1. தோட்டக்கலை

வெள்ளரி சாகுபடி

KJ Staff
KJ Staff

பருவத்துக்கு ஏற்ற தோட்டப் பயிரான வெள்ளரியைப் பயிரிட்டால், அடுத்த 50 நாள்களில் அறுவடை செய்து அதிக லாபம் பெற முடியும்.

அனைவரும் விரும்பி உண்ணும் காய்வகையில் ஒன்று வெள்ளரி. உடலுக்குக் குளுமை தரும் காய்களில் ஒன்றாகவும் வெள்ளரி திகழ்கிறது.

இரகங்கள் : கோ.1, ஜப்பானி லாங் கிரின், ஸ்ரோயிட் எய்ட், பாயின்செட்டி.

மண் மற்றும் தட்பவெட்ப நிலை

எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மையுடையது. ஆனால், அதிக மகசூல், சாகுபடி பெற வேண்டும் என்றால் களிமண் கூடிய இருமண் பாங்கான மண் வகைகள் மிகவும் ஏற்றதாகும். வெள்ளரி ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். குறைந்த வெப்ப நிலை கொண்ட பருவ சாகுபடிக்குச் சிறந்ததாகும்.

பருவம்: 

ஜூன்- செப்டம்பர் மாதங்களிலும், டிசம்பர்- மார்ச் மாதங்களிலும் சாகுபடி செய்யலாம்.

 

நிலம் தயாரித்தல்

நிலத்தை 3 அல்லது 4 முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். அதன் பின்பு 1.5 மீட்டர் இடைவெளியில், 45 செ.மீட்டர் ஆழம், அகல, நீளத்தில் குழிகளை வெட்ட வேண்டும். அதில் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தை இட வேண்டும். தொழு உரத்துடன் 100 கிராம் கலப்பு உரமிட்டு மேல் மண் கலந்து நிரப்பி விதையை ஊன்ற வேண்டும்.

விதையளவு மற்றும் நடவு

வெள்ளரி சாகுபடி செய்ய ஒரு ஹெக்டேருக்கு 2.5 கிலோ விதை தேவைப்படும். விதை ஊன்றுவதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பெவிஸ்டின் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு குழிக்கு 4 முதல் 5 விதைகளை ஊன்ற வேண்டும்.

நீர் பாய்ச்சுதல்

விதை ஊன்றியவுடன் குடம் வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு விதை முளைத்து செடி வளர்ந்தவுடன் வாய்க்கால் மூலமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடி நன்றாக வளர்ந்தவுடன் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

பின் செய் நேர்த்தி

விதை முளைத்து வந்தவுடன் குழிக்கு மூன்று செடி விட்டு மற்ற செடிகளைப் பிடுங்கி விட வேண்டும். கொடி வளர்ந்தவுடன் குழியை 30 நாள்கள் இடைவெளியில் களை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.

எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியான 25 பிபிஎம் என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் 2.5 மில்லி கிராம் அளவில் கலந்து இரண்டாம் இலைப் பருவத்தில் முதல் முறையும், அதன் பிறகு 7 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் பெண் பூக்களின் உற்பத்தியை அதிகப்படுத்தலாம். விதை ஊன்றி 30 நாள்கள் கழிந்த நிலையில் 50 கிராம் யூரியாவை மேலுரமாக இடலாம்.

பயிர் பாதுகாப்பு

பூசணி வண்டு, பழ ஈயின் தாக்குதல் இருக்கும். அப்படி இருக்கும் போது பூசணி வண்டைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் கார்பரைல் கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.

பழ ஈயை கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்து ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி லிட்டர் கலந்து தெளிக்கலாம். மேலும் பழ ஈயை கருவாட்டுப் பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை மற்றும் மகசூல்

மேற்கண்ட முறைகளை முழுமையாகக் கையாண்டால் விதை ஊன்றிய 50 நாளில் வெள்ளரிக் காய்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும். அதன் பிறகு 8 முதல் 10 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்வதன் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 8-இல் இருந்து 10 டன் வெள்ளரிக் காய்கள் கிடைக்கும்.

English Summary: Cucumber Cultivation Published on: 10 October 2018, 03:33 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.