புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் சொல்லப்படும் அரிய வகை ஆயிரம் இதழ் தாமரை கேரளாவில் மலர்ந்துள்ளது. இதன்மூலம் தனிநபரின் முயற்சிக்கு அமோக வெற்றி கிடைத்திருக்கிறது.
இதழ்களை விரித்து மலரும், மலர்களைக் காணும்போது உள்ளத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் மலர்ச்சியும் உருவாகும். அதிலும் தாமரை மலர் என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால்தான் அவை தூய்மையின் அங்கீகாரமாகக் கருதப்படுவதுடன், பூஜைகளிலும் தவறாமல் இடம்பிடிக்கின்றன.
பரிசுத்தத்தன்மை காரணமாகவே இவை தெய்வங்களின் இஷ்ட மலராகவும் திகழ்கின்றன. அதுமட்டுமல்ல, கோயில்களுக்கு கொண்டுசென்றால், கடவுள்களுக்கு மணிமகுடமாக மாறி நம்மை மயக்கும் மாயம் கொண்டவை தாமரைகள்.
பல வண்ணங்கள் (Few colours)
இதில் வெள்ளை, இளம்சிவப்பு உள்ளிட்ட நிறங்களில், தாமரை காணப்பட்டாலும், அதின் இதழ்களின் எண்ணிக்கை கூடக்கூட அதன் அழகும் அதிகரிக்கிறது. அப்படி ராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களில், பல இன்னல்களைத் தாண்டி பர்வத மலைகளில் இருந்து பறித்துவரப்பட்டு, பூஜைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது இந்த ஆயிரம் இதழ் அபூர்வ தாமரை.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த, இந்த அதிசய ஆயிரம் இதழ் தாமரை தற்போது கேரளாவில் மலர்ந்துள்ளது. அங்குள்ள திரிபுனித்துரா பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் அனந்தகிருஷ்ணன். இயற்கையாகவே பூச்செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவருக்கு சீனாவில் இருந்து ஆயிரம் இதழ் தாமரைச் செடி கிடைத்துள்ளது.
அந்நாட்டில் கணேஷ் வசித்தபோது, ஷாங்காய் தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் டெய்க் தியான் என்பவரால் கடந்த 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தாமரை செடி, அந்தப் பேராசியராலேயே, இவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் உள்ள தனது வீட்டிற்கு கணேஷ், இந்த தாமரை செடியைக் கொண்டுவந்து, வேலையாட்கள் மூலம் வளர்க்க ஆரம்பித்தார்.
பின்னர் கொரோனா தொற்று காரணமாக, சுமார் 8 மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பிய கணேஷ் இந்த ஊரடங்கு காலத்தை சாதுர்யமாகப் பயன்படுத்திக்கொண்டு தாமரைச் செடியை பக்குவமாக வளர்க்க ஆரம்பித்தார்.
போதிய ஆரோக்கியத்துடன், நன்கு வளர்ந்து வந்த தாமரைச் செடி மொட்டு விட்டு மலரக் காத்திருந்தது.தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள சமயத்தில், தொடரும் கனமழை காரணமாக, இந்த மொட்டு எப்படி விரியுமோ என்ற அச்சத்தில் காத்திருந்தார் கணேஷ்.
ஏனெனில், குளிர் வாட்டி வதைக்கும் வட மாநிலங்களிலேயே இவ்வகை மலர்கள் மலர வில்லை என்பதால், கேரளாவில் தாமரை மலருமா? என்ற சந்தேகம் வலுத்தது கணேஷிற்கு. இறுதியாக கடந்த ஜூன் 21ம் தேதி ஆயிரம் இதழ்களும் வெற்றிகரமாக விரிந்தன.
அத்தனை இதழ்களும் ஒவ்வொன்றாக விரிய மொத்தம் 19 நாட்களை எடுத்துக்கொண்டது இந்த செடி. இதனால், பெரும் மகிழ்ச்சி அடைந்த கணேஷ், கொரோனா ஊரடங்கு காலம், தம்முடைய வீட்டில் வளர்க்கும் பலவகை தாமரைச் செடிகளைக் கண்ணும், கருத்துமாக பராமரிக்க பெரிதும் உதவியதாக கூறுகிறார் பெருமிதத்துடன்.
ஆக எட்டமுடியாத உயரம் எதுவென்றாலும், ஏன் இமாலய சாதனை என்றாலும், அதற்கென மெனக்கிட்டு, நாள்தோறும் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பது இதன் மூலம் சாத்தியம்.
மேலும் படிக்க...
வாசனை கமழும் வசம்பு- சாகுபடி செய்ய எளிய வழிகள்!!
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை- சாகுபடி செய்வது எப்படி?
Share your comments