ஜப்பானின் மியாசாகி நகரில் வளரும் மாம்பழங்கள், பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இவை நம்மூர் மாம்பழம் போல மஞ்சள் நிறத்தில் இல்லாமல், ஊதா மற்றும் சிகப்பு நிறத்தில் இருக்கிறது. ஏலம் மூலம் இம்மாம்பழங்களை வாங்குகின்றனர். இம்மாம்பழத்தில் ஒரு கிலோவை வாங்க நீங்கள் ரூ.2 லட்சத்துக்கு மேல் தர வேண்டும்.
மியாசாகி மாம்பழம் (Miyazaki Mango)
இவை முதலில் ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் உள்ள மியாசாகி நகரில் வளர்க்கப்பட்டது. அதனால் நம்மூர் சேலத்து மாம்பழம் போல இம்மாம்பழங்கள் மியாசாகி மாம்பழங்கள் என ஊரை வைத்து பெயர் பெற்றது. இந்த வகை மாம்பழம் பொதுவாக 350 கிராம் எடையுடையது. வழக்கமான மாம்பழங்களை விட 15 சதவீதத்திற்கு மேல் இனிப்பு சுவை கொண்டது. மேலும் இது வித்தியாசமான தோற்றம் மற்றும் நிறத்தால் பிரபலமானது. இந்த வகையின் தரமான மாம்பழத்தை ஜப்பானில் சூரியனின் முட்டை என்கின்றனர்.
மியாசாகியில் வெப்பமான வானிலை, நீண்ட நேர சூரிய ஒளி மற்றும் ஏராளமான மழை ஆகியவை விவசாயிகளுக்கு மா பயிரிடுவதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 80களின் முற்பகுதியில் மா விவசாயம் அங்கு தொடங்கியிருக்கிறது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இதன் அறுவடைக்காலம். இந்த மாம்பழங்களில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது, பீட்டா கரோட்டின் மற்றும் போலிக் அமிலம் உள்ளது. சோர்வான கண்களுக்கு இவை சிறந்தவை என்கின்றனர். ஊதா நிறத்தில் வளர ஆரம்பிக்கும் இம்மாம்பழத்தின் நிறம், இறுதியில் ஆப்பிள் போன்று சிகப்பு நிறமாகிவிடுகிறது.
அதிக விலை (High Price)
இந்த வகை மாம்பழங்கள் அரிதானது. இதனை பசுமைக் குடில் போட்டு தான் பலரும் வளர்க்கின்றனர். ஒவ்வொரு மாம்பழத்திற்கும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறை தான் இந்த விலைக்கு காரணம். அதன் பிஞ்சிலிருந்தே தனி கவனம் செலுத்துகின்றனர். அவற்றின் மீது சீராக சூரிய ஒளி படவும், புவி ஈர்ப்பு விசையால் கீழே விழாமல் இருக்கவும், நிற வேறுபாடின்றி இருக்கவும் அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு தோப்பிலும் 500 அளவிலேயே பழங்கள் இருக்கும்.
அதன் எடை, நிறம், இனிப்பு, வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் அதனை ஏஏ, ஏ, பி என தரப்படுத்துகின்றனர். அதனை மியாசாகி மத்திய மொத்தவிலை மார்க்கெட்டில் ஏலம் விடுகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட வரத்து என்பதால் அங்கு இம்முறை கிலோ ரூ.2.7 லட்சம் விலை போனது.
இம்மாம்பழங்களை தற்போது இந்தியா, வங்கதேசத்திலும் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் மியாசாகியில் அறுவடையாகும் மாம்பழங்கள் மட்டுமே கிலோ லட்சக்கணக்கில் விலை வைத்து விற்கப்படுகிறது.
மேலும் படிக்க
மதுரைப் பெண்ணின் இயற்கை விவசாயம்: உழவன் அங்காடியில் விற்பனை!
இரசாயன ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்படும் வாழைப் பழங்கள்: உடலுக்கு கேடு!
Share your comments