • செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருந்தால், நல்ல செய்திகளை முதலில் தேடிப்படிக்கலாம். நம்மை முதலில் டென்ஷன் ஆக்குவது பொதுவாக செய்திகள்தான் என்கிறது ஓர் ஆய்வு! பஸ் கட்டண உயர்வு என்றதும் மனம் கோபப்படுகிறது. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற ஆதங்கம் இயலாமையாக மாறி அழுத்தம் ஏற்படுகிறது. 
  • காலை சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடம் நிற்கலாம் அல்லது நடக்கலாம். புதிய சிந்தனைகள் தோன்றும். 
  • காபி அல்லது டீ குடிக்கும்போது ரசித்துக் குடிக்கலாம். எந்த வேலையாக இருந்தாலும் ரசித்துச் செய்தால் அது சுமையாகத் தெரியாது.
  • நிற்கும்போதும் நடக்கும்போதும் அன்று செய்ய வேண்டிய வேலைகளை மனதில் வரிசையாகப் பட்டியலிடலாம். மறதியால் ஏற்படும் டென்ஷனைத் தவிர்க்க இது உதவும்.
  • யோசித்த செயல்களை, வேலைகளை உடனடியாக ஒரு நோட்டில் அல்லது டைரியில் எழுதலாம். செய்ய வேண்டிய வேலைகளை எழுதுபவர்கள், மன அழுத்தத்தில் இருந்து தன்னைக் காத்துக்கொள்கின்றனர். 
  • சில பாடல்களைக் கேட்டால் சட்டென மனம் உற்சாகம் கொள்ளும். அப்படி நல்ல நினைவுகளை உருவாக்கும் 10 பாடல்களைத் தேர்வுசெய்து அவற்றை தினமும் கேட்கலாம். 
  • வீட்டிலிருந்து கிளம்பும்போது அலுவலகத்துக்குக் கொண்டு செல்லவேண்டிய பொருள்களை எடுத்திருக்கிறீர்களா என்பதைச் செக் செய்துவிட்டு கிளம்புங்கள். எதையேனும் மறந்துவிட்டால் தேவையற்ற டென்ஷன் ஏற்படும். உங்களது வாகனத்தில் போதுமான எரிபொருள் உள்ளதா என்பதையும் கவனிப்பது அவசியம். 
  • ஓர் இடத்துக்குச் செல்ல பயண நேரத்துக்கு 10 நிமிடம் முன்னரே கிளம்புங்கள். இடையில் ஏற்படும் தாமதங்களால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.
  • பணியிடத்தில் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுவது முக்கியம். இதனால் உடன் இருப்பவர்களால் ஏற்படும் சவால்களைத் தவிர்க்கலாம். 
  • நன்றாக வேலை செய்ததற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அங்கலாய்ப்பதைத் தவிருங்கள். எல்லோரும் நம் வேலையைப் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவசியமற்றது.
  • காலை 11 மணிவரை ஃபேஸ்புக்குக்குள் போகாமல் இருக்கலாம். இதனால் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். 
  • வீட்டில் குழந்தைகளுடன் விளையாடலாம். கொஞ்சம் பெரிய குழந்தைகளாக இருப்பின் படிப்பைத் தவிர மற்ற விஷயங்கள் பேசலாம். 
  • இரவு தூங்கப் போவதற்கு முன் நல்ல இசை, நல்ல நூல், நல்ல தகவல்கள் மனதுக்குள் செல்வது நிம்மதியாகத் தூங்க வைக்கும்.
  • இரவு விரைவாகத் தூங்கச் செல்வது முக்கியம். அதிகபட்சம் இரவு 11 மணிக்கு மேல் விழித்திருக்க வேண்டாம்.
  • இன்னொருவரின் செயலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபடலாம். நிதானமாகச் சிந்தித்து பதிலளிப்பதன் மூலம் மன அழுத்தம் ஒதுங்கி நிற்கும். 
  • எந்தச் செயலுக்கும் ‘ரியாக்ட்’ செய்வதை விட, ‘ரெஸ்பாண்ட்’ செய்யும்போது நமக்கு மரியாதை அதிகரிக்கும். அதனைத் தொடர்ந்து செயல்படுத்தும்போது நம்மால் பிறருக்கும் மன அழுத்தம் வராது. 
  • எப்போதும் மன அழுத்தம் வராமல் இருக்க நிதானமாக, நிறுத்தி ஆழமாக சுவாசித்தாலே போதும். எண்ணங்களில் நிதானம் இயல்பாக வந்துவிடும்.
  • பேருந்தில் நீண்ட தூரப் பயணம் போகலாம். அதுவும் பகல் பயணமாக இருக்க வேண்டும். வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்லலாம்.
  • தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மனிதர்கள் கண்ணில் படும்படி இருந்தால் மனம் லேசாகும்.
  • செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப் போடாதீர்கள். வேலைகளைத் தள்ளிப்போடுவதால் ஏற்படும் மன அழுத்தம் பெரியது. 
  • உடனடியாக முடிக்க வேண்டிய வேலை எதுவோ அதில் கவனம் செலுத்தலாம். 
  • மாலை வீட்டுக்கு வந்த உடன் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் சில நிமிடங்கள் உரையாடலாம். அன்றைய நிகழ்வுகளில் சுவாரஸ்யமானவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம். 
  • மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொள்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை. அன்பு என்பதே குறைகளுடன் ஏற்றுக் கொள்வதுதான். ஆகவே, இல்லத்தில் உள்ளவர்களைக் குறை காணாமல், அன்பாகச் சரிசெய்ய முயலலாம்.
  • பொருளாதாரத்தில் கொஞ்சம் விழிப்பு உணர்வு தேவை. நம் வருமானத்துக்குள்ளாக செலவுகளை வைத்துக்கொள்வது மாதாந்திர மன அழுத்தத்தைக் குறைக்கும்.
  • ஆன்மிக நம்பிக்கை இருந்தால் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம். அங்கு அமைதியாக அமர்ந்திருங்கள். யாராவது யாருக்காவது சொல்லும் நல்வார்த்தைகள் நம்பிக்கையை உருவாக்கும்.
  • மன அழுத்தத்துக்குக் காரணமானவர்களிடம் இரண்டு நாள்கள் கழித்து சாதாரணமாகப் பேசலாம். அழுத்தத்தில் இருக்கும்போது தொடர்ந்து போன் செய்துகொண்டே இருக்கக் கூடாது. 
  • எதுவாக இருந்ததாலும், ‘விடுங்கள் பார்க்கலாம்’ என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டால் எதுவும் உங்களைப் பாதிக்காது.
  • மூன்று மந்திர வார்த்தைகளைக் கடைபிடியுங்கள். ‘வாட் நெக்ஸ்ட்’, ‘வாட் பெஸ்ட்’, ‘வாட் எல்ஸ்’. எந்த நெருக்கடியான சூழலிலும் இந்த வார்த்தைகளைப் பொருத்திப் பாருங்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
English Summary: Stress Management Published on: 13 October 2018, 06:01 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.