பனிக் காலம் தொடங்கிவிட்டது. காலை எழுந்தவுடன் ஜில்லென்று காற்று நம் மேல் வருடும் போது சுகமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த காலம் நமக்கு மட்டுமில்லை கிருமிகளுக்கும் கொண்டாட்டமான காலம். சரும பிரச்னைகள் முதல் உடல் சார்ந்த பிரச்னைகள் எல்லாம் அனைத்தும் ஒவ்வொன்றாக தலைதூக்கும்.
சாதாரண ஜலதோஷத்தில் ஆரம்பித்து உடல் சோர்வு, உடல் வலி. ஜுரம், தொண்டை வலி என நம் ஆரோக்கியத்தை பதம் பார்க்கும் காலம். இது ஒரு புறம் என்றால் உடலில் நீர் வற்றி சருமத்தில் எண்ணைப்பசை குறைவதால், சருமமும் வறண்டு, தோலில் சுருக்கம் ஏற்பட்டு பொலிவிழந்து காணப்படும். இவை இரண்டையும் டயட் பராமரிக்கலாம்.
பனிக்கால டயட் (Diet in Winter)
சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ள தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டும். அதை கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடிப்பது நல்லது. சருமம் பாதுகாக்கப்படுவது மட்டுமில்லாமல், சளி, இருமல் பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம்.
பழங்கள் (Fruits)
உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றிலும் நீர்சத்து உள்ளதால் நம் உடல் என்றும் இயல்பாக செயல்பட உதவும். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள், பப்பாளி ஆகிய பழங்களை ஜூசாகவோ, பழமாகவோ சாப்பிடலாம். புளிப்பு சுவை நிறைந்த பழங்களை தவிர்க்கவும். எந்த உணவாக இருந்தாலும் சூடாக சாப்பிட வேண்டும்.
வைட்டமின் சி (Vitamin C)
பனிக்காலத்தில் உடல் தட்பவெப்பத்தை தக்க வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். அடிக்கடி சூப் குடிக்கலாம். பாதாம் பருப்பு, முந்திரி, வேர்க்கடலை, அரிசி, கோதுமை கலந்த உணவுகளை உட்கொள்வதால் உடல் சூட்டை கட்டுக்குள் வைக்கும். வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமத்தின் உள் சூடு பாதுகாக்கப்படும்.
வைட்டமின் ‘பி’ குறைந்தால் கூட சருமத்தில் வெடிப்புகள் ஏற்படலாம். பால், முட்டை, இறைச்சி, மீன், வாழைப்பழம், கீரை, உருளைக்கிழங்கு, அத்திப் பழம், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற உணவுகளில் வைட்டமின் பி அளவு நிறைந்திருப்பதால், சருமத்தில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் அரை மூடி எலுமிச்சை பழச்சாறைக் கலந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேனி மினு மினுப்படைவதோடு தேவையற்ற சதை குறைந்து உடம்பு சிக் என்று இருக்கும்.
பனிக் காலத்தில் தொண்டைவலி ஏற்படும். வெந்நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் பொடி போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்தால் சளி பிடிக்காது. தொண்டை வலியும் வராது.
மேலும் படிக்க
Share your comments