நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தூக்கம் மிக மிக அவசியம். ஆனால், அந்த தூக்கம் இரவு வேளையில் மட்டுமே இருக்க வேண்டும். பகலில் தூங்கினால், அதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு, அலுவலகத்தில் மதிய உணவை முடித்தவுடன் தூக்கம் கண்களைச் சொருகும். இதனால், பலரும் மதிய நேரத்திற்கு பிறகு, வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தள்ளாடுகிறோம். மாலை நேரத்தில் தேநீர் இடைவேளை வர 2 மணிநேரம் ஆகும். அந்த 2 மணி நேரம் 2 யுகங்கள் போல மெதுவாகவே கடந்து செல்லும். பின்னர், ஒரு வழியாக முகத்தினை கழுவி, தேநீர் குடித்து பிரஷ்அப் ஆகினால், அடுத்த 2 மணி நேரம் மூளை சுறுசுறுப்படையும். அதன் பிறகு சொல்லவா வேண்டும், எவருக்கும் நேரம் கடந்து போவதே தெரியாது.
மதிய வேளையில் தூக்கம்
மதிய உணவுக்குப் பிறகான இந்த மதிய தூக்கம் குறித்து உலகம் முழுக்க ஆங்காங்கே பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதற்கான காரணத்தை குறிப்பிட்டு கூற இயலாது. இதற்கான முக்கிய காரணங்கள் ஒவ்வொருவரது வயது, உடல் அமைப்பு, நோய் பாதிப்பு மற்றும் சாப்பாட்டின் அளவு ஆகியவற்றிற்கு ஏற்ப வேறுபடுகிறது. இவை என்னென்ன எனத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
சிந்தனை மற்றும் தூக்கம்
நமது மூளையில் சுரக்கும் செராட்டினான் என்கிற இரசாயனம் நமது சிந்தனை மற்றும் தூக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. நாம் மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ இருப்பதற்கு இந்த இரசாயன சுரப்பின் அளவு தான் முக்கிய காரணம். மதிய வேளையில் ஃபுல் மீல்ஸ் உணவு உண்ட பிறகு, இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். பின்னர் கணையத்தில் இன்சுலின் சுரந்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடல் உறுப்புகளுக்கு சத்தாக கொண்டு போய்ச் சேர்க்கும்.
மதிய தூக்கத்தை தவிர்க்க
அதிக புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டைக் கொண்ட உணவுகளான சிக்கன் குழம்பு, சாதம் மற்றும் பருப்பு ஆகியவற்றை மதியம் சாப்பிட்டால், செராட்டினான் அதிக அளவில் சுரக்கும். இதனால் தூக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு செரிமானம் தாமதமாகும் வாய்ப்பும் உள்ளது. இதனால் இவர்கள், 3 வேளை சாப்பாட்டை 5 வேளையாகப் பிரித்து சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மதிய தூக்கத்தை தவிர்க்க காபி மற்றும் டீ ஆகியவற்றை குடித்தால், உடனடியாக மூளை நியூரான்கள் தூண்டப்பட்டு தூக்கம் தடைபடும். ஆனால், அதிகமான கஃபைன் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். மாலையில் குறைந்த அளவு கஃபைன் பானம் அருந்துவது தான் மிகவும் நல்லது.
மதிய சாப்பாட்டுக்குப் பிறகு, மிகச் சரியாக 20 நிமிடங்கள் தூங்கி எழுந்தால், வேலைத் திறன் அதிகரிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, ஜப்பானில் சில அலுவலகங்களில் மதியம் 20 நிமிடம் தூங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இரவு 8 முதல் 9 மணிநேரம் தூங்கி எழுபவர்களுக்கு மதிய தூக்கம் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே இரவு தூக்கம் மிகவும் அவசியம்.
நமது உடலில் ஓடும் சர்காடியன் ரிதம் எனப்படும் கடிகாரம், நேரம் வந்ததும் தானாக தூக்கத்தை ஏற்படுத்தி விடும். இது மதிய தூக்கத்தை ஏற்படுத்தி உடலை புத்துணர்ச்சி அடையச் செய்யும். மதுப் பழக்கம் தூக்கத்தை பாதிக்கிறது. இரவு மது அருந்துவதைத் தவிர்த்தால் மதிய தூக்கத்தை தவிர்க்கலாம்.
மேலும் படிக்க
Share your comments