காலையில் நம்மில் பெருபாலானோர் இட்லி, தோசை, பொங்கல், வடை, கிச்சடி, பூரி உள்ளிட்ட உணவுகளில் ஏதாவது ஒன்றை அவசர அவசரமாக வயிற்றில் அடைத்துவிட்டு அலுவலகத்துக்குப் பறந்துவிடுவோம். இவை செரிமானமாக குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் பிடிக்கும். இதனால் அடிக்கடி புளிப்பு ஏப்பம், வயிற்று அசூசை ஏற்படலாம். ஆனால் கிராமங்களில் விவசாயிகள் பலர் காலை நீராகாரம் அருந்திச் சென்று மதியம்வரை ஏர் பிடித்து வேலை செய்வர். இது எவ்வாறு சாத்தியமாகிறது, நீராகாரத்தின் பலன்கள் என்னென்ன, காலை உணவாக இவற்றைச் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் உள்ளன எனப் பார்ப்போமா?
நீராகாரம்
கம்மங்கூழ் தொடங்கி நீர்மோர் வரை அனைத்துமே நீராகார வகையைச் சேர்ந்தவையே. திட உணவுக்கு மாற்றாக நீராகாரத்தை காலை உணவாக உட்கொண்டால் உடலுக்கு ப்ரோபயாடிக் சத்து கிடைப்பது மட்டுமல்லாமல் செரிமானமும் எளிதாகிறது.
பண்டைய காலத்தில் நீராகாரம் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களது உணவாகத் திகழ்ந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெருநகரங்களில் கணினி முன் அமர்ந்து பணி செய்யும் ஊழியர்களுக்கும் இது அவசியமான உணவாகிறது.
அரிசி மாவில் தயாரிக்கப்படும் உணவுகள் அதிகளவு கார்போஹைட்ரேட்டை உடலில் சேர்ப்பதால் உடலில் வெற்று கலோரிகள் அதிகமாகச் சேர்க்கப்படும். இதனால் பகலில் பணிச் சோர்வு, தூக்கம் ஏற்படும். நீராகாரம் உடற்தசைகளுக்கு வெகுவிரைவில் சத்துக்களை கொண்டு சேர்ப்பதுடன் கொழுப்பு, கொலஸ்ட்ரால் சேராமல் உடலைப் பாதுகாக்கிறது.
வளரும் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக உள்ள நீராகாரங்களைத் தயாரிப்பதும் சுலபம். இவற்றுடன் மோர் மிளகாய், மாங்காய் கீற்று, அப்பளம், சின்ன வெங்காயம் உள்ளிட்டவற்றை சேர்த்து சாப்பிட்டால் நீராகாரத்தின் சுவை அதிகரிக்கும்.
மசாலா மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளின் தாக்கத்தில் இருந்து உடலை டீடாக்ஸ் செய்யும் உணவாக அமையும் நீராகாரங்கள் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாக உள்ளது.
மேலும் படிக்க
Share your comments