பனங்கிழங்கு குறித்து அறிவோம் வாருங்கள்
பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துள் செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்கு உருவாகின்றது. இதுவே பனங்கிழங்கு (palm sprouts) ஆகும். அதன் ஒரு முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம் கொண்டதாகவும் இருக்கும் இக்கிழங்கு ஒரு அடி வரை நீளமானது. பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் (Seeds) சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அதனைக் கிண்டி எடுத்துப் பயன்படுத்துவர்.
புழுக்கொடியல்
அவித்த பனங்கிழங்கை வெய்யிலில் காய வைத்துப் பெறப்படும் பொருளை புழுக்கொடியல் என்று கிராமப்புறங்களில் அழைக்கிறார்கள். இந்தப் புழுக்கொடியலை நேரடியாகவே உண்ணலாம். இது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கக் கூடியதாகும். பஞ்சம் போன்ற பிரச்னைகள் தமிழகத்தில் தலைவிரித்தாடிய போது ஏழை எளிய மக்கள் இந்த உணவினை சாப்பிட்டு உயிரைத் தக்க வைத்தனர் என்பது குறிப்பிடவேண்டியவை.
இத்தகைய பனங்கிழங்கானது (palm sprouts) மிகவும் குளிர்ச்சியானது. இந்தக் குளிர் காலத்தில் உடல் வெப்பத்தை (Body Temperature) சீராக வைத்திருக்க இது உதவும். வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் ஆற்றலும் பனங்கிழங்கில் உள்ளது. பனங்கிழங்கை அவித்து காய வைத்து அதன் பின்னர் பொடித்து, அதில் சர்க்கரை மற்றும் தேங்காய் சேர்த்து சாப்பிட, மிகவும் சுவையாக இருக்கும்.
பனங்கிழங்கு தோசை
வேக வைக்காத பணக்கிழங்கை வெயிலில் காயவைத்து, அரைத்து மாவாக்கி சேகரித்து வைத்துக் கொண்டு, தேவைக்கேற்ப தோசையாகவோ, உப்புமா செய்தோ சாப்பிடலாம். இவ்வாறு நாம் பனங்கிழங்கை உட்கொள்வதன் மூலம், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மருத்துவ பயன்கள் கொடுக்கும் பனங்கிழங்கு
- பனங்கிழங்கில் இரும்புச் சத்து (Iron) அதிகமாக உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.
- பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் (Turmeric) சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை,மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் அதிகரிக்கும்.
- பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் (Coconut Milk) சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும்.
- பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும் போது, விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.
- வயிறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
வாயு தொல்லை கொண்ட பனங்கிழங்கு
பனங்கிழங்கு வாயு தொல்லை (Gas) உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம். அதே போல், பனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. எனவே இதைச்சாப்பிட்டப் பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும்.
இத்தனை நாட்கள் பனங்கிழங்கினை விரும்பி நாம் சாப்பிட்டு வந்திருந்தாலும், இனி நாம் அதன் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களை தெரிந்துக்கொண்டு பயனடைய உள்ளோம் என்பது சந்தோஷமே.
M.Nivetha
nnivi316@gmail.com
மேலும் படிக்க
Share your comments