விளை நிலங்கள், வீட்டில் உள்ள காலி இடங்களில், தோட்டங்கள் அமைத்து, பூ, காய், கனி, கீரை வகைகளை பயிரிட்டு வந்தது தான் காலங்காலமாக இருந்து வரும் மரபு. வீட்டின் மொட்டை மாடிகளிலும் கூட, தோட்டங்கள் அமைத்து, வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டனர். இந்த வகையில், இப்போது, லேட்டஸ்ட்டாக வந்துள்ளது, மண் இல்லாத வீட்டு தோட்டங்கள்! 'ஹைட்ரோபோனிக்' (Hydroponics) முறை என அழைக்கப்படும் இவ்வகை விவசாயத்திற்கு, மிக குறுகிய, சிறிய இடம் இருந்தால் போதும். மண் தேவை இல்லை; மிக குறைவான தண்ணீரே போதுமானது. சூரிய ஓளியும் கூட தேவையில்லை. வீட்டு தேவைக்கு மட்டமின்றி, வணிக ரீதியிலும் இது பலன் தருகிறது. குறைந்த முதலீட்டில் மீன் தொட்டி வைக்கும் அளவுள்ள இடத்தில் கூட, தோட்டம் அமைக்கும் இந்த புதிய தொழில்நுட்பம், தற்போது பிரபலமாகி வருகிறது.
ஹைட்ரோபோனிக் தோட்டம்
ஹைட்ரோபோனிக் தோட்டம் அமைக்க ஆலோசனை, பயிற்சி முகாம், அதற்கு தேவையான பொருட்களை சப்ளை செய்து வருகிறார், சென்னையை சேர்ந்த, 'இன்ஜினியரிங்' பட்டதாரி, ராகுல் தோகா, வயது 33. இது குறித்து, அவர் விளக்கியதாவது: சென்னை அண்ணா பல்கலையில், 'இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி' (Industrial Bio-Technology) இளங்கலை படிப்பை முடித்தேன். ஐரோப்பாவில் முதுகலை பட்டம்; தொடர்ந்து MBA., முடித்து, அங்கேயே கார்பரேட் நிறுவனத்தில், 18 மாதங்கள் வேலை. ஆனால், மனதில் நிறைவில்லை. தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையில், 2016ல் சென்னை வந்து, 'கிரீன் ரஷ்' என்ற பெயரில், 'ஆர்கானிக் பிஸினஸை' ஆரம்பித்தேன்.
சர்க்கரை, பயறு வகைகள், காய்கறிகள், அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை, ஆர்டரின் பேரில் ஓட்டல்களுக்கு சப்ளை செய்தேன். ஓட்டல்களில் காய்கறி தேவையும் அதிகம் இருந்தது. காய்கறிகளையும் பயிரிட்டு சப்ளை செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. ஏற்கனவே, ஹைட்ரோபோனிக் தோட்டங்கள் மேல் ஆர்வம் இருந்தது. பரிசோதனை முயற்சியாக என் வீட்டு மாடியில், 150 சதுர அடி இடத்தில், 6,000 செடிகள் பயிரிட்டேன்; நல்ல பலன் கிடைத்தது.
தோட்டம் அமைக்க ஆலோசனை
தனியாக ஒரு இடத்தில், கீரை, செடியில் வளரும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய், கொடியில் வளரும் அவரை, பீன்ஸ், புடலங்காய், தர்ப்பூசணி போன்றவற்றையும், மண்ணுக்கு அடியில் வளரக்கூடிய பீட்ரூட், இஞ்சி, வெங்காயம் போன்றவற்றையும் பயிரிட்டு வியாபாரம் துவங்கினேன்.தொடர்ந்து நல்ல பலன் கிடைத்ததால், 2019ம் ஆண்டு முதல் நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி தோட்டம் (Garden) அமைக்க விரும்புவோருக்கு ஆலோசனை கொடுப்பது, பயிற்சி முகாம்கள் நடத்துவது, அதற்கு தேவையான பொருட்களை சப்ளை செய்வதையும் தொழிலாக செய்து வருகிறேன்.
தோட்டம் அமைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் (Free Guidelines) வழங்குகிறேன். இதுவரை, 500க்கும் மேற்பட்டோர், என்னிடம் ஆலோசனை பெற்று தோட்டங்கள் அமைத்துள்ளனர். அவர்களில் நடிகை சுகாசினியும் ஒருவர். தோட்டங்கள் அமைத்து காய்கறி பயிரிட்டு, சிலர் வீட்டு தேவைகளுக்காகவும், சிலர் வியாபாரமாகவும் செய்து வருகின்றனர்.
சீசனுக்கு ஏற்ற பயிர்களை இதில் பலன் பெறலாம். அந்தந்த பகுதியில் உள்ள தட்பவெப்ப சூழ்நிலையில் எந்த வகையான காய்கறிகள், பழங்கள் பயிரிட முடியுமோ அதை பயிரிடலாம்.இந்த முறையில் விளையும் காய்கறி, பழம், கீரைகளை தரப்பரிசோதனை செய்து பார்த்ததில் மண்ணில் விளையும் அதே தரம், சுவை, கொண்டதாக உள்ளது. இது குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள, acquafarms.org என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க
மரவள்ளி கிழங்கு சாகுபடியில், மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை!
தேங்காய் விலை சரிவால், கொப்பரை உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்!
Share your comments