உச்சி முதல் பாதம் வரை உடலுக்கு பலவிதமானப் பயன்களை வழங்கும் வெங்காயத்தை பதமாக சாகுபடி செய்வதால், விவசாயிகள் நல்ல லாபத்தைப் பெற முடியும்.
பூர்வீகம்
முதன் முதலில் மத்திய ஆசியாவில் வெங்காயம் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் வெங்காயம் காட்டுப் பயிராக, உலகின் மூலைமுடுக்கெல்லாம் முளைத்துள்ளது.
இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி, மம்மியாக்குவதற்கும் வெங்காயத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் எகிப்தியர்கள்.
சின்ன வெங்காயம் சாகுபடி
சின்னவெங்காயத்தில் கோ 1, 2, 3, 4, 5, எம்டி 1 ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றவையாகக் கருதப்படுகின்றன.
பருவம்
ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வெங்காயத்தை சிறப்பாக பயிரிடலாம்.
மண்
மண்ணின் கார, அமிலத் தன்மை 6-7க்குள் இருக்க வேண்டும். நன்கு தண்ணீர் தேங்காத, செம்மண் நிலம் சாகுபடிக்கு உகந்தது.
நிலம் தயாரித்தல் ( How to prepare land)
நிலத்தை 2 முதல் 3 முறை உழுது, கடைசி உழவின்போது ஒரு எக்டருக்கு 25 டன் மக்கிய தொழு உரமிட வேண்டும். பின்பு 45 செ.மீ இடைவெளியில் பார் பாத்திகள் அமைத்து, நிலத்தை தயார் செய்யவேண்டும்.
விதையளவு
ஒரு ஹெக்டேருக்கு விதை வெங்காயம் 1,500 கிலோ தேவைப்படும்.
விதைத்தல் (Sowing)
10 செ.மீ இடைவெளியில், பார் பாத்திகளின் இருபுறங்களிலும் விதை வெங்காயத்தை ஊன்ற வேண்டியது அவசியம்.
நீர் நிர்வாகம் (Water Management)
விதை வெங்காயம் நட்டபின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 3 நாட்கள் கழித்து உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் 5 முதல் 7 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சினால் போதுமானது.
உரங்கள் (Fertilizers)
நடவுக்கு முன்பு பார் பாத்திகளின் இருபுறமும் அடி உரமாக, எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும், 30 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். பின்னர் நடவு செய்த 30 நாட்கள் கழித்து, 30 கிலோ தழைச் சத்தினை மேலுரமாக இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.
களை நிர்வாகம்
விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேலுரமிட்டு மண் அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும்.
சாறு உறிஞ்சும் பூச்சி
சின்ன வெங்காயத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் பாதிப்பு பரவலாக காணப்படும். இதைக் கட்டுப்படுத்த னோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு சதவீதம் தெளிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோய்
இலைப்புள்ளி நோய் தாக்கினால், இன்டோபில் எம் 45 என்ற மருந்தை 2 சதவீதம், தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
கீழ்த்தண்டு அழுகல் நோய்
கீழ்த்தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி 20 கிராம், 5 லிட்டர் கோமியம், 5 கிலோ சாணம் ஆகியவற்றைக் கலந்து நன்றாக வடிகட்டி, ஒட்டும் திரவத்துடன் வெங்காயத் தாள்கள் நன்கு நனையுமாறு காலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம், 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
இலைக் கருகல் நோய்
இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஆடோமோனாஸ் (0.6 சதம்) 500 கிலோவை, 100 லிட்டர் நீரில் கலந்து, ஒட்டும் திரவத்துடன் தெளிக்க வேண்டும்.
வளர்ச்சிப் பருவத்தில் அமிர்தக் கரைசல், பஞ்சகாவ்யா, தேங்காய் மோர் கரைசலில் ஏதாவது ஒன்றை 20 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் 100 லிட்டருடன், 5 லிட்டர் புளித்த மோரைக் கலந்து தெளித்தால், காய் திரட்சியாக நல்ல நிறத்துடன் இருப்பதோடு, எடையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அறுவடை (Harvesting)
இலைகள் 75 சதவீதம் காய்ந்து விட்டால் பயிர் முதிர்ச்சி அடைந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். அறுவடைக்கு 7 நாட்கள் முன்பு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
பின்னர் கொத்து அல்லது மண் தோண்டி மூலம் தோண்டி வேர், இலைகளை பறித்து சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின் நிழலில் காயவைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
மகசூல் (Yield)
ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் சின்ன வெங்காயம் கிடைக்கும்.
பெரிய வெங்காயம் சாகுபடி
இரகங்கள் (Varieties)
அடர் சிகப்பு ரகங்களில் எண் – 53, அக்ரிபவுன்ட், வெளிர் சிகப்பு ரகங்களில் பூசா சிகப்பு, என்-2-4-1, அக்ரிபவுன்ட் ஆகிய இரகங்கள் உள்ளன.
பருவம் (Seasons)
தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் மே – ஜூன் (கரீப் பருவம்) மாதங்களிலும், ஆகஸ்ட் – செப்டம்பர் (ரபி பருவம்) மாதங்களிலும் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் குளிர் கால வெங்காய சாகுபடியில் தான் சிறந்த மகசூல் கிடைக்கும்.
மண் ( Sand)
இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள சமமான, வளம் நிறைந்த மண் தேவைப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை 7 முதல் 7.6 வரை இருக்க வேண்டும். களிமண் நிலங்களைத் தவிர்ப்பதே சிறந்தது.
விதையளவு (Seeds)
ஹெக்டேருக்கு 5 முதல் 6 கிலோ விதைகள் தேவைப்படும்.
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 400 கிராம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி, நாற்றங்காலில் விதைப்பது அவசியம்.
நாற்றங்கால் தயாரித்தல்
ஒரு ஹெக்டேருக்கு நடவு செய்ய சுமார் 5 செண்ட் நாற்றங்கால் இடவசதி தேவைப்படும். நிலத்தை நன்கு கொத்தி, 1 சதுர மீட்டருக்கு 1 கிலோ என்ற அளவில் விஏஎம் என்ற பூசணக் கலவையை இடவேண்டும். நாற்றங்காலில் விதைகளை அடர்த்தியாக விதைக்காமல், பரவலாக விதைக்கவேண்டும். அப்போது தான் நாற்றுகள், செழுமையாக 40-45 நாட்களிலிலேயே தயாராகிவிடும்.
நிலம் தயாரித்தல்
சாகுபடி செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். 45 செ.மீ மற்றும் 10 செ.மீ இடைவெளியில் 45 நாள் வயதுடைய நாற்றுகளை நட்டினால் நல்ல பலனை அடையலாம்.
நீர் நிர்வாகம் (Water Management)
வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். நீருடன் பஞ்சகாவ்யா கலந்தும் கொடுக்கலாம். இதனால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
உரங்கள் (Fertilizers)
அடியுரமாக கடைசி உழவில் எக்டருக்கு 10 டன் தொழு உரம், 20 கிலோ தழைச்சத்து தரவல்ல 45 கிலோ யூரியா, 60 கிலோ மணிச்சத்து தரவல்ல 375 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 50 கிலோ பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
களை நிர்வாகம்
விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேலுரமிட்டு மண் அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் தேவைக்கு ஏற்ப களை எடுத்து நிலத்தை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.
தாக்கும் நோய்கள்
இலைப் புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு மாங்கோசெப் இரண்டு கிராம் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு இரண்டரை கிராம் இவற்றில் ஒன்றை ஒட்டும் திரவமான டீப்பாலுடன், ஒரு லிட்டர் நீருக்கு அரை மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
வெங்காயம் நடவு செய்த 140 முதல் 150 நாட்களில் அறுவடை செய்யலாம்.
மகசூல்
ஹெக்டேருக்கு 6 முதல் 7 டன் மகசூல் கிடைக்கும்.
மருத்துவப்பயன்கள்
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
நான்கு அல்லது ஜந்து சின்னவெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
வெங்காயச் சாறு வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி படிப்படியாகக் குணமாகும்.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மற்றும் இழந்த சக்தியை மீட்டு தரும் தன்மை கொண்டது.
வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
மேலும் படிக்க...
வாசனை கமழும் வசம்பு- சாகுபடி செய்ய எளிய வழிகள்!!
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை- சாகுபடி செய்வது எப்படி?
Share your comments