1. தோட்டக்கலை

எல்லா காலங்களிலும் லாபம் தரும் தோட்டக்கலைப் பயிர் பற்றி தெரியுமா?

KJ Staff
KJ Staff
green and red chillies

தோட்டக்கலைப் பயிர்களில் அதிக லாபமும், மகசூலும் ஒருங்கே தரக்கூடிய பயிர்களில் மிளகாயும் ஒன்று. பச்சை மிளகாயை நட்ட 75 நாட்களிலும் அல்லது விதைத்த 105 நாட்களிலும், பழுத்த பழங்களை ஒரு மாதத்திற்குப் பின்னும் அறுவடை செய்யலாம். மேலும் 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் இரண்டு பறிப்புகளிலிருந்து பச்சை மிளகாயும், அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.

இரகங்கள் 
மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட ஏற்றது, கோ 1, கோ 2, கோ 3, பிகேஎம் 1.

கடற்கரையோர வடகிழக்கு மாவட்டங்களுக்கு பயிரிட ஏற்றவகை: பிஎல்ஆர் 1.

மேலும் இந்திய தோட்டக்கலைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அர்கா மெகானா, அர்கா ஹரிதா, அர்கா சுவேதா மற்றும் அர்கா லோகித். இதைத் தவிர ஈ சாத்தூர் சம்பா, இராமநாதபுரம் குண்டு, நம்பியூர் குண்டு ஆகிய நாட்டு வகைகளும் அந்தந்த பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன.

மண் மற்றும் தட்பவெப்பநிலை 
நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும். உறைபனி இல்லாத 20-250 சென்டி கிரேட் வரை இருக்கக் கூடிய வெப்பம் உகந்தது. மானாவாரியிலும், இறவையிலும் இதைப் பயிரிடலாம். இப்பயிருக்கு 2 மணி நேரத்திற்கு மேல் நீர் நின்றால் செடியின் வேர்கள் அழுகிவிடும்.

Land Preparation

விதையும் விதைப்பும்

விதைத்தல் மற்றும் நடவு பருவம்

ஜனவரி - பிப்ரவரி
ஜூன் – ஜூலை
செப்டம்பர்

விதை அளவு

ஒரு எக்டருக்கு ஒரு கிலோ (நாற்றங்காலுக்கு) நேரடி விதைப்பிற்கு 2 கிலோ.

விதை நேர்த்தி
விதை மூலம் பரவும் நுனிக்கருகல் நோய், பழம் அழுகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு காப்டான் அல்லது திராம் 2 அல்லது ட்ரைகோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். அசோஸ்பைரில்லம் நுண்ணுயிரியை எக்டருக்கு 2 பொட்டலம் வீதம் விதை நேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையினை 25 விழுக்காடு அளவுக்குக் குறைக்கலாம்.

நாற்றங்கால்
நாற்றங்காலுக்கு மேட்டுப் பாத்திகள் 1 மீட்டர் அகலமும், 3 மீ நீளமும், 15 செ.மீ உயரமும் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு மக்கிய தொழு உரம் 75 கிலோ இடவேண்டும். பாத்திகளில் விதைகளை 2 செ. மீ ஆழத்தில் 5-10 செ. மீ இடைவெளியில் வரிசையில் விதைக்க வேண்டும். விதைத்த பிறகு வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளைப் பாத்திகளின் மேல் பரப்ப வேண்டும். பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்றவும். விதைத்த 10-15 நாட்களில் பாத்திகளில் பரப்பியதை அகற்றிவிட வேண்டும்.

நாற்றங்காலில் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 15 நாட்கள் இடைவெளியில் புளுகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து ஊற்றவேண்டும். நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் பியூராடன் குருணைகளை இடுவது நூற்புழு மற்றும் இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். நடுவதற்கு 40 முதல் 44 நாட்கள் வயதுடைய நாற்றுக்களே ஏற்றவை. நேரடியாக விதைக்கப்பட்ட பாத்திகளில் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு தேவையான பயிர் எண்ணிக்கை இருக்குமாறு கலைத்து இடைநிறைவு செய்வது அவசியம்.

நிலம் தயாரித்தல்
நிலத்தை 4 முறை உழுது, கடைசி உழவின் போது எக்டருக்கு 25 டன் தொழுஎரு அல்லது மக்குகுப்பை இட்டு 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து, பயிருக்கு பயிர் 30 செ.மீ இடைவெளியில் நடவேண்டும். கோ 3 வகைகளுக்கு 30 x 15 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

Application of Manure and Fertilizers

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல்
அடியுரமாக எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மானாவாரி அல்லது இறவைப்பயிர் இரண்டிற்கும் தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவேண்டும். விதைத்த 70, 100 மற்றும் 130வது நாள், நடவுப் பயிரில் நட்ட 30, 60, 90 ஆம் நாள் ஒவ்வொரு முறையும் எக்டருக்கு 30 கிலோ வீதம் இடவேண்டும். உரம் இட்டபின் நீர்பாய்ச்ச வேண்டும்.

உரப்பாசனம்
கலப்பு இரகங்களுக்கு ஊட்டச்சத்தின் அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 120:80:80 கி.கி ஆகும். இதில் 75% மணிச்சத்தை (60 கி.கி மணிச்சத்து 375 கி.கி சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடியுரமாக அளிக்க வேண்டும். மீதமுள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 120:20:80 கி.கி உரப்பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். அளவைப் பிரித்து பயிரின் ஆயுட்காலம் முழுவதும் 3 நாட்களுக்கு ஒரு முறை உரப்பாசனமாக அளிக்க வேண்டும்.

மொத்தம் தேவைப்படும் அளவு ஒரு எக்டருக்கு 19:19:19 க்கு 42 கி.கி, 12:61:0 க்கு 20 கி.கி, 13:0:45க்கு 160 கி.கி மற்றும் யூரியா 193 கி.கி.

நீர் நிர்வாகம்
கோடைக் காலங்களில் 7 நாட்களுக்கு ஒரு முறையும், மழைக்காலங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

களை கட்டுப்பாடு
இறவைப் பயிர் நாற்றுக்கள் நட்ட 3வது நாள் எக்டருக்கு புளுகுளோரலின் ஒரு கிலோ மருந்து என்ற அளவில் 500 லிட்டர் நீரில் கலந்து சீராக கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். நட்ட 45வது நாள் மண் அணைத்து ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.

ஊடுபயிர்
மிளகாயில் 45 செ. மீ என்ற அளவில் வரிசைக்கு வரிசை இடைவெளி விட்டு ஊடுபயிராக கொத்தமல்லி அல்லது சின்ன வெங்காயத்தை இரு வரிசைக்கு மத்தியில் வளர்த்து களைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உபரி வருமானம் பெறலாம்.

பயிர் ஊக்கிகள் தெளித்தல்  
பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும் நட்ட 60 அல்லது விதைத்த 100வது நாளில் ஒரு முறையும் மேலும் 30 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையும் வளர்ச்சி ஊக்கி (என்ஏஏ) 10 மில்லி கிராம் ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். மேலும் டிரையகான்கைடனால் 1.25 மிலி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

Essential organic Supports

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

காய்த் துளைப்பான்
காய் துளைப்பானின் இளம்புழுக்கள் மற்றும் வளர்ந்த பச்சை நிறப் புழுக்கள் இலைகள் மற்றும் காய்களை உண்டு சேதம் விளைவிக்கும். இதனைக் கட்டுப்படுத்த

  • எக்டருக்கு குளோரிபைரிபாஸ் 20 இசி 3 மில்லி ஒருலிட்டர் தண்ணீர் அல்லது குயினால்பாஸ் 25இசி 2.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பரில் நனையும் தூள் மூன்று கிராம் 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • காய்ப்புழு தாக்கிய காய்களை சேகரித்து அழிக்க வேண்டும். மேலும் வளர்ந்த புழுக்களையும் சேகரித்து அழிக்கவேண்டும்.
  • இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.
  • கார்பரில் 1.25 கிலோ, அரிசி தவிடு 12.5 கிலோ, வெல்லம் 12.5 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் இவற்றை கலந்து விஷ உணவு தயாரித்து வைக்கவேண்டும்.

இலைப்பேன்
இவைகள் துளிர் இலைகளின் சாறை உறிஞ்சுவதால் இலைகள் மேல் நோக்கிச் சுருண்டு பழுப்பு நிறமாகிப் பின் உதிர்ந்து விடும். பூ மொட்டுகளும் உதிர்ந்து விடும். இவற்றைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் 30 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.

அசுவினி
இவைகள், இலைகளின் அடிப்பகுதியிலும், தளிர் இலைகளிலும் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் காணப்படும். இதனால் இலைகள் கீழ்நோக்கிக் குவிந்து காணப்படும். மேலும் தேன் போன்ற கழிவுப் பொருட்களை இவைகள் வெளியேற்று வதால், எறும்புகள் அந்த இடங்களில் மொய்த்து ஒளிச்சேர்க்கைக்கு இலைகளின் பரப்பைக் குறைத்து விடும். இவற்றைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் அல்லது பாசலோன் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்

மஞ்சள் சிலந்தி
மஞ்சள் சிலந்தி தாக்கிய செடிகளில் இலைகள் கீழ்நோக்கிச் சுருண்டும், சொரசொரப்பாகவும் இலைக்காம்புகள் நீளமாகவும் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகத்தூள் 6 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது டைக்கோபல் 3 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது எத்தியான் 4 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

Pests and Diseases in Chilli Farming

நோய்கள்

நாற்றழுகல் நோய்
நாற்றங்காலில் நாற்றுக்கள் மடிந்து சொட்டையாக இருக்கும். நாற்றங்காலில் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 15 நாட்கள் இடைவெளியில் புளுகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து ஊற்றவேண்டும். நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் பியூராடன் குருணைகளை இடுவது நூற்புழு மற்றும் இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும்.

இலைப்புள்ளி மற்றும் சாம்பல் நோய் 
இலைப்புள்ளி நோய் தாக்கிய செடிகளின் இலைகளில் செம்பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். அடிச்சாம்பல் நோய் தாக்கிய செடிகளின் இலைகளின் அடிப்பாகத்தில் சாம்பல் நிறப்பூசணம் காணப்படும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 25 கிலோ 500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலையில் தெளிக்கவேண்டும். அடிச்சாம்பல் நோய்க்கு நனையும் கந்தகத்தூள் 2 கிராம் அல்லது கார்பென்டாசிம் 1 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 3 முறை 15 நாட்கள் இடைவெளியில் நோய் கண்டவுடன் தெளிக்கவேண்டும்.

நுனிக்கருகல் மற்றும் பழ அழுகல் நோய்
நுனிக்கருகலும், பழஅழுகலும் ஒரே பூசணத்தால் ஏற்படுகிறது. நுனிக்கருகல் பாதித்த செடிகள் மேலிருந்து கீழகாகக் காய்ந்திருக்கும். பழ அழுகல் நோய் தாக்கிய பழங்களில் செம்பழுப்பு நிறத்தில் வட்டவடிவப் புள்ளிகள் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த, மேங்கோசெப் 1 கிலோ அல்லது தாமிர ஆக்சிகுளோரைடு 1.25 கிலோ இவற்றை 500 லிட்டர் நீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

தேமல் நோய்
பாதிக்கப்பட்ட செடிகள் கரும்பச்சை மற்றும் மஞ்சள் திட்டுக்கள் உள்ள இலைகளுடன் வளர்ச்சி குன்றிக் காணப்படும். இந்நோய் பாதித்த செடிகளில் பூக்களோ, காய்களோ உண்டாகாமல் பெருத்த இழப்பை ஏற்படுத்தும். அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உபயோகப்படுத்தும் மருந்துகளையே இதற்கும் உபயோகித்து நோய் பரப்பும் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம். ஐந்து வரிசை மிளகாய் பயிருக்கு 2 வரிசை சோளம் அல்லது மக்காச்சோளம் பயிரிட்டால் நோய் தாக்குதலைக் குறைக்கலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: Are you looking for Profitable Farming? Here are guidance of Chilly Cultivation and Process

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.