இன்றைய நவீன யுகத்தில், நோய்கள் பலவும் மனிதர்களை தாக்கி வருகிறது. அதில் ஒன்று தான் அல்சர் எனும் வியாதி. பொதுவாக, சரியான நேரத்திற்கு உணவு உண்ணவில்லை என்றால், அல்சர் வந்துவிடும் என்ற கருத்து மக்களிடையே பரவலாக பரவியுள்ளது. இது சரியா அல்லது தவறா? என்றும், அல்சர் எதனால் வருகிறது என்றும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
அல்சர் எப்படி உருவாகிறது?
நம் குடலின் மேற்பரப்பில் மியூகோஸா படலம் என்ற சவ்வு உள்ளது. இது நாள்பட்ட மற்றும் எரிச்சல் உண்டாக்கும் அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு சிதைந்து விடுகிறது. அதிகளவிலான அமில சுரப்பு மற்றும் பெப்சின் (செரிமான என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகள் உண்பதாலும் குடலில் புண்கள் தோன்றும். வயிற்று லைனிங்கில் ஓட்டை ஏற்பட்டு, அதன் பிறகு புண்கள் உருவாகும். இதற்கு முக்கிய காரணம் அவசரம், மன அழுத்தம், மனப் பதற்றம், மனக் கவலை, பொறாமை ஆகும்.
அதோடு காரசாரமான உணவு மற்றும் மசாலா அதிக அமிலத்தை சுரக்க வைத்து வயிற்றுக் குடலில் புண்களை உண்டாக்குகிறது. வயிற்றில் அல்சர்களை தோற்றுவிக்கும் இன்னொரு மிக முக்கியமான காரணம் Helicobacterpylori (ஹெலிகோபேக்டர் பைலோரி) எனும் ஒரு வகையான பாக்டீரியா. இந்த வகை பாக்டீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களால் பரவுகிறது. வயிற்றில் அமிலத்தை நீர்க்க வைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்குகிறது. பின்னர், நாளடைவில் இந்த கேஸ்ட்ரைடீஸ், அல்சராக மாறுவதற்கு, எச்.பைலோரி என்ற கிருமிகள் உதவுகிறது.
அதிக அளவில் மது அருந்துதல், புகைப்பிடித்தல், தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், நேரம் காலமின்றி உணவு உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகளை கழுவாமல் உணவு உண்பது, கைவிரல் நகத்தை கடிப்பது, அதிக டீ மற்றும் காபி குடிப்பது, ஆஸ்பிரின் போன்ற மருந்துகள், மன அழுத்தம், டென்ஷன், மனபரபரப்பு, அடிக்கடி உணர்ச்சி வசப்படுவது இப்படி பல காரணங்களால் அல்சர் வந்து விடுகிறது.
மேற்கண்ட அசுத்தமான பழக்கங்களை தவிர்த்தால், வயிற்றில் புண் வருவதை தவிர்த்து விடலாம். மேலும், சரியான நேரத்தில், அதாவது பசிக்கும் போது கால தாமதம் செய்யாமல் உடனே உணவு உண்ண வேண்டும். உணவு உண்பதற்கு 30 நிமிடங்கள் முன்பாகவும், உணவு உண்ட பிறகு 30 நிமிடங்கள் கழித்தும் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
மேலும் படிக்க
காளானில் இவ்வளவு சத்துக்களா: தெரிஞ்சா விட மாட்டிங்க!
சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு: சாதத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க!
Share your comments