நேர மேலாண்மையின் அடிப்படையே திட்டமிடல்தான். மாதச் சம்பளம் வாங்குவோர் அனைவரும் சம்பளம் வந்ததுமே வீட்டுக்கடனுக்கு, டூவீலர் கடனுக்கு, மளிகைக்கடைக்கு, பால், பேப்பர் என ஒவ்வொரு செலவுக்கும் பகிர்ந்துவைத்து பட்ஜெட் போட்டு செலவு செய்வார்கள். ஆனால், அதே மாதச் சம்பளம்போல்தான் நமக்குக் கிடைத்துள்ள 30 நாள்கள் என்பதை உணர மாட்டார்கள். இந்த 30 நாள்களை எப்படிச் செலவு செய்வது என்பதைத் திட்டமிட வேண்டும். 30 நாள்களுக்குள் ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமென்றால், அதற்கென தினமும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்படிப் பகிர்ந்து செய்தால் அந்தச் செயலை எந்தவிதப் பதற்றமும் இன்றி முடித்துவிடலாம்.
பின்பற்ற வேண்டியவை
8 மணி நேரத் தூக்கம்: இயற்கையும்கூட ஓய்வெடுப்பதற்காகத்தான் இரவு/பகல் வருகிறது. அனைத்து உயிர்களும் அதை முறையாகப் பின்பற்றும்போது நாம் மட்டும் விதிவிலக்காக இருப்பது எந்த விதத்தில் சரி? இரவுத்தூக்கம் 7 - 8 மணி நேரமாவது அவசியம்.
சமூக வலைதளப் பயன்பாடு: தூக்கம் கெடுவது என்றாலே அதில் சமூக வலைதளங்களின் பங்கு அதிகம். தொலைக்காட்சி, இணையம், வாட்ஸ்அப் என அனைத்துக்கும் குறிப்பிட்ட கால அளவு மட்டுமே ஒதுக்கிச் செயல்படுங்கள். உங்களுக்கான நேரத்தை இவற்றின் கையில் கொடுத்துவிட வேண்டாம். இணைய பயன்பாடு என்பது நமது தேவைக்கானதாக இருக்கட்டும்.
தேவையானதற்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்: நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதற்கான பணிகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். இசையமைப்பாளராக விரும்பினால், இசைக் கருவிகளோடு அதிக நேரம் செலவிடுங்கள். எழுத்தாளராக விரும்பினால் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் அதிக நேரம் ஒதுக்குங்கள். அதை ஒரு பழக்கமாகவே மாற்றுங்கள்.
கால நிர்ணயம்: இன்றைய காலம், டெட்லைன் வைத்துச் செயல்படும் காலம். நாம் எந்த வேலையைத் தொடங்கினாலும் அதைச் செய்து முடிப்பதற்கான காலக்கெடுவைத் தீர்மானித்துவிட்டு செயல்படுங்கள். அப்போதுதான் நேர விரையத்தைத் தவிர்க்க முடியும்.
முக்கியமான பணிக்கு முதல் மரியாதை: ஒரு நாளில் நாம் செய்து முடிக்க பல்வேறு வேலைகள் இருக்கலாம். அவற்றில் எந்த வேலை முக்கியமோ, அதை முதலில் முடியுங்கள். அப்போதுதான் நமக்கு மனநிம்மதி கிடைக்கும். அடுத்த பணிகளை துடிப்பாகச் செய்ய மனம் ஒத்துழைக்கும்.
`முடியாது' சொல்லப் பழகுங்கள்: செய்து முடிப்பதற்கான கால அவகாசம் இருக்கிறதா என்பதைக் கணக்கிடாமலேயே பல்வேறு வேலைகளைச் செய்ய ஒப்புக்கொள்வதால், பெரிய நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். எனவே, செய்ய இயலாத வேலைகளுக்கு `முடியாது' என்று சொல்லிப் பழக வேண்டும். நேர மேலாண்மையில் இதுவும் முக்கியம்.
வேலையில் ஈடுபாடு: ஒரு வேலையில் இறங்கினால் அதை முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். நம் சிந்தனையை அதன் மீது ஒருமுகப்படுத்த வேண்டும். அப்படிச் செயல்பட்டால் வேலையைச் சரியாக முடிப்பதோடு, சரியான நேரத்துக்குள் செய்து முடிக்கலாம்.
விரும்பி பணிசெய்தல்: செய்யும் வேலையை முழு விருப்பத்தோடு செய்ய வேண்டும். அப்படி விருப்பத்தோடு செய்யும்போது அந்த வேலை நமக்கு மகிழ்ச்சி தருவதாகவும், பொழுதுபோக்குபோலவும் அமையும்.
உடற்பயிற்சி: நேர மேலாண்மை நன்முறையில் செயல்படுத்தப்பட்டாலே மன அழுத்தம், பணிச்சுமை குறைந்து உடல் ஆரோக்கியத்தை நன்றாகப் பேண முடியும். அதுபோக, விடியற்காலையில் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். உடல்நலம்தான் நம் செயல்பாடுகள் அனைத்துக்கும் அச்சாணி என்பதை மனதில்கொண்டு, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
வார விடுமுறை ஓய்வுக்கானதே: வார விடுமுறையை ஓய்வுக்காகப் பயன்படுத்துங்கள். அப்போதுதான் அடுத்த வாரத்தைப் புத்துணர்வுடன் தொடர முடியும். வார நாள்களை நன்முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்தும்போது, வார விடுமுறையை மனஅழுத்தமில்லாமல் ஓய்வுக்குச் செலவிட முடியும்.
Share your comments