வேகமாக நகரும் உலகில் முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல வகையான நச்சுக்கள் சேரத் தொடங்குகிறது. மேலும் இது பல்வேறு வகையான உடல் பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக அமைந்து விடுகிறது. உதாரணமாக உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த பிரச்சனைகளை முற்றிலுமாகத் தவிர்க்க உடலில் சேர்ந்துள்ள நச்சுத் தன்மைகள் மற்றும் அழுக்கை உடனே நீக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
நச்சுக்களை நீக்க
உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை நீக்க, ஒருசில பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மிகச் சிறந்த பலனைத் தரும். இவை நம் உடலில் தேங்கியுள்ள அழுக்குகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. இது மட்டுமின்றி உடல் எடையையும் குறைக்க முடியும். இப்போது, உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் பானங்கள் குறித்து காண்போம்.
இஞ்சி தேன் கலந்த பானம்
சிறிதளவு இஞ்சியை நன்றாக அரைத்து, அதன் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறி விடும். ஒரு சிலர் காலையில் குடிக்கும் டீயில் இஞ்சியை சேர்த்துக் கொள்வார்கள். இப்படிச் செய்வதாலும் உடல் சுத்தமாகும் . இஞ்சியை நீர் சேர்த்து, நன்றாக காய்ச்சி வடிகட்டிய பின், தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் கழிவுகள் சேராமல் இருக்கும்.
கேரட் எலுமிச்சை பானம்
கேரட்டுடன் சிறு துண்டு இஞ்சி மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு நீர் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பானத்தை வாரத்திற்கு ஒருநாள் குடித்தாலே போதும். உடலில் தங்கி இருக்கும் நச்சுக்கள் வெளியேறி விடும்.
இலவங்கப்பட்டை தேன் கலந்த பானம்
இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த பானம் உடலில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்வதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. இலவங்கபட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய உதவுகிறது. தேனில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை இரண்டின் உடைய கலவையும், நம் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புதினா வெள்ளரி பானம்
புதினா மற்றும் வெள்ளரிக்காய் பானத்தை குடித்தால், உடலில் சேரும் அழுக்குகளை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. வெள்ளரிக்காயில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. கோடை காலத்தில் இதனை சாப்பிட்டால், நீண்ட நேரத்திற்கு உடலில் நீர்ச்சத்தை குறையாமல் வைத்திருக்க உதவும். புதினா இலைகளில் பல்வேறு வகையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பொதுவாகவே இந்த பானம் மிகவும் ஆரோக்கியமானது.
புதினாவை நன்றாக நறுக்கி வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும். அதில் துருவிய வெள்ளரிக்காயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து இந்தச் சாற்றை வடிக்கட்டி குடிக்க வேண்டும்.
நெல்லிக்காய் இஞ்சி பானம்
முழு நெல்லிக்காயுடன், சிறிய துண்டு இஞ்சி மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, வடிகட்டி தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலக் கழிவுகள் வெளியேறி விடும். மேலும், வயிறு சுத்தமாவதோடு, பிற நச்சுக்களும் வெளியேறி விடும்.
மேலும் படிக்க
எலும்புகளை பலப்படுத்த தயிரை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
Share your comments