நெஞ்சு வலி என்பது பொதுவாக இதய நோயுடன் தொடர்புடையதாக உள்ளது. இதயம் மட்டுமின்றி சுவாச மண்டலம், செரிமான அமைப்பு, எலும்புகள், தசைகள், பிற உடல் மற்றும் மனநல அம்சங்களை உள்ளடக்கிய பல்வேறு நிலைமைகளின் அறிகுறியாகவும் கூட இருக்கலாம். நெஞ்சு வலி என்றாலே அச்சம் கொள்ள வேண்டியதில்லை. இப்பிரச்னை எப்போதும் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தொடர்புடையதாக இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதேவேளையில் நெஞ்சு வலி லேசாக இருந்தாலும்கூட அதை புறக்கணிக்கவும் கூடாது. உங்களின் கழுத்துக்கு மேலே மற்றும் உங்கள் வயிற்றுப் பகுதிக்கு இடையே எந்த இடத்தில் வேண்டுமானாலும் நெஞ்சு வலி ஏற்படலாம். காரண காரணிகளின் அடிப்படையில் நெஞ்சு வலி பல்வேறு வகைகளில் இருக்கலாம். குத்துதல் போன்ற வலி, அதிகமான வலி, கூர்மையான வலி, எரியும் போன்ற உணர்வு, மந்தமான வலி மற்றும் இறுக்கமான/அழுத்தும் போன்ற உணர்வு இதில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
மருத்துவ அவசரத்திற்கான அறிகுறிகள்
எதிர்காலத்தில் பெரிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக நெஞ்சு வலியை எப்போதும் மருத்துவ அவசரநிலையாகக் கருத வேண்டும். மேலும் இதற்கு உடனடி சிகிச்சை தேவைப்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மூச்சுத்திணறல், குமட்டல், லேசான தலைசுற்றல், வியர்வை போன்றவை இதை கவனிப்பதற்கும் மற்றும் அவசர சிகிச்சை பெறுவதற்குமான சில முக்கியமான அறிகுறிகளாகும்.
நெஞ்சுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நெஞ்சு வலியானது இதயத்தின் நிலைகளுடன் தொடர்புடையதாக உள்ளது. உங்களுக்கு விளக்க முடியாத அளவிற்கு நெஞ்சுவலி இருந்தால், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரியான சிகிச்சையைப் பெறுவதற்கு உங்களை ஒரு மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
தற்போதைய கொரோனா காலத்தில் நிமோனியா, நாள்பட்ட நுரையீரல் தடைநோய் (சிஓபிடி), ஆஸ்துமா போன்ற சுவாசத்திற்கான காரணங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதுதவிர நெஞ்செரிச்சல், உணவுக்குழாய் கோளாறுகள், குடற்புண், கணைய அழற்சி, குடலிறக்கம், பித்தப்பை பிரச்சினை போன்றவற்றாலும் வலி ஏற்படலாம். மேலும் காயங்கள், எலும்புகள், தசைகள், நரம்புகள், விலா எலும்புகளில் பாதிப்பு, தசை பிடிப்பு, பதற்றம் மற்றும் மன அழுத்தம் மற்றும் பயத்தினால் ஏற்படும் தாக்குதல்கள் போன்றவையும் வலியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
பின்வரும் அறிகுறிகள் எதையாவது நீங்கள் அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.
- திடீரென்று ஏற்படும், கூர்மையான நெஞ்சுவலி போன்றவை மருந்துகள் அல்லது பிற நடவடிக் கைகளால் நிவாரணம் பெறவில்லையென்றால்
- மூச்சுத்திணறல் இருந்தால்
- வேகமான, அசாதாரணமான இதயத்துடிப்பு, குமட்டல், தலைசுற்றல் மற்றும் அதிக வியர்வை இருந்தால்
- உங்கள் இடது கை, தாடை அல்லது முதுகில் வலி பரவுகிறது என்றால்
- மிகவும் குறைவான ரத்த அழுத்தம் இருந்தால்
- கடுமையான அழுத்தம் மார்பு எடை மற்றும் மார்பு இறுக்கம் இருந்தால்
- காய்ச்சல், குளிர், வாந்தி மற்றும் லேசான தலைவலி இருந்தால்
மேலும் படிக்க
Share your comments