சர்வதேச சுற்றுச் சூழல்தினம் (World Environmental day) இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நாம் எத்தனையோ தினங்கள் கொண்டாடுகிறோம், கடைப்பிடிக்கிறோம். ஆனால் இன்றைய தினத்தை பெயரளவிற்கு எடுத்துக் கொள்ளாமல் உலகமே உற்று நோக்கி மிக மிக முக்கிய விழிப்புணர்வு தினமாக இத்தினத்தை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சுற்றுச்சூழல் தினம் தொடக்கம்!
நாம் இயற்கையை உண்மையாக நேசிப்போ மானால் சுற்றுச்சூழல் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வை நமக்குள் ஏற்படுத்துவது நமது தலையாய கடமையாகும். இதைக்கருத்தில் கொண்டுதான் சுற்றுச்சூழல் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய நாடுகளின் பொது சபையினால் உலகச் சுற்றுச்சூழல் தினம் 1972ம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் தினமானது ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சுழல் திட்டம் எனும் அமைப்பு சுற்றுச்சூழல் தினத்தைப் பொறுப்பெடுத்து செயல்படுத்துகிறது.
ஆபத்தாகும் தொழில்நுட்பம்!
மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சம நிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத் தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. அதி நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. ரசாயனக் கழிவுகள், தொழிற்சாலை புகை போன்றவை வளிமண்டலத்தை மாசுப்படுத்தி உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. வாகனப் புகையினாலும்,குளிர்சாதனக் கருவிகள் பயன்பாட்டினாலும், சுற்றுச் சூழல் மாசடைந்து ஓசோன் வளிமண்டலப்படலம் வலுவிழந்து சூரியனின் நேரடிக் கதிர்வீச்சின் தாக்கத்தால், பூமி அதிக வெப்பம் அடைவதற்கு காரணமாக உள்ளது. சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகமடைந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இயற்கையின் உறவு!
சுற்று சூழலை பேணி பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனித குலம் இப்போது தாராளமாக அனுபவிக்க தொடங்கிவிட்டது. ஒரு புறத்தில் வறட்சி, மறுபுறத்தில் வெள்ளக் கொடுமையும் மற்றும் சூறாவளியும் என்று இயற்கையின் அனத்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டே இருக்கின்றன. மரங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் உயிரினங்கள் இருக்காது. இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள்.
வனம் அழிப்பு!
மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் கொடூரமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலை வனம் ஆக்குவது. இது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை நாம் உணராமல் போனது ஏன்? அன்றைய காலக்கட்டத்தில் காற்றுமாசு என்பதே மிகமிகக் குறைவு. கடந்த 25 ஆண்டுகளில் தொழிற்சாலைகள், வாகனங்கள் பெருக்கம், மரங்கள், காடுகள்அழிப்பு இதன் விளைவாகக் காற்றில் மாசு கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து கொண்டேதான் உள்ளது.
காற்று மாசு!
பல விதமான மாசால், காற்று, நிலம், நீர், காடு,போன்ற இயற்கை வளங்கள் வேகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. உலகில் பத்தில் ஒன்பது பேரால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லைஎன்றொரு ஆய்வு அறிக்கை சொல்கிறது. உலக அளவில் காற்று மாசால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர். அதேபோன்று மண்வளத்தை பாதுகாப்பதும் மிக அவசியமாகும், வயல்களில் ரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் கழிவு!
பிளாஸ்டிக்குப்பை மிகமிக ஆபத்தானது, அணு குண்டை விட ஆபத்தானவை என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.ஒரு பிளாஸ்டிக் பை சராசரியாக வெறும் 10நிமிடங்கள் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் குப்பையில் எறியப்படுகிறது. அந்தபிளாஸ்டிக் குப்பை பல நூறுவருடங்கள் அழியாமல் இருந்து மண் வளத்தைக் கெடுக்கிறது. உலக அளவில் ஆண்டுக்கு 5லட்சம் கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பைகள் குளம், ஏரி, ஆறு, கடல் மற்றும் பூமியில் புதைந்து சுற்றுச்சூழலைக்கெடுப்பதோடு மட்டுமில்லாமல் கடல் வாழ் உயிரினங்கள், வன விலங்குகள், கால்நடைகள், பறவைகள் என பல்வேறு ஜீவராசிகள் பிளாஸ்டிக்கை உண்டு ஒவ்வாமை காரணமாக இறந்து விடுகின்றன.
மண் வளம்!
மேலும் கரையோரங்களில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி மனிதர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். நெகிழிப்பைகளால் ஆறுகள், குளங்கள்,ஓடைகள், ஏரிகள், நிலத்தடி நீர் என எல்லா நீர்வளமும் கடுமையாக மாசுப்படுகிறது.பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட குப்பைகளை எரிப்பதால் மிக ஆபத்தான நச்சு வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தனித்தனியே பிரித்துத் துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்கவேண்டும். இவற்றின் மூலம் மண்வளம் பாதுகாக்கப்படும்.
மரம் வளர்த்தால் தீர்வு!
ஐ.நா சபையின் கணக்கெடுப்பின் படி, இந்தபூமியில் 3லட்சத்து 4ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, ஆனால் மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்துஇப்போது வரை 46% சதவீத மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பூமியில் இருந்து 1530 கோடி மரங்கள் காணாமல் போகின்றது என்கிறது ஒரு ஆய்வு. அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும், இயல்பாகவும் வளர்கின்றன. எப்படிப் பார்த்தாலும் ஓர்ஆண்டில் இழப்பு என்பது சுமார் 1030 கோடி மரங்கள், நாம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை இந்த கணக்கு நம்மை உணர்த்தும்.
விதைப்பந்தின் அவசியம்!
மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக இங்கு 405 மரங்கள் உள்ளன. காடுகள் அனைத்துமே பறவைகள், வன விலங்குகள் மற்றும் நீரோட்டத்தாலும் தான் உருவாகி இருக்கிறது. அதேபோல நாம், நாடு முழுவதும் விதைப்பந்துகளை தூவுவதன் மூலம் ஒரு சிறுமாற்றத்தையாவது உருவாக்கமுடியும். விதைப்பந்து என்பது இரண்டுவகை மண் மற்றும் சாண எருகலந்து, அந்த கலவைக்குள் நாட்டு மர விதைகளை வைத்து உருண்டையாக பிடிப்பது தான். விதைப்பந்துகளுக்கு மழைநீர் கிடைத்து வளரும் வரை விதைகளும் பாதுகாப்பாக இருக்கும்.
மனிதம் வாழ!
உலகம் தோன்றிய காலத்திலிருந்து இந்த 25 ஆண்டுகளில்தான் சுற்றுச்சூழல் மாசு உலகை மிகமிக அச்சுறுத்துகின்றது. ஆரோக்யமான சுற்றுச்சூழல் உள்ள பூமியையும், அளவற்ற இயற்கை வளத்தையும் விட்டு செல்வதுதான், நமக்கு பிறகு வரும் சந்ததிக்கு நாம் செய்யும் கைமாறு ஆகும். எனவே எவ்வித சமரசமும் இன்றி அறிவியல், மற்றும் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை சுற்றுசூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் எடுத்து செல்வதுதான் நமது தலையாய கடமையாக முன்வைத்து நாம் அனைவரும் இன்றைய தினத்தில் உறுதி மொழி எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க...
50 % மானியத்தில் சூரிய ஒளி மின் வேலி திட்டம்! விவசாயிகளுக்கு அழைப்பு!
மண் வளம் காக்க விவசாயிகள் இவ்வகை மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வலியுறுத்தல்!
விவசாய கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகள்!
தமிழகத்தில் பருப்பு சாகுபடியை அதிகரிக்க வேளான் துறை திட்டம்!
கேரளாவைப் போல் தமிழகத்திலும் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிப்பு - பலா விவசாயிகள் காத்திருப்பு!
Share your comments